Tuesday, April 22, 2025
முகப்புகளச்செய்திகள்போராடும் உலகம்டாஸ்மாக்கை மூடுவோம் - விவசாயிகளை ஆதரிப்போம் ! சென்னை ஐ.ஐ.டி மாணவர் போராட்டம்

டாஸ்மாக்கை மூடுவோம் – விவசாயிகளை ஆதரிப்போம் ! சென்னை ஐ.ஐ.டி மாணவர் போராட்டம்

-

ந்தியாவில் விவசாயிகள் தற்கொலை என்பது தொடர் நிகழ்வாகியுள்ளது. கடந்த சில பத்தாண்டுகளில் ஏறத்தாழ மூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக அரசாங்க புள்ளி விவரங்களே தெரிவிக்கின்றன. இதிலிருந்து தமிழக விவசாயிகளும் தப்பவில்லை. கடந்த சில மாதங்களில் தமிழக விவசாயிகளின் தற்கொலைகள் எண்ணிக்கை 200-ஐயும் தாண்டிவிட்டது. மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளும் விவசாயத்தின் மீதான அவர்களின் அலட்சியமுமே விவசாயிகளைத் தற்கொலையை நோக்கி தள்ளுகின்றன.

வறட்சி நிவாரணம் வேண்டும், வங்கிகளில் உள்ள விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 30 நாட்களுக்கும் மேலாக பலவிதமான போராட்டங்களை டெல்லியில் நடத்தி வருகின்றனர் தமிழக விவசாயிகள். ஆனால் மத்திய மாநில அரசுகளோ இவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை. மேலும் பி.ஜே.பி-யின் தமிழக பிரதிநிதிகளோ போராடும் விவசாயிகளைப் பற்றி பொய்களையும் அவதூறுகளையும் பரப்பியும் போராட்டத்தை ஆதரிப்பவர்களை தேசவிரோதிகளாக சித்தரித்தும் பிரச்சாரம் செய்கின்றனர்.

விவசாயிகளின் போராட்டத்தோடு கூடவே டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டமும் தமிழகத்தில் வலுவடைந்துள்ளது. பல இடங்களில் உழைக்கும் மக்கள் தன்னியல்பாகவே டாஸ்மாக்கை மூடவேண்டும் என்று போராடி வருகின்றனர். ஆனால் அ.தி.மு.க அரசோ போராடும் மக்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்குகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சாராயக் கடைகளை மூடவேண்டும் என உச்சநீதிமன்றம் கூறிய அடுத்த நாளே சாராய முதலாளிகளை சந்திக்கும் மோடி முப்பது நாட்களுக்கும் மேலாக போராடிவரும் விவசாயிகளை சந்திக்க மறுக்கிறார். கார்ப்பரேட் நிறுவனங்களின் பல லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்யும் மோடி அரசு சில ஆயிரம் கோடி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மறுக்கிறது. இப்படி பெரும்பான்மையான மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளையே மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து செய்துவருகின்றன.

தங்களின் வாழ்வுரிமைக்காகப் போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்தும் சாராயக் கடைகளை(டாஸ்மாக்) மூடவேண்டும் என்ற உழைக்கும் மக்களின் போராட்டத்தை ஆதரித்தும் சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் ஏப்ரல் 15 2017 அன்று ஐ.ஐ.டி. வளாகத்திற்குள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.

தகவல் :
சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள்


டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்து காஞ்சிபுரத்தில் தெருமுனைப் பிரச்சாரம் !

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பாக 15.04.2017 அன்று, டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை ஆதரித்து காஞ்சிபுர மாவட்டத் தலைநகரில் பேருந்து நிலையம் வணிகர் வீதி, தாலுகா அலுவலகம் எதிரில் மற்றும் வெம்பாக்கம் ஆகிய இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்த தெருமுனை பிரச்சாரத்திற்கு காஞ்சிபுர மாவட்டத் தலைவர் தோழர் சரவணன் தலைமை தாங்கினார். இதனை பல பொதுமக்கள் ஆர்வத்துடன் கவனித்து சென்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
காஞ்சிபுரம் .

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க