Monday, April 28, 2025
முகப்புஉலகம்ஐரோப்பாஒரு அகதியின் பயணம் - படக்கட்டுரை

ஒரு அகதியின் பயணம் – படக்கட்டுரை

-

காம்பியாவின் தலைநகரும் தனது சொந்த ஊருமான பான்ஜூலை விட்டு 2016-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி ஐரோப்பாவுக்குக் கிளம்புகிறார் பத்தொன்பது வயது மாலிக் ஜெங். அப்போது அவருக்கு  தான் வழியில் எதிர்கொள்ளவிருக்கும் அபாயங்களைக் குறித்து ஏதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி நெடுக பரந்து விரிந்து கிடக்கும் பாலைவனத்தை எண்ணை லாரி ஒன்றினுள் மறைந்தவாறே கடந்திருக்கிறார் மாலிக். மூச்சுத் திணறடிக்கும் அந்த நீண்ட பயணத்தின் இடையே லிபியாவைக் கடக்கும் போது மாலிக் பிடிபட்டார். லிபியாவில் மாலிக்குடன் பயணித்துக் கைதானவர்கள் அவரது கண் முன்னே கொல்லப்பட்டனர். நல்லவேளையாக விசயத்தைக் கேள்விப்பட்டு மாலிக்கின் குடும்பத்தார் சரியான நேரத்தில் அனுப்பி வைத்த பணம் அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளது.

லிபியாவின் சிறையில் ஒரு மாதத்தைக் கழித்த பின் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி சட்டவிரோத ஆள் கடத்தல் ஏஜெண்டுகளின் உதவியுடன் திரிபோலி கடற்கரையை வந்தடைகிறார் மாலிக். அங்கிருந்து சுமார் 120 பேருடன் ரப்பர் படகு ஒன்றின் துணையுடன் மத்திய தரைக்கடலைக் கடப்பதாக திட்டம். அந்தப் படகு பயணிகளுடன் தனது பயணத்தைத் துவங்கிய சில மணி நேரங்களிலேயே, லிபிய கடற்கரையிலிருந்து சுமார் 20 கடல் மைல் தொலைவில் தன்னார்வக் குழு ஒன்றின் மீட்புப் படகான லுவெண்டாவால் கண்டறியப்பட்டு மீட்கப்படுகிறது.

மாலிக்கை முதலில் சிசிலியில் உள்ள கடானியா நகரத்திற்க்கும் பின்னர் வடக்கு இத்தாலியின் பெய்லா நகரத்திற்க்கும் மாற்றுகிறார்கள். அவர் தற்போது பெய்லாவில் தற்காலிக அகதிகள் முகாமான கோலிப்ரியில் தங்கியுள்ளார். அது சுமார் பத்தாண்டுகளுக்கு முன் கைவிடப்பட்ட ஓட்டல் ஆகும். தற்போது அந்த ஓட்டலை அகதி மையமாக பராமரித்து வரும் கூட்டுறவு நிறுவனம், தமது மையங்களில் அனுமதிக்கும் அகதி ஒருவருக்கு ஒரு நாள் வாடகையாக 35 யூரோக்களை அரசிடம் இருந்து பெற்றுக் கொள்கிறது. மாலிக்கிற்கும் அவருடன் தங்கியுள்ள குடியேறிகளுக்கும் தினசரி மூன்று வேளை உணவும், உறங்குவதற்கு ஒரு படுக்கையும், ஒவ்வொரு மாதமும் செலவுக்கு 75 யூரோக்களும் கிடைக்கின்றன.

அகதியாக தஞ்சம் கோரும் விண்ணப்பத்திற்கான பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் மாலிக். அந்த விண்ணப்பத்தின் பேரில் அரசு எடுக்கும் முடிவைப் பொறுத்தே சட்டப்பூர்வ அகதியாகவோ அல்லது தற்போதைய நிலையைப் போல் தொடர்ந்து போராடியவாறோ அவரது எதிர்கால வாழ்க்கை அமையும்.

