Wednesday, April 16, 2025
முகப்புசமூகம்நூல் அறிமுகம்இந்து மதம், முசுலீம்கள் குறித்து அம்பேத்கர் எழுதிய நூல்கள்

இந்து மதம், முசுலீம்கள் குறித்து அம்பேத்கர் எழுதிய நூல்கள்

-

ஏப்ரல் – 14 டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளில்
அறிய வேண்டிய சிந்தனை…!

கையில் கிடைத்ததையெல்லாம் காவிமயமாக்கும் வெறிகொண்டு அலைகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல். மைல்  கல்லையே மஞ்சள் பூசி ‘மைல் சாமியாக்கும்’ அவாளின் பித்தலாட்டங்கள் முன்னேறி முன்னேறி பல தேசிய இனங்கள், பல பண்பாட்டு மரபுகளைக் ‍கொண்ட நாட்டை இந்து – இந்தி – இந்தியா எனும் ஒற்றை ராஜ்ஜியத்தின் கீழ் ஏகாதிபத்திய உலகமயத்திற்கு படையலாக்கப்  பார்க்கிறது.  காலமெல்லாம் இந்து மதத்தையும் அதன் சாதியக் கொடூரத்தையும் எதிர்த்து அம்பலப்படுத்தியவர் அம்பேத்கர்.

இந்து மதம் ஒரு மதமே அல்ல, அது ஒரு அடக்குமுறைக் கருவி, அழிவைத்தரும் தொற்றுநோய் இதை ஒழிக்காமல் இந்தியாவிற்கு விடிவில்லை, ஜனநாயகம் இல்லை எனப் போராடியவர் அவர்.  அத்தகைய அம்பேத்காரையே காவிமயமாக்கும் முயற்சியில் பார்ப்பன – பா.ஜ.க. பரிவாரங்கள் வேலை செய்து வருகின்றன.   மனித விரோத, மக்கள் விரோத இந்துத்துவ பாசிசத்தை எதிர்கொள்ள இந்நாளில் அம்பேத்கரின் சிந்தனைகளை அறிவதும் உயர்த்திப் பிடிப்பதும் தேவையாக இருக்கிறது. இந்து வெறிக்கு தொடர்ந்து பதிலடிக்‍கொடுத்த அம்‍பேத்கரின் கருத்துக்களை, அவற்றில் ஒரு சிலவற்றை அறிமுகம் செய்தும்கொள்வது இன்றைய நாளை பயனுள்ளதாக்கும்.

1. இந்துமதத் தத்துவம்

விரும்பாதவரையும் இந்து எனும் வேலிக்குள் அடைத்து வைத்து, சொந்த மதத்துக்காரனையே சூத்திரன், நீ கேவலமான பிறவி கீழ்சாதி, தொடாதே, பார்க்காதே, படிக்காதே என இழிவுபடுத்தும் ஒரே மதம், பார்ப்பன இந்து மதம் இந்துவாக தங்களைக் கருதிக் கொள்ளும் ஒவ்‍வொருவரும் இந்த மதத்தில் தங்களது நிலை என்ன? இந்த மதத்தின் தத்துவம்தான் என்ன? என்பதை அறிந்து கொள்ள வேண்டியது  அவசியம். வரலாறு தெரிந்தவரால்தான் வரலாறு படைக்க முடியும் என்ற டாக்டர் அம்பேத்கரின் ஆழ்ந்த உழைப்பில் படைக்கப்பட்டது தான் “இந்துமதத் தத்துவம்” மக்களை நல்வழிப்படுத்துவதற்கானது எனக் கூறிக்ககொள்ளும் மதத்திற்கான எந்த யோக்கியதையும்

