கடந்த 2015-ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் உத்திரபிரதேச மாநிலம் தாத்ரியைச் சேர்ந்த முகமது அக்லக் இந்துமதவெறி குண்டர் படையால் கொல்லப்படுகிறார். அக்லக்கின் வீட்டிலிருந்த குளிர்சாதனப் பெட்டியில் பசு மாமிசம் வைத்திருந்தார் என குற்றம் சுமத்திய இந்துத்துவ ரவுடிக் கூட்டம், அவரை வீட்டிலிருந்து இழுத்துப் போட்டு அடித்தே கொன்றது. பின்னர் நடந்த விசாரணையில் அக்லக்கின் வீட்டில் இருந்தது மாட்டுக்கறி இல்லையென்பது நிரூபிக்கப்பட்டது.

அதே போல 2015-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி செத்த மாடுகளை எடுத்துச் சென்ற லாரிகளை காஷ்மீர் மாநிலம் உதம்பூர் அருகே வழிமறிக்கும் பார்ப்பனிய இந்துமதவெறி கும்பல் ஒன்று, லாரி ஓட்டுநனர் ஜாகித் அகமதுவையும் அவருடன் வந்த இன்னொரு முசுலீமையும் கண்மூடித்தனமாக தாக்கியது. கொடூரமாக தாக்கப்பட்ட ஜாகித் பத்து நாட்களுக்குப் பிறகு இறந்து விடுகிறார். தாக்குதல் குறித்த தகவல் பரவியதும் ஜம்மு காஷ்மீர் முழுவதும் போராட்டங்கள் பரவுகின்றன.
உதம்பூர் தாக்குதலை அடுத்து போராடிய காஷ்மீர் மக்களை ஒடுக்க வந்த பாதுகாப்புப் படையினர் கல்வீச்சுக்கு ஆளாகினர். ’தேசிய ஊடகங்களோ’ பாதுகாப்புப் படையினர் அநியாயமாக தாக்கப்படுவதாக திரித்து தேசியவெறியைத் தூண்டின. பின்னர் விசாரணையில் ஜாகித் ஓட்டி வந்த லாரியில் கிடைத்த செத்த மாடுகள் விச உணவின் காரணமாகவே இறந்தன என்பதும் அவற்றின் இறைச்சி உண்பதற்கானதல்ல என்றும், அவை கசாப்புக்காக எடுத்து வரப்பட்டவை அல்ல என்பதும் உறுதியானது.
உதம்பூர் தாக்குதல் நடந்த அதே சமயத்தில் ஹிமாச்சல் பிரதேச மாநிலம் சகரன்பூர் அருகே மாடுகளைக் ’கடத்திச்’ செல்ல முயன்றதாக இருபது வயது இளைஞர் ஒருவரை அடித்தே கொன்றது இந்துத்துவ குண்டர் படை ஒன்று.
ஜனவரி 2016-ல் மகாராஷ்டிர மாநிலம் ஹர்தா மாவட்டத்தில் உள்ள கிர்க்கியா இரயில்வே நிலையத்தில் பயணிகள் சிலரை கண்மூடித்தனமாக தாக்குகிறது இந்து பரிவார அமைப்பான கோரக்ஷன சமிதியைச் சேர்ந்த குண்டர் படை ஒன்று. மறுநாள் உள்ளூர் பத்திரிகைகள் பசு மாமிசத்தை கடத்திய முசுலீம் பயணிகளை கோரக்ஷன சமிதி தாக்கியதாக செய்தி வெளியிட்டன. எனினும், பின்னர் நடந்த விசாரணைகளில் போலீசாரால் “கைப்பற்றப்பட்டு” தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டது பசு மாமிசம் இல்லையென்றும், எருமைக் கறி என்றும் தெரிய வந்தது.