ஜூகெண்ட் ரெட்டெட் என்கிற தன்னார்வக் குழுவுக்குச் சொந்தமான லுவெண்ட்டா மீட்புப் படகில் இத்தாலி கடல் பாதுகாப்பு போலீசாரின் வருகைக்காக காத்திருக்கும் அகதிகள். இத்தாலிக்கு கொண்டு செல்லப்படவிருக்கும் இவர்கள் லிபிய கடற்கரையில் இருந்து சுமார் 20 கடல் மைல் தொலைவில் மீட்கப்பட்டனர்.
மீட்புப் படகு லுவெண்டாவில் இருந்து கடலைப் பார்க்கும் காம்பியாவைச் சேர்ந்த மாலிக் (வலதுபுறம் இருப்பவர்) மற்றும் செனகலைச் சேர்ந்த ம்பேயி. லிபியாவில் இருந்து 12 பேர்களுடன் ரப்பர் படகு ஒன்றில் பயணமான இவர்கள் சுமார் 7 மணி நேரம் கழித்து பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
கொள்ளளவையும் மீறி 120 பேர்களுடன் நடுக்கடலில் தத்தளிக்கும் ரப்பர் படகில் இருப்பவர்களை மீட்க லுவெண்டா மீட்புப் படகின் ஊழியர்கள் உதவுகின்றனர். லுவெண்டாவின் ஊழியர்கள் தடுமாறிக் கொண்டிருந்த ரப்பர் படகை சமநிலைக்குக் கொணர்ந்து அதில் உள்ளவர்களை மாதுகாப்பாக மீட்க முயற்சித்தும் சிலர் கடலில் தவறி விழுந்தனர்.
அகதித் தஞ்சம் கோரிய காம்பியாவின் மாலிக் ஜெங்கின் புகைப்படம். இவர் மத்திய தரைக்கடலில் இருந்து 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி மீட்கப்பட்டார். முதலில் சிசிலிக்கும் பின்னர் வடக்கு இத்தாலிக்கும் மாற்றப்பட்ட மாலிக், தற்போது ஒரு தற்காலிக அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
கோலிப்ரி ஓட்டலின் முகப்பு. ஓட்டலாக இருந்து கைவிடப்பட்டு பின்னர் தற்காலிக அகதிகள் முகாமாக பராமரிக்கப்படும் இந்த இடத்தில் தான் மாலிக் தங்கியுள்ளார். இதைப் பராமரிக்கும் கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்கள் இத்தாலியில் பல்வேறு இடங்களில் இதே போன்ற அகதி முகாம்களை நடத்தி வருகின்றனர்.
கோலிப்ரி ஓட்டலின் தாழ்வாரம். இந்த கட்டிடத்தில் சுமார் 55 பேர் வரை தங்க முடியும். பொதுவாக அகதிகளாக தஞ்சம் கோருபவர்கள் சுமார் 2 ஆண்டுகாலம் வரை இது போன்ற மையங்களில் தங்க முடியும். தற்போது இந்த இடத்தில் தங்கியிருப்பவர்கள் அனைவரும் ஆப்ரிக்காவின் சப்-சஹாரா நாடுகளைச் சேர்ந்தவர்கள். இங்கு தங்கியிருக்கும் பெரும்பாலானவர்கள் சாப்பிடுவதிலும், உறங்குவதிலும், நண்பர்களுடனும் உறவினர்களுடனும் அரட்டையடிப்பதிலுமே பொழுதைப் போக்குகின்றனர். இது போன்ற மையங்களில் இலவச வைஃபை வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
மாலிக் தனது நண்பரின் அறையில் ஒரு சிறிய மின்சார ஹீட்டரின் மூலம் தேனீர் தயாரித்துக் கொண்டுள்ளார். அவர் முன்பு குடும்பத்தோடு வசித்து வந்த போது பின்பற்றிய அதே தேனீர் தயாரிக்கும் முறையைத் தான் இங்கும் பின்பற்றுகிறார். நண்பர்களுடன் தேனீர் பருகுவது இங்கே தங்கியிருப்பவர்களின் நேரப் போக்குகளில் ஒன்று.
பெய்லாவில் உள்ள வெவ்வேறு அகதி முகாம்களைச் சேர்ந்தவர்கள் ஒரு சனிக்கிழமை காலை கால்பந்து விளையாடுகின்றனர். பின்னணியில் ஆல்ப்ஸ் மலைத் தொடர். கால்பந்தாட்டம் தான் அகதிகளின் முக்கியமான பொழுபோக்கு. இங்குள்ளவர்கள் பலருக்கும் தொழில்முறை கால்பந்தாட்ட வீரர்களாகும் கனவு உண்டு. பெய்லாவில் உள்ள அகதிகள் ஒருங்கிணைப்பு மையம் கால்பந்தாட்ட போட்டிகளுக்கு ஏற்பாடு செய்கின்றது. இந்தப் போட்டிகளில் உள்ளூர் இளைஞர்களோடு சேர்ந்து வாய்ப்பும் கிட்டுவதுண்டு.
