டாஸ்மாக்கை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள், தனி நபர்கள் என போராடிக் கொண்டிருந்த போது, குடி கெடுக்கும் அரசிடம் கெஞ்சிப் பயணில்லை. மக்களே டாஸ்மாக் கடைகளை மூடும் அதிகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என முன் மாதிரியான போராட்டங்களை நடத்திக் காட்டியது மக்கள் அதிகாரம்.
நூற்றுக் கணக்கான மாணவர்களை அணி திரட்டி பச்சையப்பன் கல்லூரி அருகில் இருந்த டாஸ்மாக் கடையை நொறுக்கித் தள்ளினர். மதுரவாயல், மீஞ்சூர், விருத்தாச்சலம், நாகர்கோவில், தர்மபுரி என பல இடங்களில் டாஸ்மாக் கடையை அகற்ற மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராடினர். அந்த போராட்டங்களை காவல் துறை கொடூரமாக ஒடுக்கியது. பச்சையப்பன் கல்லூரி போராட்டத்தில் மாணவிகளை பூட்ஸ் காலால் மிதித்தது. மதுரவாயல் போராட்டத்தில் 50 வயதுப் பெண்மணியின் மண்டையை உடைத்தது காவல்துறை. தன்னெழுச்சியாக தமிழகமெங்கும் போராடியவர்களையும் கொடூரமாகத் தாக்கியது. சசி பெருமாள் அவர்களைக் கொன்றே போட்டது தமிழக அரசு. இப்போராட்டங்களின் போது மக்கள் அதிகார தோழர்கள் பலர் பல நாட்கள் சிறை வைக்கப்பட்டனர். பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் சிறை வைக்கப்பட்டனர்.
மூடு டாஸ்மாக்கை !
குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே !
அடிக்க வரும் போலீசுக்கு அஞ்சாதே !
மூடு கடையை எவன் வருவான் பார்ப்போம் !
நம்ம ஊரில் இனி கிடையாது டாஸ்மாக்கு , அடிச்சு தூக்கு !
இந்த பாடலுக்காக தோழர் கோவன் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். எந்த பாடலுக்காக அவர் கைது செய்யப்பட்டாரோ அந்த பாடலானது தற்போது தமிழக மக்களால் செயல் வடிவம் பெற்றுள்ளது. தற்போது தமிழகமெங்கும் மக்கள் கொதித்தெழுந்து டாஸ்மாக்கை உடைத்து போராடுகின்றனர். விழிபிதுங்கி நிற்கிறது காவல்துறையும் அதிகாரவர்க்கமும்.
டாஸ்மாக்குக்கு எதிரான இந்த போராட்டத் தீ பரவட்டும் !