கொலம்பியா – தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த செழிப்பான நாடு. வற்றாத ஆறுகளான அமேசானும் ஒரினோக்கோவும் கொலம்பிய மக்களின் உயிராதாரங்கள். இயற்கை வனப்புகளும் வளங்களும் கொள்ளை அழகாய் இருக்கும் கொலம்பியாவில்தான் உலகின் மிகச்சிறந்த மரகத கற்கள் உற்பத்தியாகின்றன. உலகின் மூன்றில் இரண்டு பங்கு மரகத கற்களுக்கு தாயகம் கொலம்பியா. கண்கொள்ளா அழகுடன் பச்சை நிறத்தில் மின்னும் மரகத கற்களில் சில வகைகள் வைரத்தை விடவும் விலை உயர்ந்தவை. உலகெங்கும் பணக்காரர்களின் விரல்களில் அழகுடன் வீற்றிருக்கும் பச்சை நிற மரகத கல் ஏழை கொலம்பியர்களின் செங்குருதியினால் உருவானவை. உழைப்பை நீக்கிவிட்டால் நிறத்தை தவிர கருங்கல்லிற்கும் மரகத கல்லிற்கும் வேறுபாடு ஏதுமில்லை.
மரகத கற்களை ஏற்றுமதி செய்யும் ஏகபோக உரிமைக்காக ஏகாதிபத்தியங்களின் ஆசியுடன் 1980-களில் மாஃபியா கும்பல்களுக்கு இடையே நடந்த வன்முறைகளில் சிக்கிக்கொண்டு சிதைந்து போன கொலம்பிய மக்களின் எண்ணிக்கை பல ஆயிரங்கள் இருக்கும். கொலம்பிய அரசின் உதவியுடன் சட்டபூர்வமாகவும் மாபியா கும்பல்களால் சட்டவிரோதமாகவும் நடத்தப்படும் இந்த காட்டு வேட்டையினால் கொலம்பியா நாடு இழந்த இயற்கை வளங்களும் எண்ணி மாளாதவை.
கரிய பாறைகளில் இண்டு இடுக்குகளில் ஒளிந்திருக்கும் மரகதத்தின் மின்னும் பச்சை நிறம் வறுமையை அகற்றி தங்கள் வாழ்க்கையில் ஒளியேற்றும் என்று பல்லாயிரக்கணக்கான கொலம்பிய மக்கள் அன்று நம்ப வைக்கப்பட்டார்கள். மரகத கல்லைத் தேடி புறப்பட்ட கொலம்பிய மண்ணின் மைந்தர்கள் பேரகொய்ரா(Berraquera) என்று அழைக்கப்பட்டனர். ஆனால் அப்படி மரகதம் தேடிய பெரும்பான்மையான கொலம்பிய மக்கள் இன்றும் ஏழைகளாகவே இருக்கிறார்கள்.
இன்று அந்த படுபயங்கர பச்சை யுத்தம் இல்லாமல் போய்விடினும் அது தோற்றுவித்த உள்நாட்டு அரசியல் குழப்பங்களாலும் போதை கடத்தல் கும்பல்களாலும் இயற்கை வளங்கள் சூறையாடுவதாலும் கொலம்பியா இரத்தக்களரி ஆகிவிட்டது. ஒட்டுமொத்த கொலம்பிய மக்களுக்கும் சொந்தமான இயற்கையை எதிரிகளிடம் இருந்து மீட்பதற்கான ஒரு போராட்டக்களத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றன மரகதத்தின் பச்சை நிறமும் ஏழை கொலம்பியர்களின் செங்குருதியும்.















– நன்றி அல்ஜசிரா
தமிழாக்கம்:சுந்தரம்.
மூலக்கட்டுரை: Into the green land: Emerald mining in Colombia