2016 மார்ச் மாதம் ஜார்கண்ட் மாநிலம் லாத்தேகர் மாவட்டத்தில் இரண்டு முசுலீம் கால்நடை வியாபாரிகளை அடித்துக் கொன்று மரத்தில் தொங்க விட்டனர் இந்துத்மத வெறியர்கள். கொல்லப்பட்டவர்கள் மஸ்லூம் அன்சாரி மற்றும் இம்தியாஸ் கான் என அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் லாத்தேகர் மாவட்டத்தில் நடக்கும் புகழ்பெற்ற கால்நடைச் சந்தையில் இருந்து வளர்ப்பதற்காக ஆடு மாடுகளை வாங்க வந்தவர்கள் என்பது பின்னர் விசாரணையில் தெரிய வந்தது.

2016 ஏப்ரல் 5-ம் தேதி ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த முஸ்டெய்ன் அப்பாஸ் என்கிற 27 வயது வாலிபர் விவசாயத்திற்காக காளை மாடுகளை வாங்கி விட்டுத் திரும்பும் வழியில் கோ ரக்ஷா தள் என்கிற பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
2016 ஜூன் மாதம் சுமார் 40 பேர் கொண்ட பஜ்ரங் தள் குண்டர்கள் கர்நாடக மாநிலம் கோப்பா அருகே தலித் குடும்பம் ஒன்று மாட்டுக்கறி வைத்திருப்பதாக குற்றம்சாட்டி கொலைவெறித் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டது. கொடூரமான இத்தாக்குதலில் அந்த தலித் குடும்பம் மரண காயங்களுக்கு உள்ளானது.
அதே ஆண்டு ஜூலை மாதம் குஜராத் மாநிலம் ஊனாவில் செத்த மாட்டின் தோலை உரித்தார்கள் எனக் குற்றம் சாட்டி தலித் இளைஞர்களைக் கொடூரமாக தாக்கியது இந்துத்துவ கும்பல் ஒன்று. இச்சம்பவம் சமூக ஊடகங்களில் வெளியான நிலையில் குஜராத் மாநிலம் முழுக்க தலித் மக்கள் கொந்தளித்து எழுந்தனர். செத்த மாட்டை சுமக்க மாட்டோம், உரிக்க மாட்டோமென தீர்மானித்த குஜராத் தலித் மக்கள், அரசு அலுவலகங்களை செத்த மாடுகளால் நிறைத்தனர். பல வாரங்கள் தொடர்ந்த இந்தப் போராட்டங்களால் அதிர்ச்சியடைந்த இந்துத்துவ கும்பல், தலித் வாக்குகளை இழந்து விடுவோம் என்கிற அச்சத்தில் ஆழ்ந்தன.
அதே மாதம் மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்சோர் மாவட்ட இரயில்வே நிலையத்தில் மாட்டுக்கறி வைத்திருப்பதாக குற்றம் சாட்டி இரண்டு முசுலீம் பெண்களைத் தாக்கியது பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த குண்டர் படை ஒன்று. 2016, ஆகஸ்ட் மாதம் ஆந்திராவில் மோகதி எலிசா, லாசர் எலிசா ஆகிய இரண்டு தலித் சகோதரர்கள் இறந்த மாட்டின் தோலை உரித்துக் கொண்டிருக்கும் போது கோ ரக்சா சமிதியைச் சேர்ந்த 100 குண்டர்களால் தாக்கப்பட்டனர்.
