Saturday, April 26, 2025

தணல்

-

ஏப்ரல் – 22 – தோழர் லெனின் பிறந்த நாள்

இந்தியாவில் புரட்சி வருமா?
ஏங்குகிறார்கள் சிலர்.

இந்தியாவிலெல்லாம்
புரட்சி வராதுங்க…
புலம்புகிறார்கள் சிலர்.

இந்தியாவில்
புரட்சி வரவேண்டுமெனில்
இங்கொரு
லெனின் வரவேண்டும்…
விரும்புகிறார்கள் சிலர்.

ஏன்,
புரட்சிக்கு நீங்கள் வருவதில்
என்ன பிரச்சினை?

புரட்சியல்லாது
உங்களுக்கு
வேறென்ன வேலை?
கேட்கிறார் லெனின்

பேசுவதல்ல
செய்வதற்கு பெயர்
லெனின்!

மெரினா
விரிந்து கிடக்கிறது
நெடுவாசல்
நீண்டு கிடக்கிறது
தில்லி ஜந்தர் மந்தர்
பிடிவாதம் பிடிக்கிறது…
உடனே புரட்சி வேண்டுமென
ஒவ்வொரு தருணமும் துடிக்கிறது.

உழைக்கும் வர்க்கம்
நீங்கள் எனில்
இதற்கென இயங்காமல்
எது உங்கள்
இதயத்துடிப்பை மறுக்கிறது?

பிஞ்சுக்குரல்கள்
டாஸ்மாக் எதிர்ப்பில் வெடிக்கிறது.
ஒரு குடம் தண்ணீருக்காக
நம் பெண்களின் கர்ப்பம்
தவிக்கிறது…
பிறப்புறுப்பையே
சாதிவெறி அறுக்கிறது…

காவிக் கொலைகாரர்களின்
கையில்
சிக்கிக்கொள்பவர்களின் குரல்
நம் ஈரக்குலையில் ஒலிக்கிறது.
மூலதனம்
தன் கோரைப் பல்லை
நம் கருவறை வரை  பதிக்கிறது…

வர்க்கப்போராட்டத்தின் தணல்
வாசல் தோறும் தகிக்கிறது..

புரட்சியின் ஒவ்வொரு அசைவினிலும்
உன்  பெயரும் சேர்ந்தே இருக்கிறது

கொடுமைகள்
எதிரியிடம் மட்டும்
உயிர் வாழ்வதில்லை
நம் இயலாமையாலும் வாழ்கிறது
அயற்சியடைய நியாயமில்லை
அச்சம் உதறி போராடு!

வர்க்கத் தாய்மடி இணைந்து கொள்ள
லெனின் பிறந்தநாள் அழைக்கிறது!

– துரை. சண்முகம்