
மம்தா பானர்ஜி வங்கத்தின் ஜெயலலிதா. அவரை எதிர்த்து கார்ட்டூன் வரைந்தவர்கள், பகிர்ந்தவர்கள் கூட கைது செய்யப்பட்டிருக்கின்றனர். வங்கத்தில் திரிணாமூல் காங்கிரசு கட்சியை சகல மட்டங்களிலும் உறுதியாக நிறுத்தியிருக்கின்ற மம்தா பானர்ஜி, மோடியின் வருகைக்கு பிறகு பா.ஜ.கவை தீவிரமாக எதிர்த்து வருகின்றார்.
இருப்பினும் இத்தகைய ‘இரும்பு’ பெண்மணியைக் கண்டு மற்றவர்கள் அஞ்சினாலும் பார்ப்பன இந்துமதவெறியர்கள் அஞ்சுவதில்லை. கருணாநிதி, பினரயி விஜயன் தலையை வெட்டி வருவோருக்கு பரிசு என்று அறிவித்த ஆர்.எஸ்.எஸ் கூட்டம் தற்போது மம்தா பானர்ஜியின் தலைக்கும் பரிசு அறிவித்து விட்டது.
மேற்கு வங்கத்தின் பிர்ப்ஹம் மாவட்டத்தில் நடந்த ஹனுமன் ஜெயந்தி ஊர்வலம் வன்முறையில் முடிந்து போலீசு தடியடி வரை போயிருக்கிறது. அதனால் கொதித்தெழுந்த யோகேஷ் வர்ஷினி எனும் பா.ஜ.கவின் இளைஞர் அணி தலைவர், முதலமைச்சர் மம்தாவின் தலையை வெட்டி வருவோருக்கு 11 இலட்சம் ரூபாயை பரிசுப் பணமாக அறிவித்திருக்கிறார்.
“சரஸ்வதி பூஜைக்கு ஒருபோதும் அனுமதிக்காத மம்தா பானர்ஜி அதுபோல ராமநவமி, ஹனுமன் ஜெயந்தி ஊர்வலங்களையும் அனுமதிப்பதில்லை. மீறினால் மக்களுக்கு கடும் தடியடி உண்டு. இப்தார் விருந்துகளை ஏற்பாடு செய்யும் அவர் எப்போதும் முசுலீம்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்” என்று அவர் இந்து முன்னணி இராம கோபாலன் பாணியில் பொங்கியிருக்கிறார். இதை செய்தி நிறுவனமான ஏஎன்ஐ வீடியோவாக வெளியிட்டிருக்கிறது.

இது குறித்து பாஜக தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா விளக்கமளித்த போது மம்தா பானர்ஜி இப்படி சிறுபான்மை மக்களுக்கு ஆதவாக அரசியல் செய்தாலும் இத்தகைய வன்முறை பேச்சுக்களை தான் ஏற்கவில்லை என்று கூறியிருக்கிறார். அப்போதும் கூட அவர் தனது இளைய பங்காளியை கண்டிக்கவில்லை. காரணம் ரவுடி சாமியார் யோகி ஆதித்யநாத் உபி முதலமைச்சராக வந்த பிறகு இப்படி அடாவடியாக பேசுவோரே கட்சியிலும், இந்துக்களிடமும் பெயர் எடுத்து முன்னேற முடியும் என்று பா.ஜ.க பண்டாரங்களிடம் கடும் போட்டி இருக்கிறது. இங்கேயும் எச்ச ராஜா அப்படி ஊளையிடுவது கூட இத்தகைய கனவுகளை எதிர்பார்த்துத்தான்.
பிர்ப்ஹம் மாவட்டத்தில் இந்துமதவெறியர்களின் ஊர்வலத்திற்கு போலீசு அனுமதி கொடுக்கவில்லை. அதை மீறி இவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் போட்டு, காவிக் கொடியுடன் ஊர்வலம் சென்றிருக்கிறார்கள். ஊர்வல ஏற்பாட்டளர்கள் தாங்கள் ஆயுதம் ஏதும் ஊர்வலத்தில் கொண்டு செல்லவில்லை என்று போலீசிடம் விளக்கமளித்தார்களாம். இதிலிருந்தே இவர்களது வன்முறை திட்டம் தெரிகிறது. ஏனெனில் இதற்கு முன்னர் நடந்த ராம நவமி ஊர்வலத்தில் இக்கூட்டம் வாள்களையும் மற்ற ஆயுதங்களையும் பகிரங்கமாக கொண்டு சென்று பீற்றியிருக்கிறது. அப்போது பா.ஜ.கவின் மேற்கு வங்கத் தலைவரே கலந்து கொண்டிருக்கிறார். அதன்படி பார்த்தால் போலீசின் ஊர்வல அனுமதி மறுப்பு மிகவும் நியாயமானது.
மம்தா பானர்ஜி போன்ற தீவிரமான மோடி எதிர்ப்பு தலைவர்கள் ஆளும் மாநிலத்திலேயே இப்படி ஒரு காக்கி டவுசர் தலைவெட்டி பரிசு அளிக்க முடியுமென்றால் பா.ஜ.க மாநிலங்களில் முசுலீம்களுக்கும், தலித்துக்களுக்கும், மற்ற சிறுபான்மை மக்களுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் உள்ள கதி என்ன?
ரவுடித்தனம் செய்யும் காவி பயங்கரவாதிகளை எதிர்த்து தெருவிலும், ஊரிலும் களமிறங்க வேண்டும். சட்டமன்றம் பாராளுமன்றத்தில் இவர்களை முறியடித்து விடலாம் என்று மனப்பால் குடிப்போரால் இனி பலனேதுமில்லை.
#WATCH Aligarh:BJP Youth wing leader Yogesh Varshney offers Rs 11 lakhs for WB CM's head after a lathicharge in Birbhum on Hanuman Jayanti pic.twitter.com/JR77MgzptV
— ANI UP (@ANINewsUP) April 12, 2017
மேலும் படிக்க,
Watch: BJP youth wing leader offers Rs 11 lakh for Mamata Banerjee’s head