2017, ஏப்ரல் ஒன்றாம் தேதி ஹரியானா மாநிலத்தில் முறையாக அனுமதி பெற்று மாடுகளை ஏற்றி வந்த டெம்போ வாகனங்களை வழிமறித்த பஜ்ரங்தள் குண்டர்கள், மாடுகளை ஏற்றி வந்த 15 இசுலாமியர்களைக் கொடூரமாக தாக்கினர். இந்த தாக்குதலில் பெஹ்லு கான் என்கிற முதியவர் கொல்லப்பட்டார் (இணைப்பில் வீடியோ : Rajasthan cow vigilante beat Muslim man to death; Police books six, launches manhunt). இதே மாதம் கடந்த 21ம் தேதி ஜம்மு காஷ்மீர் ரியாசி மாவட்டத்தில் கால்நடைகளுடன் இடம் பெயர்ந்த நாடோடிக் குடும்பம் ஒன்றை வழிமறித்த கோ ரக்ஷக் குண்டர் படை, கொடூரமான முறையில் தாக்கி உள்ளது. (இணைப்பில் வீடியோ: In Shocking Videos Of Cow Vigilante Attack, Jammu Family Begs For Mercy).

ஜம்முவில் தாக்குதல் நடத்திய அதே நாளில் (21-ம் தேதி) புது தில்லி கால்காஜி பகுதியில் எருமைகளைக் கடத்த முற்பட்டதாக பொய்யாகக் குற்றம் சுமத்தி மூன்று முசுலீம் இளைஞர்கள் தாக்கப்பட்டனர். கடுமையான தாக்குதலோடு இரவு முழுவதும் மயங்கிய நிலையில் கிடந்த இளைஞர்களை மறுநாள் எழுப்பி விசாரித்த போலீசார், அவர்கள் மேல் மிருக வதைத் தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலே விவரிக்கப்பட்டவை அனைத்தும் ஊடகங்களில் வெளியான சம்பவங்கள் மட்டுமே. ஊடகங்களில் வெளியாகாமல் சிறியளவிலான சம்பவங்களின் பட்டியல் மிக நீண்டது. உத்திரபிரதேச மாநிலத்தில் மட்டும் 2015 மற்றும் 2016 ஆகிய இரண்டு ஆண்டுகளில் சிறிதும் பெரிதுமாக சுமார் 317 மதக் கலவரங்கள் நடந்துள்ளன. இந்த தகவலை கடந்த பிப்ரவரி மாதம் பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கான பதிலாக உள்துறை இணையமைச்சர் கிரென் ரிஜ்ஜுவே தெரிவித்துள்ளார்.
குறிப்பாக உத்திரபிரதேச தேர்தலுக்கு முந்தைய மாதங்களில் மதக் கலவரங்களின் எண்ணிக்கை ’திடீரென’ உயர்ந்துள்ளன. அநேகமான கலவரங்களுக்கு இந்துத்துவ பரிவார அமைப்புகள் முன்னெடுத்து வரும் மாட்டு அரசியல் அல்லது இசுலாமிய வெறுப்பு அரசியலே அடிப்படைக் காரணங்கள். 2014-ம் ஆண்டு மே மாதம் மத்திய அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன் மோடி உத்திரவாதம் அளித்திருந்த “வளர்ச்சி” ஏதும் நடைபெறாத நிலையில் தான் இந்துத்துவ வெறுப்பரசியலை உயர்த்திப் பிடிக்கத் துவங்கினர்.
உண்மையில் மோடி வாக்களித்த “வளர்ச்சியை” அவரே கூட நம்பியிருக்க மாட்டார். காங்கிரசின் ஊழல்களால் ஆத்திரமுற்றிருந்த நடுத்தர வர்க்கத்தினருக்கு காட்டிய கண்கட்டி வித்தை தான் மேற்படி “வளர்ச்சி”. ஆட்சிக்கு வந்ததும் பீறிட்டுக் கிளம்புவதற்கு தயாராக இருக்கும் பாலாறு மற்றும் தேனாற்றின் மதகுகளைத் திறந்து விடப் போவதாக சொல்லி வந்த மோடி, மெல்ல மெல்ல சுதி குறைந்து ”60 ஆண்டு கால காங்கிரசு ஆட்சி அவலங்களை ஐந்தாண்டுகளில் தீர்க்க முடியுமா?” எனக் கேட்க ஆரம்பித்துள்ளார் –ஆராசனை தலைக்கேறிய நிலையில் இடையில் ஆறாண்டுகள் நடந்த வாஜ்பாயின் ஆட்சியையும் காங்கிரசின் கணக்கிலேயே வரவு வைத்து விட்டனர் மோடி பக்தர்கள்.
