
ஒசூரில் செயல்படும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் 4.4.2017 அன்று மாலை 5 மணியளவில் ஒசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தோழர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பு.ஜ.தொ.மு.வின் மாநில துணைத் தலைவர் தோழர்.பரசுராமன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் செந்தில் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
தோழர் செந்தில் தனது கண்டன உரையில், ஓசூரில் செயல்பட்டுவரும் கமாஸ் வெக்ட்ரா ஆலை மாருதி சுசுகி ஆலையைப் போலவே ஒரு பன்னாட்டு நிறுவனம். அங்கே மாருதி ஆலை நிர்வாகம் தொழிலாளர் மீது நடத்துகின்ற தாக்குதல் அத்தனையும் இங்கேயும் தொழிலாளர் மீது ஈவிரக்கமற்றமுறையில் தொடுத்து வருகிறது என்பதையும் அதற்கு தொழிலாளர் நலத்துறை நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்பட்டுவருவதையும் ஆதாரங்களுடன் முன்வைத்து அம்பலப்படுத்தினார். அந்தவகையில் மாருதி தொழிலாளர் போராட்டம் நாம் சந்திக்கின்ற பிரச்சினையை முன்வைத்து நடக்கின்ற போராட்டம் இதனை ஆதரிப்பது என்பது நமது உயிராதாரமான கடமை என்பதை வலியுறுத்திப் பேசினார்.
அடுத்ததாக, பேசிய தோழர் பரசுராமன் தனது உரையில், உழைப்புக்கேற்ற ஊதியம், சட்டப்படியான ஒய்வு, தொழிற்சங்க உரிமை இவைகள் பெறவே மாருதி தொழிலாளர்கள் தங்கள் ஆலையில் சங்கமாக சேர்ந்தார்கள். மாருதி நிர்வாகமோ இதனை அங்கீகரிக்க மறுத்து சங்கத்தை ஒழித்துக்கட்ட சதி செய்தது. அதன் விளைவாக தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளின்மீது பொய்யாக அவர்களாலே திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு வன்முறை நிகழ்வை காரணமாக வைத்து அவர்கள்மீது கொலைப்பழி போடப்பட்டது. தற்போது ஒரு தொழிலாளி உட்பட 12 சங்க நிர்வாகிகளுக்கு ஆயுள் தண்டனை, 19 பேருக்கு சிறைத் தண்டனை விதித்திருக்கிறது, மாருதி நிர்வாகத்தின் அடியாளாக செயல்படும் மாவட்ட அமர்வு நீதிமன்றம்.
இத்தீர்ப்பின் நோக்கம் தொழிலாளர் வர்க்கம் சங்கமாய் திரளக் கூடாது என ஆளும் வர்க்கம் கருதுகிறது. இந்த அரசுக்கட்டமைப்பு முழுவதும் அதற்காக செயல்பட்டுவருகிறது என்பதையும் பார்க்கமுடிகிறது. ஆனால் தீவிரமாகும் கார்ப்பரேட் கொள்ளைகள் உழைக்கும் மக்களை போராட்ட பாதைக்கு தள்ளுகிறது. இதற்காக ஆர்.எஸ்.எஸ் மோடியின் சட்ட திருத்தங்களும் புதிய திட்டங்களும் தொழிலாளர்கள் உட்பட அனைத்து உழைக்கும் மக்களையும் கடுமையான பாதிப்புக்குள்ளாக்குகிறது. அரசும் அதன் போலீசு, நீதிமன்றம் போன்ற அதன் உறுப்பும் மக்களுக்கானதல்ல என்பதை மாருதி தொழிலாளர்கள் தங்களது வழக்கின் மூலம் நிரூபிக்கும் வகையில் சாட்சியமாகி நிற்கிறார்கள். நாம் மாருதி தொழிலாளர்களின் விடுதலைக்காக வர்க்கமாய் திரண்டு போராடுவோம் என்று அறைகூவி அழைத்து பேசினார். இறுதியாக தோழர் முருகேசன் நன்றியுரையாற்றினார்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கிருஷ்ணகிரி – தருமபுரி – சேலம் மாவட்டங்கள்.
தொடர்புக்கு: 9788011784