மும்பை மாநகராட்சி பள்ளி குழந்தைகளில் மூன்றில் ஒரு சதவீதம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவினால் பாதிகப்பட்டுள்ளனர் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 2013-14-ஆம் ஆண்டுகளில் 8% ஆக இருந்த ஊட்டச்சத்துக் குறைபாடு 2015-16-ல் 34% ஆக வளர்ந்துள்ளது. பிரஜா பவுண்டேசன் என்ற தன்னார்வ நிறுவனம் மும்பை மாநகாட்சி பள்ளி மாணவர்களிடையே நடத்திய ஆய்வு முடிவில் இது தெரியவந்துள்ளது.
இப்பள்ளிகளில் பயிலும் 10 லட்சம் மாணவர்களில் 36% பேர்களிடம் அதாவது 3,84,485 குழந்தைகளிடம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் 64,681 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனடிப்படையில் மொத்தமாக 1,30,680 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

இதில் ஆண் குழந்தைகளில் 33% பேரும், பெண் குழந்தைகளில் 35% பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 2013-14 -ம் ஆண்டுகளில் ஆண் குழந்தைகள் 9%, பெண் குழந்தைகள் 6% ஆக இருந்தது மேற்கண்டவாறு அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இதே போன்று டயோரியா எனப்படும் வயிற்றுப் போக்கும் அதிகரித்து வருவதும் தெரியவந்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு இது முக்கியமான காரணி என ஆய்வு தெரிவிக்கிறது.
மும்பையின் கிழக்கு புறநகர் பகுதியான மன்குர்த் மற்றும் கோவண்டி பகுதி குழந்தைகள் தான் ஊட்டச்சத்து குறைபாட்டினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 2015-16 ஆய்வின் படி சுமார் 15,038 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதே காலகட்டத்தில் மதிய உணவுதிட்டத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட தொகை முழுவதும் பயன்படுத்தப்பட்டாமல் திரும்ப அனுப்பபட்டதும் தெரிவந்துள்ளது.

2013-14 ஆம் ஆண்டுகளில் 1-முதல் 5 வகுப்பு குழந்தைகளுக்கு என்று ஒதுக்கப்பட்ட மதிய உணவு பட்ஜெட்டில் 81% உபயோகப்படுத்தப்பட்டு வந்தது 2015-16-ல் 65% ஆக குறைந்துள்ளது. 6-8 வகுப்பு மாணவர்களுக்கு ஒதுகப்பட்ட பட்ஜெட் பயன்பாடு 83% லிருந்து 64% ஆக குறைந்துள்ளது.
இந்நிலையில் மாட்டுக்கறியை தடை செய்ததன் மூலம் ஏழைகளுக்கு மலிவாகக் கிடைத்து வந்த புரதத் சத்து நிறுத்த்தப்பட்டது. பாஜக ஆளும் மகாராஷ்டிரத்தில் குழந்தைகள் சோம்பிகளாக நலிவடைகின்றனர்.
2014-ல் மத்திய அரசாக பா.ஜ.க அரசு பொறுப்பேற்ற பிறகு முன்பிருந்ததைவிட மிக வேகமாக கார்ப்பரேட் கொள்ளைகளை அமல்படுத்தி வருவதும், அரசின் கடமைகளில் இருந்து விலகி வருவதும் மக்களிடம் ஏற்படுத்தி இருக்கும் பாதிப்பை இந்த ஆய்வு தோலுரித்து காட்டியுள்ளது.
செய்தி ஆதாரம்:
1 In Every 3 Children In Mumbai Municipal Schools Malnourished, Up 4 Times Since 2013-14