தற்போது 2019-ல் நடக்க இருக்கும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலை குறிவைத்து களமிறங்கியிருக்கும் இந்துத்துவ கும்பல், சகல வகைகளிலும் மத ரீதியிலான பதற்ற நிலையில் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதை நாடெங்கும் வெவ்வேறு வகைகளில் நடைமுறைப்படுத்தி வருகின்றது. தமிழகத்தில் தமிழர் கலாச்சாரத்தை மீட்பது எனும் முகாந்திரத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நைச்சியமாக இந்துத்துவ கோமாதா அரசியலுடன் முடிச்சுப் போட பாரதிய ஜனதா எடுத்த முயற்சிகளை நாம் அறிவோம். ”ஜல்லிக்கட்டுக்காக” நடந்ததாக சொல்லப்பட்டாலும், அந்தப் போராட்டத்தின் உள்ளடக்கமாக பார்ப்பன மேலாதிக்க எதிர்ப்பு இருந்ததாலும், தொடர்ந்து மத்திய அரசின் மாநில விரோதப் போக்குகளால் ஆத்திரமுற்ற இளைஞர்கள் போராட்டக் களத்தில் ஆளுமை செலுத்தியதாலும் பாரதிய ஜனதாவின் முயற்சி படுகேவலமாக தோற்றுப் போனதையும் நாம் கண்டோம்.
தமிழகத்தைப் போல் ஒப்பீட்டளவில் பார்ப்பன எதிர் மரபுகள் மக்கள் மயமாகாமலும் அவற்றுக்கு வலுவான அரசியல் அடித்தளங்கள் ஏற்படாத வரலாற்றுச் சூழலும் இந்தி பேசும் வட மாநிலங்களில் நிலவுவதால் இந்துத்துவ கும்பலின் முயற்சிகள் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றியடைந்து வருகின்றன. சான்றாக யோகி ஆதித்யநாத்தின் தேர்தல் வெற்றியைக் குறிப்பிட முடியும்.

ஆதித்யநாத்தின் வெற்றிக்குப் பின் பசுப் பாதுகாப்புப் படை உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்புகளுக்கு ஒரு புதிய உத்வேகம் கிடைத்துள்ளது. கடந்த வாரம் உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவை அடுத்த ஃபதேபூர் சிக்ரியைச் சேர்ந்த முசுலீம் காய்கரி வியாபாரி ஒருவரைத் தாக்கிய ஹிந்து யுவ வாகினி, பஜ்ரங் தள் மற்றும் கோ ரக்ஷக் சேணாவைச் சேர்ந்த குண்டர்கள், அவரது காய்கறிக் கடையைக் கொள்ளையடித்துள்ளனர்.
மேற்படி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் மீது முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது உள்ளூர் காவல் துறை. பாரதிய ஜனதாவே அதிகாரத்தில் இருப்பதால் முதல் தகவல் அறிக்கையே கூட மலம் துடைக்கும் தாளாகத் தான் மதிக்கப்படும் என்பது வேறு விசயம். ஆனால், தாமே அதிகாரத்தில் இருக்கும் ஒரு மாநிலத்தில், தமது அடாவடிகளை குறைந்தபட்சமாக பதிவு கூட செய்யக் கூடாதென்கிற ஆத்திரத்தில் ஃபதேபூர் சிக்ரி காவல் நிலையத்தை கும்பலாகச் சென்று தாக்கியுள்ளனர். காவல் நிலையத்தில் இருந்த துணை சூப்பிரெண்டை குறி வைத்து அடித்துள்ளனர்.
