Thursday, April 17, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்மேக் இன் இந்தியா : சுதேசி வேசத்தில் வரும் விதேசி முதலீடு !

மேக் இன் இந்தியா : சுதேசி வேசத்தில் வரும் விதேசி முதலீடு !

-

மீபத்தில் பாதுகாப்புத்துறையில்மேக் இன் இந்தியாவை’ அமல்படுத்த அதாவது, ஆயுதத் தளவாடங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு ஏற்றதொரு கொள்கை வரைமுறைகளை உள்ளடக்கிய ‘மாதிரி வடிவமைப்பை’ மத்திய அரசு உருவாக்கியுள்ளது. கடந்த 20-05-2017 அன்று இந்தியாவின் “பாதுகாப்புத் துறை கொள்முதல் கவுன்சில்” (Defence Acquisition Council) இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது அடுத்தபடியாக நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காகவும், அதன் பின்னர்  ‘பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டி’-யின் ஒப்புதலுக்காகவும் அனுப்பப்பட உள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இருந்து இத்திட்டத்திற்கு ஏற்கனவே பச்சைக் கொடி காட்டப்பட்டு விட்டதால் இவையெல்லாம் இன்னும் ஓரிரு வாரங்களில் கிடைத்து விடும் என்பது அதிகாரிகளின் நம்பிக்கை!

பார்த்தால் இது ஏதோ மோடியின் சுதேசி சாதனை போன்று தோற்றம் தரலாம். சுதேசியின் வேசத்தைக் கலைத்துப் பாருங்கள்! அது அக்மார்க் விதேசி என்பது தெரியவரும்!

‘பாதுகாப்புத்துறை கொள்முதல் வழிமுறை’யின் (Defence Procurement Procedure) ஒரு அத்தியாயமாக வரும் இப்புதிய ‘மாதிரி வடிவமைப்பில்’ நான்கு உட்பிரிவுகள் உள்ளன. நீர்மூழ்கிக் கப்பல்கள், ஒற்றை இயந்திரப் போர் விமானம், ஹெலிகாப்டர்கள் மற்றும் கவச வாகனங்கள், போர் பீரங்கிகள் வாங்குவது / தயாரிப்பது குறித்த பிரிவுகளே அவை. இப்புதிய ‘மாதிரி வடிவமைப்பு’ இந்நான்கு பிரிவுகளின் கீழ் வரும் ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களின் உற்பத்தியைத் தனியார் மற்றும் அந்நிய பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில் முழுமையாக ஒப்படைக்க வழிவகுக்கின்றது.

இதன்படி அரசிடம் உற்பத்தி ஆணையைப் (Order) பெறும் தனியார் ஆயுத மற்றும் போர்த்தளவாட உற்பத்தி நிறுவனங்கள், முன்னணி ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுவர். அவர்கள் (அரசாங்கத்தின் அனுமதி பெற்ற) பன்னாட்டு நிறுவனங்களுடன் கூட்டு வைத்துக் கொண்டு உற்பத்திப் பொருளின் ஒரு பகுதியையோ, பாகங்களையோ இறக்குமதி செய்து கொள்ளலாம். அதே போல பன்னாட்டு ஆயுதத் தளவாட நிறுவனங்கள் இந்தியாவில் ஒரு புதிய நிறுவனம் தொடங்கினால் அதுவும் இந்திய நிறுவனமாக கணக்கில் கொள்ளப்படும். மேக் இன் இந்தியாவின் சலுகைகள் அவர்களுக்கும் நேரடியாகக் கிடைக்கும். அவர்கள் உற்பத்திப் பொருளின் பல்வேறு பகுதிகளையோ, பாகங்களையோ தங்களது தாய் நிறுவனத்தில் இருந்து இறக்குமதி செய்து அதனை இந்தியாவில் வைத்து ஒருங்கிணைத்துக் கொள்ளலாம். இந்த நடைமுறைக்குப் பெயரும் ‘மேக் இன் இந்தியா’ தான். அப்படிப் பார்த்தால் கொக்கோ கோலாவும், பெப்சியும் கூட ‘மேக் இன் இந்தியா’தான்!

இந்த நடைமுறையின் மூலம் உலகின் ஆயுத ஏற்றுமதி செய்யும் வெகு சில நாடுகளின் பட்டியலில் ‘நாமும்’ இடம் பெற்றுவிடுவோம் என்கிறது அரசின் ஆருடம். ஆனால் இந்த ‘நாம்’ என்பது இந்தியாவா அல்லது இந்தியாவில் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களும், அவர்களோடு கைகோர்த்து நிற்கும் தரகு முதலாளிகளின் நிறுவனங்களுமா?

