Monday, April 21, 2025
முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்அரபுலகில் தோன்றிய நவீன வேதியியலின் பிதாமகர்கள் - வீடியோ

அரபுலகில் தோன்றிய நவீன வேதியியலின் பிதாமகர்கள் – வீடியோ

-

வீன வேதியியல் தொழில்துறை தற்போதைய நவீன உலகத்திற்கு மறுவடிவம் கொடுத்துள்ளது. அது புதிய எரிபொருட்கள், மருந்துகள் மற்றும் புதிய மூலக்கூறுகளை நமக்கு வழங்கியுள்ளது. ஆனால் வேதியல் ஆய்வுமுறை மற்றும் கோட்பாடுகளுக்கான அடிப்படையை அறிய ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லவேண்டும்.

இன்று வானளவு கட்டிடங்களுடன் நவீனமாக தோற்றமளிக்கும் தோஹா, (கத்தார்) துபாய் மற்றும் இதர அரபு உலக நகரங்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் இப்படி இருந்திருக்கவில்லை. அரபுலகின் இன்றைய அனைத்து கட்டுமானங்கள் மற்றும் வளர்ச்சிக்கு அடிப்படை அங்கு கிடைக்கும் எரிபொருட்கள் – வேதியியல் தொழில்துறை. அறிவியலுக்கும், நவீன வேதியியல் தொழில்துறைக்கும் இஸ்லாமிய அரபுலகம் அளித்த பங்களிப்பை இந்த ஆவணப்படம் விளக்குகிறது.

9 மற்றும் 14-ம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் அறிவியலில் ஒரு பொற்காலம் இருந்தது. அப்போது இஸ்லாமிய உலகின்  ஜபீர் இப் ஹய்யன் (Jabir Ibn Hayyan) மற்றும் அல்-ராஸி (Al-Razi) போன்ற அறிஞர்கள் அறிமுகப்படுத்திய கடுமையான சோதனை அணுகுமுறை நவீன அறிவியலுக்கு அடித்தளமிட்டன.

அறிவியலின் பொற்காலம் என்ற ஆவணப்படத்தின் இந்த அத்தியாயத்தில் கோட்பாட்டு அறிவியலாளர் ஜிம் அல் காலி (Jim al-Khalili) , அந்த அறிவியல் அறிஞர்கள் வெறும் மூடநம்பிக்கைகள் அடங்கிய ரசவாதமாக இருந்தவற்றை வேதிஅறிவியலாக மாற்றியமைக்கும் நடவடிக்கையை துவக்கி வைத்தனர் எனும் தேடலுக்குள் நம்மை அழைத்துச் செல்கிறார்.

மலிவான உலோகங்களை தங்கமாக உருமாற்ற முயற்சி செய்த மத்திய காலத்தின் ரசவாதத்திலிருந்து ஆரம்பிக்கும் ஜிம் அல் காலி பின்னர் ஜபீர் இப் ஹய்யானின் பங்களிப்புகளை விவரிக்கிறார். பின்னர் அல்-கிண்டி (Al-Kindi), அல்-ராஸி (Al-Razi) மற்றும் இதர திறமை, செல்வாக்குமிக்க வேதியலாளர்களின் பங்களிப்புகளின் மூலம் நவீன வேதிஅறிவியல் எப்படி பரிணமித்தது என்ற கதையை விளக்குகிறார்.

அரபுலகம் அல்லது முஸ்லீம்கள் என்றாலே அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது, எதற்கெடுத்தாலும் மதத்தின் பின்னே ஓடுவார்கள், பிற்போக்குவாதிகள் என்ற சித்திரமே இன்றைய உலகின் பொதுப்புத்தியில் உள்ளது. ஆனால் நவீன அறிவியலில் அரபுலகத்தின் பங்கு முக்கியமானது. தொழுகைக்கு முன்னர் கை, கால்கள் கழுவி சுத்தமாக இருக்க வேண்டும் என்ற சடங்கின் விளைவாக சோப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இசுலாமிய உலகில்தான் முதன்முதலாக சோப்பு பயன்படுத்தப்பட்டது. சுத்தம் பற்றிய விதிகளை வகுத்தளித்த கடவுள் சோப் குறித்து சொல்லவில்லை. இப்படித்தான் இசுலாம் உலகில் நவீன வேதி அறிவியல் மலர்ந்தது.

நன்றி: அல்ஜசீரா