இந்த சம்பவம் நடப்பதற்கு 20 நாட்களுக்கு முன் சகரான்பூரில் முசுலீம்களுக்கு எதிராக இந்துத்துவ அமைப்பினர் நடத்திய கலவரம் ஒன்றின் போது ரோந்து வந்த மூத்த போலீசு சூப்பிரெண்டு லவ குமாரைத் தாக்கியுள்ளனர். சகரன்பூரைச் சேர்ந்த தலித்துக்களும் இசுலாமியர்களும் இணைந்து கடந்த ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கர் ஜெயந்தியைக் கொண்டாடியுள்ளனர் – இதற்கு போட்டியாக இந்துத்துவ கும்பல் நடத்திய ஊர்வலமே கலவரமாக முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கலவரங்களின் மூலம் வகுப்புவாத பதற்றத்தை உண்டாக்கி அதன் மூலம் சமூகத்தை மதரீதியில் பிளந்து அதனடிப்படையில் தொடர்ந்து தேர்தல்களில் வெல்வதால் இந்துத்துவ கும்பலின் திமிர் பல மடங்கு அதிகரித்துள்ளது. போலீசு, இராணுவம், நீதித்துறை, அதிகாரிகள் உள்ளிட்ட அரசு இயந்திரங்களைக் காவிமயமாக்குவது, அதனைக் கொண்டு சட்டபூர்வமாகவே தமது செயல்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வது என்கிற அவர்களது வழக்கமான அணுகுமுறைக்கு இணையாக தாமே சட்டத்தைக் கையிலெடுத்துக் கொள்வது, தமது பரிவார அமைப்புகளையே சட்டவிரோத சிவில் இராணுவ படையாக மாற்றியமைப்பது என்கிற புதிய உத்தியை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளதையே மேற்படி தாக்குதல் சம்பவங்கள் உணர்த்துகின்றன.
தொடர்ந்து மதரீதியிலான பதற்ற நிலையில் சமூகத்தைத் வைத்திருப்பதற்காக மத்தியிலும் பல்வேறு மாநிலங்களிலும் தமக்கிருக்கும் அதிகாரத்தைக் கொண்டு புதுப் புதுக் கோணங்களில் இருந்தெல்லாம் திட்டங்களை யோசித்து அமல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தான் தற்போது மாடுகளுக்கும் ஆதார் எண் வழங்கும் திட்டத்தை துவங்கவுள்ளனர்.
“இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு மாட்டுக்கும், மாட்டு வம்சத்தைச் சேர்ந்த கால்நடைகளுக்கும் ஆதார் எண் வழங்கப்பட உள்ளது” என்று உச்ச நீதிமன்றத்தில் ஆதார் தொடர்பாக நடந்து வரும் வழக்கின் போது மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கேட்பதற்கே கேனத்தனமாக உள்ள மேற்படி திட்டத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்த உள்ளதாக கடந்த ஜனவரி மாதமே ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. மோடி அரசின் திட்டங்கள் முட்டாள்தனமானவை என்று நம்பியவர்கள் கூட அது இந்தளவுக்கு அடிமுட்டாள்தனமானது என்பதை நம்பாததால், அப்போது வெளியான செய்திகளை ’முட்டாள்கள் தின’ விளையாட்டென நினைத்துக் கடந்து விட்டனர்.
