Monday, April 21, 2025
முகப்புமறுகாலனியாக்கம்விவசாயிகள்அரிசியை டவுண்லோடு செய்ய முடியாது - ஐ.டி. ஊழியர்கள் விசாயிகளுக்காக போராட்டம்

அரிசியை டவுண்லோடு செய்ய முடியாது – ஐ.டி. ஊழியர்கள் விசாயிகளுக்காக போராட்டம்

-

சென்னை பல்லாவரம் அம்பேத்கர் சிலை அருகில் 18.04.2017 அன்று மாலை 5:00 மணியளவில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி. ஊழியர் பிரிவு மற்றும் மெப்ஸ் (MEPS) வளாகத்திள் வேலை செய்யும் ஐ.டி. ஊழியர்கள், இணைந்து விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெடுவாசலில் விவசாயிகளின் வாழ்வைச் சூறையாட வரும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்தும், டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இந்த பிரச்சினைகளையொட்டி ஒரு மாதத்திற்கு முன்னரே மெப்ஸ் வளாகத்திற்கு முன்பு போராட முடிவு செய்து, அதற்கான அனுமதி கோறி இருந்தனர்,ஆனால் காவல்துறை அதற்கு அனுமதி மறுத்ததால் இறுதியாக பல்லாவரம் அம்பேத்கர் சிலை அருகில் இந்த ஆர்ப்பாட்டத்தினை நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பு.ஜ.தொ.மு- ஐ.டி. ஊழியர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தோழர் கற்பகவிநாயகம் தலைமை தாங்கினார். மேலும் மெப்ஸ் ஐ.டி. ஊழியர் வினோத் மற்றும் சமந்தா ஆகியோர் பங்குபெற்று தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். மேலும் பு.ஜ.தொ.மு –வின் வழக்கறிஞர் சக்தி சுரேஷ் அவர்கள் கண்டன உரையாற்றினார்.

தோழர் கற்பகவிநாயகம் தனது தலைமை உரையில் “கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் போராடி வருகின்றனர். ஆனாலும் அவர்களின் கோரிக்கைகளுக்கு செவி கொடுக்க மறுக்கிறது மத்திய அரசு. மேலும் தமிழகத்தை தொடர்ந்து மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் என வஞ்சித்து வருகிறது. இதனை தமிழக அரசும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இவற்றை எதிர்த்து விவசாயிகளுக்காக போராட நாம் களமிறங்கியுள்ளோம்.

நம்மிடம் சிலர் கேட்கலாம் மென்பொருள் நிறுவன ஊழியர்களுக்கும் விவசாயிகளுக்கும் என்ன சம்மந்தமென்று. இன்று ஐ.டி. துறையில் பணிபுரிபவர்கள் பலரும் விவசாயிகளின் பிள்ளைகள் தான். நமது தந்தையும், சகோதரர்களும் செத்துக் கொண்டிருக்கும் போது, நாங்கள் சும்மா இருக்க முடியாது. மேலும் பலர் நாங்களும் விவசாயிகளுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை கண்டிக்கிறோம் என்கின்றனர். ஆனால் அந்த கண்டனங்கள் எப்படி மாறியுள்ளது என்றால் சமூகவலைதள மீம்ஸ்களாக உள்ளது. அவற்றை தாண்டி நாம் நமது கண்டனங்களை வீதிகளில் தெரிவிக்க வேண்டியுள்ளது. மீண்டும் ஒரு மெரினா போராட்டத்தைப் போன்ற உறுதியான போராட்டத்தை கட்டமைக்க வேண்டியுள்ளது.” என பதிவு செய்தார்.

அவரைத் தொடர்ந்து மெப்ஸ் ஐ.டி ஊழியர் திரு வினோத் தனது உரையில் “நமக்கெல்லாம் சோறு போட்ட விவசாயிகள் ஆடையின்றி அமர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவற்றை யாரும் கண்டு கொள்ளவில்லை, கட்சியின் சின்னத்திற்காக சண்டையிட்டுக் கொண்டு அதற்கான பேரங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். பிரதமரோ கூப்பிடும் தொலைவில் இருந்தும், விவசாயிகளை பார்க்க மறுக்கிறார். ஊர் ஊராக சுற்றி செல்பி எடுப்பவர் ஏன் விவசாயிகளை சந்தித்து ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்ளலாமே? அதைச் செய்வாரா?

