Thursday, April 17, 2025
முகப்புஉலகம்அமெரிக்காஆப்கான் : குழந்தைகளை சல்லடையாக்கிய அமெரிக்க இராணுவம்

ஆப்கான் : குழந்தைகளை சல்லடையாக்கிய அமெரிக்க இராணுவம்

-

சியார் குல் மற்றும் அவருடைய இரு மகன்களும் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்ட இடம்

ப்கானிஸ்தானைச் சேர்ந்த நேங்கர்கார் (Nangarhar) மாநிலத்தில் ஒரு அப்பாவும் அவரது இரண்டு இளைய மகன்களும் அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதையோர குண்டு வெடிப்பில் தங்களது வாகனம் சிக்கியதை அடுத்து கண்மூடித்தனமாக இந்த படுகொலையை நிகழ்த்தியுள்ளது அமெரிக்க இராணுவம்.

செங்கல் சூளை தொழிலாளியான சியார் குல்(Ziyar Gul) அவரது  மகன்களுடன் (8 வயது மற்றும் 10 வயது) வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இந்த கொடுமை நிகழ்ந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினர். அவரது மூன்றாவது மகன் எப்படியோ துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பித்துவிட்டான்.

அமெரிக்க படையினரது கார் குண்டுவெடிப்பில் சிக்கிக் கொண்டதும் அவர்கள் சுட ஆரம்பித்து விட்டதாக மாநில ஆளுநரின் செய்தித் தொடர்பாளரான அட்டூல்லாஹ் கோகியானி (Attaullah Khogyani) கூறினார். இது தொடர்பான விசாரணையை தொடங்கியிருப்பதாகவும் கூறினார்.

தாங்கள் கொன்றவர்கள் குழந்தைகள் மற்றும் நிரயுதபாணியான மனிதன் என்பதை அவர்கள் [அமெரிக்க படையினர்] அறியவில்லையா? எப்படி அவர்கள் குழந்தைகளை நேரடியாக சுட்டுக்கொலை செய்யலாம்? தொடர்ச்சியான துப்பாக்கிச்சூட்டினால் அவர்களின் உடல்கள் கண்ட துண்டமாகி விட்டது என்கிறார் சியார் குல்லின் சகோதரர் நியாஸ் குல்(Neyaz Gul). இதுபோல அப்பாவி ஆப்கான் மக்களை கொன்றதற்காக இதுவரை இவர்கள் யாரும் பொறுப்பேற்பதில்லை என்றும் அவர் கூறினார்.

ஆப்கானில் இருக்கும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளரான டக்ளஸ் ஹை (Douglas High), ஆப்கான் + அமெரிக்க படையினர் வாகனங்களில் சென்ற போது நடைபெற்ற இந்த சாலையார குண்டு தாக்குதலை உறுதிபடுத்தினார். “பொதுமக்கள் சாவு குறித்து எங்களுக்கு அதிகாரப்பூர்வ குற்றச்சாட்டுகள் வரவில்லை, எங்களது வீரர்கள் தற்காப்பிற்காக மட்டும் திருப்பிச் சுட்டனர்” என்று கூறியிருக்கிறார்.

ஐநா கணக்குப்படி 2016-ம் ஆண்டில் மட்டும் ஆப்கானில் 3,498 மக்கள் கொல்லப்பட்டும், 7,920 மக்கள் காயமடைந்தும் இருக்கின்றனர். 2009-ம் ஆண்டிலிருந்து இதுவரை 11,418 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

அமெரிக்க இராணுவத்திற்கு எதிராக அல்ல எதிரே யார் வந்தாலும் சுடுவார்கள்!

பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் நேங்கர்கார் மாநிலத்தில் சுமார் 800 ஐ.எஸ் தீவிரவாதிகள் இருப்பதால் அமெரிக்க இராணுவம் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. தற்போது ஆப்கானில் சுமார் 8,500 அமெரிக்கத் துருப்புக்களும், நேட்டோ நாடுகளின் சார்பில் 5,000 துருப்புக்களும் இருக்கின்றனர். டிரம்ப் வந்த பிறகு மேலும் 5,000 வீரர்களை அனுப்ப அமெரிக்க அரசு முடிவு செய்திருக்கிறது.

2001-ம் ஆண்டிலிருந்து ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருக்கும் அமெரிக்க இராணுவம் கொன்றதற்கு மட்டுமல்ல தின்தற்கும் கணக்கு இல்லை. ஒரு சிறு சப்தம், சிறு சலனம் வந்தால் கூட உடனே சுட வேண்டும் என்பதே அமெரிக்க இராணுவத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கும் பயிற்சி. உள்ளூர் மக்களைக் கொல்லக் கூடாது என்றோ இல்லை கொன்றால் தண்டனை என்றோ உத்தரவு இருந்தால் ஒரு அமெரிக்க இராணுவ வீரன் கூட அங்கே இருக்க விரும்ப மாட்டான்.

எல்லா ஆக்கிரமிப்பு இராணுவங்களும் இப்படித்தான் ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளின் மக்களை கிள்ளுக்கீரைகளாக கருதி கொல்கின்றன. இங்கே வீடுகளைக் கட்டப் பயன்படும் செங்கல்களை தயாரிக்கும் ஒரு தொழிலாளியும் அவரது இரு மகன்களும் ஒழிக்கப்பட்டிருக்கின்றனர். ஐரோப்பாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் கொல்லும் ஒவ்வொரு மனித உயிருக்கும் இந்த உலகமே கண்ணீர் வடிக்கிறது. ஆனால் ஆப்கானில் இந்த தொழிலாளியின் மரணத்திற்கு, இரண்டு இளம் துளிர்களின் அழிப்பிற்கும் கண்ணீர் இருக்கட்டும், அந்த செய்திகளை படிப்பதற்கு கூட கண்கள் இல்லையே?

செய்தி ஆதாரம்:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க