தற்போது இந்த நான்கு பிரிவுகளின் கீழ் வரும் ஆயுதத் தளவாடங்களுக்கான உற்பத்தி ஆணையை பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு அள்ளித் தரவே சுமார் 1.5 இலட்சம் கோடி மதிப்புள்ள ஆயுதத் தளவாடங்கள் கொள்முதலை நிறுத்தி வைத்திருக்கிறது அரசு. இன்னும் ஒரிரு வாரங்களில் ‘பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டி’யின் ஒப்புதல் கிடைத்த பிறகு இந்த 1.5 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வேலை ஆணையைப் பெற பல்வேறு உள்நாட்டுத் தரகு முதலாளி நிறுவனங்கள் வரிசையில் காத்திருக்கின்றன.

இந்திய அரசின் ஆயுதக் கொள்முதல் செயல்திட்டம்-75(I) ன் படி இந்தியக் கடற்படைக்கு 6 நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டுவதற்காக ரூ.50,000 கோடி ஒதுக்கியுள்ளது. இந்தியாவின் தனியார் கப்பல் கட்டும் நிறுவனங்களான எல்&டி நிறுவனமும், ரிலையன்ஸ் பாதுகாப்பு மற்றும் பொறியியல் நிறுவனமும் இந்தப் பணிக்கான ஆணையைப் பெற வரிசையில் நிற்கின்றன. நீர்மூழ்கி தயாரிப்பதற்கான தொழில்நுட்பம் இந்தியாவில் எந்த நிறுவனத்திடமும் இல்லை என்ற வகையில் மேக் இன் இந்தியாவின் இந்தப் பணி ஆணை, மறைமுகமாக ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கே போய்ச் சேரும்.

அதே போல இந்திய விமானப்படைக்கு நூறு ‘ஒற்றை இயந்திர போர் விமானங்கள்’ வாங்க ரூ.60,000 கோடியும், இந்தியத் தரைப்படைக்கு எஃப்.ஐ.சி.வி. என்றழைக்கப்படும் கவச வாகனங்கள் வாங்க ரூ.50,000 கோடியும் ஒதுக்கியுள்ளது. டாட்டாவின் துணை நிறுவனம் ஒன்றும் மஹிந்திரா நிறுவனமும் போர் விமானங்களுக்கான பணி ஆணையைப் பெற வரிசையில் நிற்கின்றன. கவச வாகனங்களுக்கான பணி ஆணையைப் பெற எல்&.டி, மஹிந்திரா மற்றும் டாட்டா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் வரிசையில் காத்திருக்கின்றன. இப்படி கிட்டத்தட்ட 1.6 இலட்சம் கோடியை உள்நாட்டு தரகு முதலாளிகளின் நிறுவனங்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அள்ளிக் கொடுக்கத் தயாராக உள்ளது இந்திய அரசு.

மேக் இன் இந்தியா திட்டத்தின் படி, வெளிநாடுகளில் இருந்து ஆயுதத்தளவாடங்கள் இறக்குமதி செய்வது படிப்படியாகக் குறைந்து உள்நாட்டிலேயே ஆயுதத் தளவாடங்கள் உற்பத்தி செய்வதற்கானத் திட்டம் என்று தான் மோடியும் அவர் பஜனை பாடும் மீடியாக்களும் பேரிரைச்சலோடு கதறினார்கள். ஆனால் தற்போது நடைமுறைப்படுத்தப் பட்டிருப்பது, ‘பழைய கள்ளை புதிய மொந்தையில்’ ஊற்றித் தரும் நிகழ்வு தான். இத்திட்டத்தின் மூலம் இங்கு ஆயுதத் தளவாட உற்பத்தி நிறுவனம் தொடங்க வரும் பன்னாட்டு நிறுவனங்களோ, உள்நாட்டு தரகு முதலாளிகளின் நிறுவனங்களோ அரசின் சலுகைகளையும், மலிவான மனித வளத்தையும் பெறுவார்கள். மேக் இன் இந்தியா திட்டத்தின் நோக்கமும் இது தானே ஒழிய உள்நாட்டு உற்பத்தி அல்ல.

சுருக்கமாகச் சொன்னால் ‘மேக் இன் இந்தியா’ என்பது ’அன்னிய நேரடி முதலீட்டின்’ மரு வைத்த கதாபாத்திரம். சிறிது விளக்கமாகச் சொன்னால் சுதேசி என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை பன்னாட்டு ஆயுதத் தளவாட உற்பத்தி நிறுவனங்களுக்கும், உள்நாட்டு தரகு முதலாளிகளின் நிறுவனங்களுக்கும் பிரித்துக் கொடுப்பது தான்!! மேட் இன் அமெரிக்கா என்பது நமது பணத்தை எடுத்துச் செல்கிறது. மேக் இன் இந்தியா என்பது நமது பணம், இயற்கை வளம், மனித வளம், மக்கள் வரிப்பணம் அனைத்தையும் எடுத்துச் செல்கிறது.

அதன்படி மோடியின் சுதேசிப் பாசம் என்பது மழையே பெய்யாமல் கலைந்து போகும் ஒரு நரியின் ஆட்டு வேடம் மட்டுமே!

மேலும் படிக்க: