Tuesday, April 22, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்பாஜக போலீசு கொன்ற 5 விவசாயிகளின் கண்ணீர்க் கதை !

பாஜக போலீசு கொன்ற 5 விவசாயிகளின் கண்ணீர்க் கதை !

-

த்தியப் பிரதேசத்தில் கொல்லப்பட்ட 5 பேர்களும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் ஒருவருக்கும் சொல்லிக் கொள்ளுமளவு விவசாய நிலமில்லை. அவர்கள் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்த குற்றத்திற்காக கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

ம.பி அரசால் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் (  இடப்புறம் மேலிருந்து கடிகாரச் சுற்றில்) அபிஷேக், சத்யநாரயன், செனிராம், பூனம் சந், மற்றும் கன்யாலால்

அபிஷேக் தினேஷ் பத்திதார்

55 வயது தினேஷுக்கு இன்னும் குடும்ப பாகமாக நிலம் கைக்கு வரவில்லை. அவருக்கு நான்கு பிள்ளைகள். கடைக்குட்டிதான் கொல்லப்பட்ட அபிஷேக். பதினொராம் வகுப்பு படிக்கும் அபிஷேக் போராட்டத்தின் போது மக்களோடு சேர்ந்து முழக்கமிட்டிருக்கிறார். எந்த வன்முறையிலும் ஈடுபடாத என் மகனை கிட்டே வந்து சுட்டுக் கொன்றிருக்கிறார்கள் என்கிறார் தினேஷ். கடந்த செவ்வாய் அன்று இக்குடும்பம் அபிஷேக்கின் உடலுடன் நெடுஞ்சாலையை மறித்து போராடியது. மக்கள் போராட்டத்தால் பயந்து போன கலெக்டர் அங்கே பெரும் போலீசு இருந்தும் தள்ளுமுள்ளுளில் சிக்கிக் கொண்டார்.

பூர்ணசந்த் எனும் பாப்லு ஜகதீஷ் பத்திதார்.

னவரி 2016-ல் தான் பூர்ணசந்த் தனது தந்தையை பறிகொடுத்திருந்தார். இளங்கலை அறிவியலை படித்துக் கொண்டிருந்தவர் இரண்டாம் ஆண்டிலேயே குடும்ப நிலத்தை கவனிப்பதற்காக படிப்பை விட்டு விலகினார். குடும்ப நிலத்தில் அவருக்கென்று பங்கு இன்னமும் கைக்கு வந்து சேரவில்லை.அவரது பொறுப்பில் விவசாயம் நடப்பினும், சோயாபீன், பூண்டு, கோதுமை போன்ற பயிர்களுக்காக செலவழித்த காசு கூட வராது என்ற நிலையில் அவர் போராட்டத்தில் கலந்து கொண்டார்.

மற்ற விவசாயிகளோடு உரையாடிக் கொண்டிருந்த போது பூர்ணசந்த் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வாகனத்தில் வந்த போலீஸ் அவரைச் சுட்டுக்கொன்றதாக அவரது மாமா கன்ஷ்யாம் தெரிவித்துள்ளார். போலீஸ் எச்சரிக்கை எதுவும் கொடுக்காமல், கண்ணீர் குண்டும் போடாமல் நேரடியாக சுட்டுக் கொன்றது எனகிறார் பூர்ணசந்தின் நண்பர் கந்தையாலால். முதல் குண்டு பூர்ணசந்தை தாக்கியது. இரண்டாவது குண்டில் தனக்கு காயம் ஏற்பட்டதாக கூறுகிறார் கந்தையாலால்.

பூர்ணசந்தின் இளம் மனைவியும், வயதான தயாரும்தான் மிச்சமிருக்கிறார்கள். அவர்கள் எப்படி நிலத்தை கவனிப்பார்கள் என்கிறார் உறவினர் சுபாஷ் பத்திதார்.

சைன்ராம் கன்பத் பத்திதார்.

ப்ரல் 29 அக்க்ஷய திரியை அன்றுதான் சைன்ராமுக்கு திருமணம் நடந்தது. அவரது இளம் மனைவி கடந்த செவ்வாய் முதல் கடும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார். இரண்டு பைகாவுக்கும் குறைவான நிலத்தை வைத்தருக்கும் தந்தை, குடும்ப தேவைகளுக்காக பண்ணை வேலையை கூலிக்கு செய்கிறார்.  எனது மகனின் கனவு இராணுவத்தில் சேர்வது என்கிறார் அவர். அதற்கென்றே மூன்று முறை முயன்றும் சைன்ராம் தேர்வாகவில்லை. மற்ற தேர்வுகளில் வெற்றி பெற்றாலும் சிறிய கண்பார்வைக் குறைபாட்டினால் அவருக்கு இராணுவத்தில் இடம் கிடைக்கவில்லை.

இக்குடும்பத்திற்கு போதிய நிலமிருந்த போதும் 1970-களில் கட்டப்பட்ட அணை ஒன்றுக்காக அரசு அந்நிலத்தை கையகப்படுத்தியது. அப்போது கொடுக்கப்பட்ட மிகக் குறைந்த நிவாரணத்தை வைத்து புதிய நிலம் ஏதும் வாங்க முடியவில்லை. அப்போது இருந்து அவர்களுக்கு சிரம திசைதான். தற்போது ம.பி அரசு வாக்குறுதியின் படி சைன்ராமின் தம்பி, 12-ம் வகுப்பு படிப்பவருக்கு அரசு வேலை கிடைக்குமா என்று ஏக்கத்தில் இருக்கிறார்கள் குடும்பத்தினர்.

சத்யநாராயண் மங்கிலால் தன்கார்.

12-ம் வகுப்பு வரை படித்திருக்கும் இவர் மன்ட்சூரிலிருந்து 20 கி.மீட்டர் தொலைவில் இருக்கும் லோத் கிராமத்தைச் சேர்ந்தவர். கூலி வேலை செய்கிறார். தினசரி வருமானம் ரூ. 200. ஆறு பைகா நிலம் வைத்திருக்கும் இவரது குடும்பத்திற்கு வருமானம் இவரிடமிருந்துதான் கிடைத்தது. இவரைத் தவிர முழு குடும்பமும் விவசாயத்தில் ஈடுபட்டாலும் வருமானம் இல்லை.

நான்கு பிள்ளைகளில் கடைக்குட்டியான சத்யநாராயனை போராட்டத்திற்கு அனுப்பியிருக்க கூடாது என்று வருந்துகிறார் அண்ணன் ராஜு. தனக்கு ஆதார் அட்டை இல்லை என்பதால் அரசு அறிவித்திருக்கும் ஒரு கோடி ரூபாய் கிடைக்குமா என்று சந்தேகப்படுகிறார் தந்தை மங்கிலால்.

கந்தையா துரிலால் பத்திதார்.

சில்லூர் பிபிலியாவைச் சேர்ந்த இவர் இரண்டு குழந்தைகளுக்கு தந்தை. எட்டாவது வகுப்பைத் தாண்டாதவர் தனது மகன் மகளை பள்ளியில் சேர்த்து படிக்க வைத்திருக்கிறார். போலிஸ் இப்படி நடந்து கொள்ளாது என்று எதிர்பார்த்துதான் அவர் போலீஸ் அழைத்த போது தைரியமாக நடந்து சென்றார். ஆனால் அவர்கள் அவரை சுட்டு கொன்று விட்டார்கள்.

விவசாயம் நட்டமடையும் துறையாக மாறி விட்டது எனகிறார் அவரது அண்ணன் கலுராம்.

செய்தி ஆதாரம்: