Tuesday, April 22, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்போராடும் மக்களை மூர்க்கமாக தாக்கும் அரசு !

போராடும் மக்களை மூர்க்கமாக தாக்கும் அரசு !

-

PP Logo12-04-2017

பத்திரிகைச் செய்தி

 ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து – வருமானவரி ரெய்டுகள்,
போராடும் விவசாயிகள் மீதும், டாஸ்மாக்கை எதிர்த்தும்,
குடிநீர் கேட்டும் போராடும் பெண்கள் மீதும், போலீசின் காட்டுமிராண்டித் தாக்குதல்!
மோடி அரசும், எடப்பாடி பழனிச்சாமி அரசும், பதவியில் நீடிக்க
எந்த தார்மீக உரிமையும் அருகதையும் கிடையாது.

நியாயத்திற்காக போராடும் மக்களை மூர்க்கமாகத் தாக்குவது
அரசியல் அதிகார கிரிமினல் குற்றவாளிகளிடம் மென்மையாக அணுகுவது. .
இதுதான் அரசு, போலீசு, நீதித்துறை, ஊடகத்தாரின் நிலை. இனி நாம் என்ன செய்வது?

அன்புடையீர் வணக்கம் !

ஆர்.கே. நகர் தேர்தலில் பணம் பட்டுவாடாவை தடுக்க முயன்றதாகவும், அதையும் மீறி நடந்து விட்டதாகவும், அதனாலேயே தேர்தலை  ரத்து  செய்ததாகவும் தேர்தல் ஆணையமும் மத்திய அரசும் அறிவித்து நாடகம் ஆடுகின்றன. இது ஒரு வகையில் அவர்களின் கையாலாகாத்தனத்தை ஒப்புக்கொள்வதாகவே இருக்கிறது.

அதிக எண்ணிக்கையில் மத்திய தேர்தல் பார்வையாளர்கள், மத்திய காவல் படைகள், பறக்கும் படைகள், காவல் துறை அதிகாரிகள் இடமாற்றம் என அதி தீவிர நடவடிக்கை, கண்காணிப்பு என்பது வெறும் பாவ்லாதான். ஓட்டுகட்சி அரசியல் குற்றவாளிகள் தாங்கள் பிடிபட்டு விடுவோம், சிக்கலில் மாட்டிக்கொள்வோம் என்று அஞ்சவில்லை. மாறாக நெஞ்சை நிமிர்த்தி கொண்டு பேட்டி கொடுக்கிறார்கள். கண்டெய்னர் பணத்தை காப்பாற்றி கொடுத்த தேர்தல் ஆணையமும், மத்திய அரசும்  இன்றைக்கு உத்தமர் வேடம் போடுவதை எப்படி நம்புவது?

வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ரெய்டுகள் என்பது உருட்டி மிரட்டி அரசியல் நோக்கங்களை நிறைவேற்றவே பயன்படுத்தப்படுகின்றன. நேற்று ராம்மோகன் ராவ், கரூர் அன்புநாதன், நத்தம் விசுவநாதன், சைதை துரைசாமி, இன்று விஜயபாஸ்கர், துணை வேந்தர் கீதாலட்சுமி மீதான ரெய்டுகள் எல்லாம் காதும் காதும் வைத்தாற்போல் எந்த விவரங்களையும் வெளியிடாமல் கமுக்கமாக நடக்கின்றன. இறுதியில் வருமானத்திற்கு வரி கட்டுங்கள் என பேரம் பேசி முடிக்கப்படுகிறது.

விதிமுறைகள் தெரிந்தே மீறப்பட்டுதான், தொடர்ந்து தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.  டாஸ்மாக் வேண்டாம் என போராடும் மக்கள் மீது தடியடி, தேசத்துரோக வழக்கு, சிறை என செயல்படும் அரசும், போலீசும், தேர்தலை சீர்குலைக்கும் அரசியல் குற்றவாளிகளுடன் கூட்டு சேர்ந்துகொள்கிறார்கள். தேர்தல் நடப்புகளும், இன்று தமிழகத்தில் நடக்கும் ஏராளமான போராட்டங்களும்  இதையே காட்டுகின்றன. மெரினா முதல் டெல்லி விவசாயிகள் போராட்டம் வரை நெடுகக் காண்கிறோம். பணப்பட்டுவாடா போன்ற கிரிமினல் நடவடிக்கை, ஜனநாயகத்துக்கே அச்சுறுத்தல் என்றால் அந்த குற்றவாளிகள் மீது தேசத்துரோக குற்றம்சாட்டி உள்ளே தள்ளுவதற்கு பதில், வருமான வரித்துறை அமலாக்கத்துறை என்ற அட்டைக் கத்தியைக்  கொண்டு ரெய்டுகள் நடத்தி சவடால் விடுவது ஏன்?

செத்துக்கொண்டிருக்கும் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு  தீர்வு காணாமல் சூழ்ச்சி, இழுத்தடிப்பு, அவதூறு ஆகியவற்றால் போராட்டத்தை அரசு ஒடுக்குகிறது. ஆங்கிலேயர் காலத்து போலீசைப் போல பிரச்சனைகளை பேசுவதற்கும், பிரச்சாரம் செய்வதற்கும், போராடுவதற்கும் கூட  உரிமை இல்லை என தடுக்கிறது. மக்களை உரிமைகளற்ற அடிமைகளாக  கருதுகிறது போலீசு. விவசாயிகளுக்கு ஆதரவாக போராட திரளும் நான்கைந்து மாணவர்களும் இளைஞர்களும் கூட வேட்டையாடப்படுகிறார்கள்.

தேர்தல்களில் பணப்பட்டுவாடா, ஊழல் முறைகேடுகளுக்கு தண்டனையை அதிகரிப்பது, சட்டத்தை கடுமையாக்குவது போன்ற தீர்வுகளை முன்வைக்கின்றனர். வாக்காளர்கள் தேர்தல் நடக்கும்போது மட்டும்தான் பணம் வாங்குகிறார்கள். ஆனால் தேர்தல் நடத்தும் அதிகார வர்க்கம்  ஆண்டு முழுவதும் ஊழல், முறைகேடு. கிரிமினல் குற்றங்களில் மூழ்கி கிடக்கிறது.

சாதி, மதம், பணம், பரிசுப்பொருள், ஊழல் முறைகேடு இல்லாமல் ஒரு நாளும் தேர்தலை நடத்த  முடியாது என்பது மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும், தேர்தலில் பங்கேற்கும் கட்சிகளுக்கும் நன்கு தெரியும். தேர்தல்கள் மூலம் ஆளை மாற்றுவதால் எந்த தீர்வும் ஏற்படாது. அவர்களால் இந்த ஊழல் அரசு கட்டமைப்பை வைத்து நியாயமான தேர்தலை ஒருக்காலும்  நடத்த முடியாது.

போராடும் அய்யாக்கண்ணு சொல்வதைப் போல மாத சம்பளத்திலும், லஞ்ச ஊழலிலும் ஊறித் திளைக்கும் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், விவசாயிகளின் கஷ்ட நஷ்டங்கள் புரியாது. ஒரு மாதமாக பல்வேறு போராட்டங்களை டெல்லியில் நடத்தி துன்புறும் தமிழக விவசாயிகள் போராட்டத்திற்கு தீர்வு காண முடியாத மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை பாதுகாக்கும் என எப்படி நம்புவது?.

டாஸ்மாக்கை மூடு என போராடும் சாதாரண மக்கள் மீது காட்டுமிராண்டித் தாக்குதல் நடத்தும் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு பதவியில் நீடிக்க எந்த தார்மீக உரிமையும் அருகதையும் கிடையாது.

பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்பவர்கள் :

  1. வழக்கறிஞர் சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.
  2. தோழர்..கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர்,பு.மா.இ.மு.
  3. தோழர்.வெற்றிவேல் செழியன், மண்டல ஒருங்கிணைப்பாளர். மக்கள் அதிகாரம்.
  4. தோழர்.கற்பக விநாயகம், பு.ஜ.தொ.மு. ஐ.டி.ஊழியர்கள் பிரிவு.
  5. தோழர். அமிர்தா, மக்கள் அதிகாரம், சென்னை.

தோழமையுடன்
வழக்குரைஞர். சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்.