ஆனால், மாடுகளுக்கு ஆதார் எண் வழங்கும் தமது திட்டத்தை முனைப்புடன் தொடங்கியுள்ளது மோடி அரசு. நாடெங்கும் உள்ள சுமார் 8.8 கோடி மாடுகள் மற்றும் எருமைகளின் காதுகளில் ஆதார் எண் பதியப்பட்ட பிளாஸ்டிக் வில்லைகளைப் பொருத்த சுமார் ஒருலட்சம் பணியாளர்களைத் தெரிவு செய்து பயிற்சியளித்துள்ளார்கள். சுமார் 150 கோடி ருபாய் செலவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தின் மூலம் கால்நடைகளின் சட்டவிரோத நடமாட்டத்தைக் கண்காணிப்பது சாத்தியமாகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதாவது கன்று ஈனும் வயதைக் கடந்த, பால் வழங்க முடியாத வயதான மாடுகளை கைவிடுவது அல்லது மாடுகள் அறுப்பது அனுமதிக்கப்பட்டிருக்கும் மாநிலங்களுக்கு அடிமாடாக அனுப்புவது போன்ற முடிவுகளை எடுக்கும் விவசாயிகளையும் கூட இனிமேல் இத்திட்டத்தின் விளைவாக குற்றவாளிகளாக்க முடியும். இந்துத்துவ அரசியல் மாடு தின்னும் இசுலாமியர்களுக்கும் தலித்துகளுக்கும் இன்னபிற சாதியினருக்கும் மாத்திரமின்றி – விவசாயத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து மக்களுக்குமே எதிரானது என்பதை தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகின்றது.
ஒரு பக்கம் பசுப் பாதுகாப்பு எனும் பெயரில் தமது பயங்கரவாதப் படைகளைக் களமிறக்கி கலவரங்களைத் தூண்டி நாட்டை எந்நேரமும் பதற்றத்தில் வைத்திருப்பது – இன்னொரு பக்கம் அவ்வாறு பதற்றத்தில் வைத்திருப்பதை உத்திரவாதம் செய்யும் விதமான திட்டங்களை சட்டப்பூர்வமாகவே நிறைவேற்றி வைப்பது என இரட்டை அணுகுமுறையை மேற்கொண்டுள்ளது இந்துத்துவ கும்பல். இவையனைத்தும் எதிர்வரும் 2019 பாராளுமன்றத் தேர்தலைக் குறிவைத்தே நிறைவேற்றப்பட்டு வருகின்றது.
காங்கிரசு உள்ளிட்ட எதிர்கட்சிகளோ பாரதிய ஜனதாவின் கோமாதா அரசியலைக் கேள்விக்குட்படுத்தினால் தங்களுடைய இந்து ஓட்டு வங்கியிலும் ஓட்டை விழுந்து விடுமென்கிற அச்சத்தில் கள்ள மௌனத்தோடு உடன்பட்டுப் போகின்றன. இந்நிலையில் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டுள்ளவர்களும் முற்போக்காளர்களுமே இந்துத்துவ அரசியலைக் களத்தில் முறியடிக்க முடியும். எப்படி தமிழகத்தின் வீதிகளில் இசுலாமியர்களை விரோதிகளாக கட்டமைக்க முனைந்த இந்துத்துவ கோமாதா அரசியல் தோற்கடிக்கப்பட்டதோ அதே போல் நாடெங்கும் முறியடிக்கப்பட வேண்டும்.
– சாக்கியன்
மேலும் வாசிக்க:
- Cow smuggling cases down to almost zero, say vigilantes
- Cow vigilantism threatens the body and soul of India
- Cow Vigilantes In The Capital? What I Saw On Saturday Night
- Cow vigilantism in J&K: 9-year-old girl attacked; four accused arrested
- UP cow protection effort is in spirit of freedom movement: Nirmala Sitharaman
- Only Those Who Betrayed the Freedom Struggle Can See Murder as ‘Patriotism’
- As Hindutva Toughs Run Riot in UP, Will Adityanath Enforce the Law on His Own Cadre?
- Right wing group slaps DSP, stone-pelts police in Fatehpur Sikri
- Aadhar for cattle? Centre proposes ‘Unique Identification Number’ for each cow, progeny
- Holy cow! Now an Aadhar for cattle
- Una, Alwar and Delhi cow vigilantism: A list of ‘gau rakshak’ attacks since 2015 Dadri lynching
- UP tops list of incidents of communal violence with 162 reported in 2016