Tuesday, April 22, 2025
முகப்புகளச்செய்திகள்போராடும் உலகம்கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் போராடியது குற்றமா ?

கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் போராடியது குற்றமா ?

-

டாஸ்மாக்கை எதிர்த்து கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டம்

கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் சமூக பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கும் போராட்டப் பாரம்பரியம் கொண்டவர்கள். வழக்குரைஞர்களுக்கு எதிரான சட்டத் திருத்தத்திற்கு எதிராகவும் விவசாயிகள் உள்ளிட்டு பல்வேறு மக்கள் பிரச்சினைகளுக்காகவும் போராடி இருக்கிறார்கள்.

மற்றவர்களுக்காக போராடியவர்கள் தங்களது உரிமைகளுக்காக கடந்த 18-08-2016 அன்று அரசு சட்டக் கல்லூரியின் விடுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும், கல்லூரி வளாகத்திலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரியும் மாணவர்கள் போராடினார்கள். அந்த நாள் முதலாகவே போராட்டத்தை முன் நின்று நடத்திய மாணவர்களை எப்படி பழி தீர்ப்பது என்று காத்துக் கொண்டு இருந்தது நிர்வாகம்.

இந்நிலையில் விடுதியில் உள்ள மாணவர்கள் இடையில் ஏற்பட்ட சிறு சச்சரவை விடுதி துணை காப்பாளர் ராஜாவின் துணையோடு மாணவர்கள் இடையே மோதலையும் பிளவையும் தூண்டி விட்டு ஒரு தரப்பு மாணவர்களின் வார்த்தைகளை மட்டும் வைத்து அதை புகார் கொடுத்தது போல் திரித்து அந்த பொய் புகாரின் மீது நடவடிக்கை போல 6 மாணவர்களை இடைநீக்கம் செய்தது. அதோடு நில்லாமல் அந்த புகாரின் மீது விசாரணை என்ற பெயரில் தனக்கு தேவையான பொய் சாட்சியங்களை உருவாக்கி முடித்ததும் புகார் கூறப்பட்ட 6 மாணவர்கள் உடன் இன்னும் 2 மாணவர்களை சேர்த்து 8 பேருக்கு தண்டனை, இடமாற்றம் போட்டுள்ளது நிர்வாகம். புகார் கூறப்பட்டதிலேயே ஒருவர் இவ்விவகாரத்திற்கு முற்றிலும் தொடர்பற்றவர். புதிதாக சேர்க்கப்பட்ட இரு மாணவர்கள் இடையே ஏற்பட்ட சச்சரவில் எந்த பங்கும் இல்லாதவர்கள். இது போதாது என்று விடுதியில் இருக்கும் இன்னும் ஐந்து மாணவர்களுக்கு அபராதம் விதித்துள்ளது நிர்வாகம்.

இப்படி மாணவர்களுக்கு போராட்ட குணமே கூடாது என்றும் அதை மழுங்கடிக்க அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நடவடிக்கை என்ற பெயரில் கொடுரமாக நடந்து கொண்டும் இருக்கிறது நிர்வாகம். அடிப்படை உரிமைகளுக்காக மாணவர்கள் போராடாமல் இருந்திருந்தால் இந்த தண்டனை விவகாரமே நடந்திருக்காது.

நீதித் துறையே பாசிச மயமாகி வழக்கறிஞர்களையும் நீதிபதிகளின் அடிமைகளாக வளர்த்தெடுக்க வேண்டிய தேவை நீதித்துறையின் ஒவ்வொரு அங்கக்திற்கும் ஏற்பட்டு இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக சட்டக்கல்லூரியிலும் மாணவர்களுக்கு இருக்கும் போராட்டப் பண்பினை அழித்து விட திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன.

கோவை அரசு சட்டக்கல்லூரியின் நிர்வாகத்தின் சூழ்ச்சிகரமான அடக்குமுறையை எதிர்த்து பாதிப்புக்குள்ளான மாணவர்களின் போராட்டம் கடந்த 05.04.2017 முதல் நடந்து வருகிறது. அதோடு கல்லூரியின் பொறுப்பு முதல்வர் கோபால கிருஷ்ணனுக்கும் பதவியை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நெருக்கடி உள்ளது. எனவே தனது முடிவை மறு பரிசீலிக்க நிர்வாகம் பிடிவாதமாக மறுத்து வருகிறது.

போராட்டத்தை ஏற்றுக் கொள்ளாத நிர்வாகம் மாணவர்களிடையே பொய் புனைசுருட்டுகளை கொண்ட எதிர்ப்பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். மாணவர்களும் போராட்டத்தை தொடர்கிறார்கள்.

பின்வரும் நிபந்தனைகளை முன் வைத்து மாணவர்கள் போராடுகிறார்கள்.

  • முறைகேடாக விதிக்கப்பட்ட தண்டனை இடமாற்றத்தை ரத்துச் செய்
  • வஞ்சககாரர் பொறுப்பு முதல்வர் கோபால கிருஷ்ணனையும் விடுதி துணைக் காப்பாளரையும் இட மாற்றம் செய்.

இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக அனைத்து சட்ட கல்லூரி மாணவர்களும் போராடும் மாணவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதே தமிழக வழக்குரைஞர்கள் சமூக அக்கறை கொண்ட நீண்ட பாரம்பரியத்தை காக்கும்.

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
கோவை