Monday, April 21, 2025
முகப்புசெய்திநீலகிரி : எருமைகளின் எமனாக தமிழக வனத்துறை

நீலகிரி : எருமைகளின் எமனாக தமிழக வனத்துறை

-

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கர்நாடக எல்லையோரம் அமைந்துள்ளது மசினகுடி ஊராட்சி. இங்கு வசிப்பவர்களில் பெரும்பான்மையானோர் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மக்கள். இம்மக்களின் பிராதன தொழில் மாடு மேய்ப்பது, சாணி எரு தயாரித்து விற்பது மற்றும் ராகி போன்றவை பயிரிடுவது ஆகும்.

மசினகுடி ஊராட்சிக்குட்பட்ட மாயார், மாவனல்லா, வாழைத்தோட்டம், செம்மந்தம், சீகூர் மற்றும் சிங்கரா ஆகிய பகுதிகள் “முதுமலை வனவிலங்கு சரணாலயமாக” அறிவிக்கப்பட்டன. பின்னர் அப்பகுதியை வனத்துறை “புலிகள் காப்பகமாக அறிவித்தது. அதன் பின்னர் வனப்பகுதியில் கால்நடைகளை மேய்க்கும் உரிமைகளை அப்பகுதி மக்களிடமிருந்து வனத்துறை பறித்துவிட்டது.

தங்களின் வாழ்வாதாரமான கால்நடை மேய்க்கும் உரிமை பறிக்கப்பட்டதால் சீகூர் மற்றும் சிங்கரா வனப்பகுதிகளை முதுமலை புலிகள் காப்பகத்துடன் இணைப்பதை எதிர்த்தும், அறிவிக்கப்பட்ட முதுமலை புலிகள் காப்பக திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் மசினகுடியில் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் அப்பகுதி மக்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். அதன் பிறகு மசினக்குடி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சிங்கரா மற்றும் சீகூர் வனப்பகுதியில் தங்களது எருதுகளை மேய்க்க அனுமதிக்கப்பட்டனர்.

சமீபகாலமாக இப்பகுதியில் விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகள் தொடர்ச்சியாக மர்மமான முறையில் இறந்து வருகின்றன. கடந்த பத்து நாட்களுக்கு முன்பு சீகூர் மற்றும் சிங்கரா வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற சுமார் 80 எருதுகள் காணவில்லை என்று அப்பகுதி வனத்துறை அதிகாரிகளிடம் மசினக்குடி விவசாயிகள் முறையிட்டுள்ளனர். ஆனால் அதிகாரிகளோ அதனை கண்டுகொள்ளாமல் இழுத்தடித்து கடந்த ஜூன் 11 அன்று வனப்பகுதிக்கு சென்று தேடுவதற்கு விவசாயிகளுக்கு அனுமதி வழங்கினர்.

வனத்துறையினரின் உதவியோடு விவசாயிகள் தேடியபோது மாயாறை ஒட்டிய வனப்பகுதியில் சுமார் 500 அடி பள்ளத்தாக்கில் விழுந்து அழுகிய நிலையில் தங்கள் கால்நடைகள் இறந்து கிடந்ததை கண்டு  அதிர்ச்சியடைந்தனர். தங்களது கால்நடைகளை வனத்துறையினர் தான் விரட்டிச் சென்று பள்ளத்தாக்கில் விழச்செய்து கொன்றிருக்க வேண்டும் என்று விவசாயிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் வனத்துறை அதிகாரிகளோ, மேய்ச்சலுக்கான இடத்திற்கும், எருமைகள் விழுந்து இறந்த பள்ளத்தாக்கிற்கும் இடையே சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் உள்ளதாகவும் தாங்கள் எருமைகளை விரட்டவில்லை என்றும் கூறியுள்ளனர்.

ஊட்டிக்கு அடுத்தபடியாக மசினகுடி சுற்றுலா தளமாக வளர்ந்து வருகிறது. அதன் காரணமாக அப்பகுதியில் ரிசார்ட்களும் புதிது புதிதாக முளைத்துள்ளன. இந்நிலையில் தான் கடந்த பிப்ரவரி மாதம் நூற்றுக்கணக்கான கால்நடைகள் மர்மமான முறையில் இறந்துள்ளன. தற்பொழுது ஒரே நேரத்தில் எண்பது எருமைகள் இறந்திருப்பது என்பது தற்செயலான நிகழ்வு அல்ல.

மலைப்பகுதி மற்றும் கானகப்பகுதிகளில் வாழும் பழங்குடி – இதர பிரிவு மக்களை எப்படியாவது தூக்கி எறிவதற்கென்றே உருவாக்கப்பட்டதுதான் வனத்துறை எனும் அரசுப் பிரிவு. சுள்ளி பொறுக்கினார்கள், முயல் அடித்தார்கள் என்று தமிழகம் முழுவதும் இம்மக்கள் வனத்துறைக்கு கொட்டிக் கொடுத்த ஐந்து, பத்து ரூபாய்களை சேர்த்தால் நாம் நூறு வனங்களை உருவாக்கி விடலாம். அடுத்து சுற்றுலா நிறுவனங்களுக்காக அனைத்து வனப்பகுதிகளையும் காவு கொடுப்பதை மும்முரமாக செய்து வரும் அரசு பழங்குடி மக்களையும் சேர்த்து காவு கொடுப்பதை செய்து வருகிறது.

ஏற்கனவே வறட்சி, அரசின் அலட்சியம் என்று வாழ்வாதாராம் பாதிக்கப்பட்டு வதைபடும் இப்பழங்குடி மக்கள் வனப்பகுதிகளில் மாடு மேய்க்க கூடாது  என்று சொன்னால் எங்கேதான் போவார்கள்? குடிநீரின்றி யானைகள் மக்கள் குடியிருப்புக்கள் புகுந்து அழிப்பது போல வாழ வழியின்றி அலையும் மக்கள் அரசு அதிகார மட்டங்களுக்குள் சென்று கேள்வி கேட்காமல் நிம்மதியில்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க