இன்றி நால்வகை வருணம் நாலாயிரம் சாதி என மக்களை பிளவு படுத்தி உழைக்கும் மக்களை இழிவுபடுத்துவதுதான் இந்து மதத்தத்துவம் என்பதை சமூக வரலாற்று, பொருளியல், அரசியல் கோணங்களில் ஆய்வு செய்து விளக்குவதுடன் ஆரிய வேதங்கள், மனுஸ்மிருதிகள், பகவத்கீதை உபகதைகள் வழி ஆதாரத்துடன் நிறுவி இது ஒரு மதமே அல்ல. அடக்குமுறை, ஆதிக்க கருத்தியல் என்றும், இதைத் தூக்கி எறியாமல், சகோதரத்துவ சமத்துவ வாழ்வு சாத்தியமில்லை எனவும் எச்சரிக்கிறார். அனைத்து மதங்களுமே அதன் இருப்பிலே ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக் கருவிகளாகத்தான் இருக்கின்றன பார்ப்பன  இந்து மதமோ அதன் இயல்பிலேயே பிறப்பின் அடிப்படையில் உழைக்கின்ற மக்களை சாதிய அடுக்குமுறையாலும், ஆதிக்கம் செலுத்துவது என்று முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கு இயற்கைக் கூட்டாளியாக அமைகிறது. தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்று மக்களை மூலதனத்தால் ஒடுக்கும் மறுகாலனியத்திற்கு தோதான தத்துவம் பார்ப்பனியம் என்பதால் இந்துத்துவத்தை எதிர்ப்பது என்பது மறுகாலனியாக்க எதிர்ப்போடு தொடர்புள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள ‍வேண்டும்.  அந்த வகையில் சமூகமாற்றத்தை வேண்டும் டாக்டர் அம்பேத்கரின் கருத்துக்களை நடைமுறைபடுத்தும் வகையில் இந்த நூலை பரவலாக்குவது நம் ஒவ்வொருவரின் சமூகக் கடைமையாகும்.

படியுங்கள்! பரப்புங்கள்!!

வெளியீடு :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
தமிழ்நாடு

2. நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்.

கெடுவாய்ப்பாக நான் ஒரு தீண்டத்தகாத இந்துவாகப் பிறந்துவிட்டேன்.   அதைத் தடுப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது.  ஆனால், அருவறுக்கத்தக்க இழிவான நிலையில் வாழ்வதை என்னால் தடுத்துக் கொள்ள முடியும்.  எனவே நான் உறுதியாகக் கூறுகிறேன் : “நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்.” …ஏன்? நூலைப் படியுங்கள்.

வெளியீடு :
தலித் முரசு
சென்னை – 34.

3. முசுலீம்கள் குறித்து அம்பேத்கர்

சாதி, தீண்டாமையைத் தோற்றுவித்துப் பாதுகாக்கும் இந்துமதத்தை ஒழிப்பதையே தனது லட்சியமாகக் கொண்டிருந்த அம்பேத்கரை, தனது நோக்கத்துக்கேற்பப் பிசைந்து மாற்றியமைக்கிறது. அவரை முழுமையாக இருட்டடிப்பு செய்ய முடியாதாகையால், “இந்து சமூகத்தில் சமத்துவம் நிலவ வேண்டு‍மென விழைந்த முஸ்லிம் எதிர்ப்பாளராக” அவரைக் காட்ட முனைகிறது.

…விடுதலைப் போராட்ட கால அரசியல் சூழலில் முஸ்லிம் லீக் பற்றி அவர் தெரிவித்த கருத்துக்களையும், சமத்துவம் – ஜனநாயகம் என்ற விழுமியங்களின் அடிப்படையில் அவர் முன்வைத்த விமரிசனங்களையும் தனது இந்து பாசிசச் சட்டகத்திற்குள் இழுத்துத்  திணித்துக் கொள்கிறது. முழுப் பொய்களைக் காட்டிலும் ஆபத்தானவை அரை உண்மைகள்.  கருத்தியல் தளத்தில் இன்று இந்துமதவெறி அரசியல் பெற்றிருக்கும் செல்வாக்கிற்குக் காரணமானவை இத்தகைய பல அரை உண்மைகள்தான்.  பிழைப்புவாத அறிவுத் துறையினர் புகலிடம் தேடுவதும்  இத்தகைய அரை உண்மைகளில்தான்.

வெளியீடு :
கீழைக்காற்று
சென்னை – 02.

 – துரை. சண்முகம்


நூல்கள் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று,
பதிப்பகம் மற்றும் விற்பனையகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை
சென்னை – 600 002
Ph : 044 – 28412367