பனிபடர்ந்த கால்பந்தாட்ட மைதானத்தில் செனகலைச் சேர்ந்த பாபா காம்பியாவைச் சேர்ந்த மாலிக்குடனும் மாலி நாட்டைச் சேர்ந்த முகமதுடனும் கால்பந்து விளையாடுகிறார். சிதோஷ்ணம் நன்றாக இருக்கும் நாட்களில் இவர்கள் தினசரி கால்பந்தோ கூடைப்பந்தோ விளையாடுகிறார்கள். அகதி மையத்தில் உள்ள மற்றவர்களைப் போல் இப்போது தான் முதன் முறையாக பனிப் பொழிவைப் பார்க்கிறார் மாலிக். அந்த அனுபவத்தால் வியந்து போன அவர்கள் விளையாடச் சென்றனர்; ஆனால், சீக்கிரமே பனியை நீண்ட நேரம் ஸ்பரிசிப்பது அத்தனை சுலபமானதல்ல என்பதைப் புரிந்து கொண்டனர்.
தனது அறையில் தொழுகை நடத்தும் மாலிக். அவர் ஒரு முசுலீம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோலிப்ரியில் இருந்து சுமார் 20 நிமிட நடை தூரத்தில் இருக்கும் மசூதிக்குச் செல்கிறார். மற்ற நாட்களில் தனது அறையிலேயே வழிபடுகிறார். அகதிகள் மதத்தை தற்காலிக நிவாரணத்திற்கான வழியாக பாவிக்கின்றனர். முசுலீமாக இருந்தாலும், கிருஸ்தவராக இருந்தாலும் தமது நம்பிக்கைகளில் ஊன்றி நிற்கின்றனர்.
காம்பியாவைச் சேர்ந்த டெம்பா தனது படுக்கையில் படுத்தவாறே தனது அறைத் தோழன் மாலிக்குடன் உரையாடுகிறார். தனது நாட்களை உறக்கத்திலும் நண்பர்களுடன் அரட்டையடிப்பதிலும் கழிக்கிறார் டெம்பா. அங்கே செய்வதற்கு வேறு வேலைகளும் இல்லை.
மாலிக்கும் அவரது நண்பர்களான ஐவரி கோஸ்ட்டைச் சேர்ந்த மௌசாவும், செனகலைச் சேர்ந்த முகமதுவும் படுக்கைக்குச் செலுலும் முன் உடற்பயிற்சி செய்கின்றனர். ஒவ்வொரு இரவும் அவர்கள் உடற்பயிற்சியைத் தவற விடுவதில்லை. அவர்கள் உடற்பயிற்சி செய்வது உடலுக்காக மட்டுமில்லை – அந்த நேரத்தில் மனதை அலைபாயாமல் நிறுத்த முடிவதுடன், நல்ல உறக்கத்திற்கும் அது உதவி செய்கிறது.
காம்பியாவின் அப்தௌலி தனது நண்பரின் அறையில் சிகரெட் பற்ற வைக்கிறார். லிபியாவில் இருந்து வந்த படகிலிருந்து 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீட்கப்பட்டவர் இவர். தற்போது லிபியாவில் கடலைக் கடக்க காத்திருக்கும் தனது சகோதரருடன் தினசரி தொலைபேசிக் கொண்டிருக்கிறார்.
2016ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கோலிப்ரி ஓட்டலுக்க்கு வந்து சேர்ந்த நாள் முதல் கானா தேசத்தைச் சேர்ந்த பாட்ரிக் அங்குள்ள சமையல் அறையில் பணிபுரிகிறார். மாதச் சம்பளத்திற்காகவே வேலை செய்ய முன்வந்திருக்கிறார், என்றாலும் இதுவரை அவரது சம்பளம் வழங்கப்படவில்லை. ஆனாலும் அவர் தொடர்ந்து வேலை செய்து வருகிறார் – அப்படி வேலை செய்வது ஒன்று தான் சுறுசுறுப்பாக தன்னை வைத்திருக்க ஒரே வாய்ப்பு என்று கருதுகிறார். அரசிடம் இருந்து பெறும் நிதியை சேமிப்பதற்காக தற்காலிக அகதி மையங்களை நடத்தும் நிறுவனங்கள் இப்படி அகதிகளிடமிருந்து சம்பளமில்லாமல் வேலை வாங்கிக் கொள்வதுண்டு.
கடந்த காலத்தின் நினைவுகளாக மத்திய தரைக்கடலைக் கடந்த நிகழ்வு அகதிகளின் சிந்தனையில் அவ்வப்போது வந்து செல்வதுண்டு. அவர்கள் அதை எப்போதும் மறப்பதில்லை. மேலே உள்ள படத்தில் அகதிகளை ஏற்றி வந்து மீட்கப்பட்ட படகிலிருந்து எழும் புகையைப் பார்க்க முடியும். அகதிகள் வரும் படகுகளை மீட்கும் இத்தாலி அரசு, அவற்றை மீண்டும் பயன்படுத்த முடியாத வகையில் எரித்து அழித்து விடுகின்றது

– நன்றி அல்ஜசிரா
தமிழாக்கம்: முகில்
மூலக்கட்டுரை: From Gambia to Italy: a refugee’s perilous journey

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க