விவசாயம் தான் நாட்டின் முதுகெலும்பு என்கிறார்கள் ஆனால் அது முறிக்கப்பட்டு விட்டது. அதை முறித்துவிட்டு என்ன டிஜிட்டல் இந்தியா? டிஜிட்டல் இந்தியாவில் ஒரு கிலோ அரிசியை டவுன்லோடு செய்து கொள்ள முடியுமா. எந்தத் துறையாக இருந்தாலும் விவசாயமே அனைவருக்கும் சோறு போடுவது. அதனால் தான் ஜப்பான் கப்பலில் விவசாயம் செய்து கொடிருக்கிறது. ஆனால் எல்லா சூழலும் இருந்தும் நமது விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டுகின்றனர். நாளை நமது நாடும் சோமாலியா போல் பட்டினிச் சாவை நோக்கி செல்லாமல் இருக்க விவசாயத்தை காக்க வேண்டும் அதற்காக அனைவரும் களத்தில் இறங்கிப் போராட வேண்டும்.” எனக் கூறினார்.

அதன் பின்னர் ஐ.டி. ஊழியர் சமந்தா அவர்கள் பேசினார். அதில் “இன்று நாம் கூடி இருப்பது விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக தான். விவசாயம் என்பதை அத்தனை சுலபமாக செய்துவிட முடியாது என்பது இங்கு உள்ள விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு தெரியும். நாம் எல்லாம் சில செடி நடலாம், 10 மரங்களை நடலாம் ஆனால் அதை தாண்டி பெரிதாக எதையும் செய்ய முடியாது. ஆக விவசாயத்தை காக்க வேண்டும் என்ன செய்யலாம்? இந்த மத்திய மாநில அரசுகள் மக்கள் அரசாக மாறும் போது மட்டுமே இது சாத்தியம்.” என பேசினார்.

பு.ஜ.தொ.மு. வழக்கறிஞர் சக்தி சுரேஷ் தனது கண்டன உரையில் “ஐ.டி. ஊழியர்கள் பற்றி ஒரு பொதுவான பார்வை உள்ளது; மடிப்பு கலையாத உடையுடன், கையில் ஸ்மார்ட் போன் இவைதான் அவர்களின் அடையாளம். ஆனால் இந்த பொதுப் பார்வையை மாற்றும் விதமாக உள்ளது அவர்களின் இந்த போராட்டம். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இங்கு சாலையில் கையில் பதாகையேந்தி, விவசாயிகளுக்காக நின்று கொண்டிருக்கின்றனர். இவர்கள் தங்கள் சொந்த முயற்சியிலேயே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.

திட்டமிட்டே விவசாயத்தை அழிக்க மீத்தேனும், ஹைட்ரோ கார்பன் திட்டங்களும் கொண்டுவரப்படுகின்றன. உ.பி-யில் தேர்தல் வெற்றிக்காக விவசாயக் கடன்களை ரத்து செய்வதாகக் கூறி ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. ஆனால் தமிழகத்தில் அவர்களுக்கு அரசியல் லாபம் இல்லாத காரணத்தால் திட்டமிட்டே வஞ்சிக்கிறது.

பல லட்சம் கோடி கடன் தொகை கார்பரேட் நலன்களுக்காக தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆனால் விவசாயிகளின் கடன்களை கட்டாயமாக வசூலிக்க வேண்டும் என்கிறது அரசு.

விவசாயிகளுக்கு மட்டும் இன்று பிரச்சினை இல்லை ஐ.டி. ஊழியர்களுக்கும் பிரச்சினை உள்ளது. தற்போது சி.டி.எஸ். நிறுவனமானது தனது நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்யப் போகிறது. இவ்வாறு அனைத்து தரப்பினருடைய வாழ்கையும் கார்பரேட் நலன்களுக்காக அழிக்கப்பட்டு வருகிறது.” ஆக இவை அனைத்துக்கும் எதிராக மக்கள் திரள வேண்டியதன் அவசியத்தினை வலியுறுத்தி பேசினார்.

இறுதியாக தோழர் திலீபன் அவர்கள் நன்றியுரை கூற ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பு.ஜ.தொ.மு வாகன ஓட்டுநர் சங்கத் தொழிலாளிகளும் கலந்து கொண்டனர். இந்த் ஆர்ப்பாட்டத்தை வியாபாரிகள், பொதுமக்கள் வாகனங்களில் செல்வோர் என பலரும் கவனித்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

-வினவு செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க