Monday, April 21, 2025
முகப்புசெய்திபல்லாவரம் பொதுவழியை ஆக்கிரமிக்கும் பொறுக்கி நித்தியானந்தா சீடர்கள்

பல்லாவரம் பொதுவழியை ஆக்கிரமிக்கும் பொறுக்கி நித்தியானந்தா சீடர்கள்

-

சென்னை பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட 11வது வார்டு பச்சையம்மன் கோயில் தெருவில் 2.19 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் 17 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இந்த 2.19 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் என்னுடையது என்று ராமநாதன் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கிடையில் ராமநாதன் மகள் வள்ளி தலைமையில் நித்யானந்தாவின் சீடர்கள் எனக்கூறி, இடத்தை கைப்பற்றிக்கொள்ளும் சதித்திட்டத்தோடு முகாமிட்டுள்ளனர். இதனால் இப்பகுதியில் காலம்காலமாக வசிக்கும் மக்களுக்கும், பொறுக்கி சாமியார் நித்தியின் சீடர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கடந்த 6-ம் தேதி பல்லாவரம் தாசில்தார் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் “இந்த இடம் யாருக்கு சொந்தம் என்பது பற்றி கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்படும், அதற்காக உங்களிடம் உள்ள ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்” என தாசில்தார் கூறியுள்ளார். அப்பொழுது அங்கு நித்தியின் சீடர்கள் வந்ததால் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு நித்யானந்தா சீடர்கள், அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவர்கள் மற்றும் 600 குடும்பத்தினர் பயன்படுத்தும் பொதுவழியை 5 பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி காம்பவுண்ட் சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதை பார்த்ததும் ஆத்திரம் அடைந்த மக்கள், “தாசில்தார் சொன்னதை எப்படி மீறலாம்” என்று நித்யானந்தா சீடர்களிடம் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளனர்.

திடீரென இரு தரப்பினரும் கற்களை எடுத்து வீசி தாக்குதல் நடத்தினர்.
இதனால் நித்யானந்தா சீடர்கள், கன்டெய்னர்களுக்குள் அமைக்கப்பட்ட செயற்கை குடிலில் பதுங்கினர். ஆத்திரம் தீராத பொதுமக்கள், பொக்லைன் இயந்திரத்தையும், சிறுநீர் கழிக்கும் இடத்தின் அருகே நித்யானந்தா சீடர்கள் வைத்திருந்த கண்காணிப்பு கேமராவையும் பொதுமக்கள் அடித்து நொறுக்கியதோடு செயற்கை குடிலின் மின்சாரத்தையும் துண்டித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பல்லாவரம் உதவி ஆணையர் விமலனிடம், “கலெக்டர் முடிவு செய்து அறிவிப்பார் என்று தாசில்தார் சொன்ன வாக்குறுதியை ஏன் நித்யானந்தா சீடர்கள் மீறினார்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், நித்தியின் சீடர்களை கூப்பிட்ட உதவி ஆணையர் விமலன், கலெக்டர் அறிவிப்பு வரும் வரை எந்த பணியும் செய்யக் கூடாது மீறி, “வன்முறையில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுப்பேன்” என்று மென்மையாக எச்சரித்துவிட்டுச் சென்றார். இதனால் நம்பிக்கையிழந்த மக்கள் நேற்று காலை 8 மணியளவில் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இந்த தகவலை அறிந்த உதவி ஆணையர் விமலன், போராட்டம் எதுவும் நடத்த வேண்டாம் என்று சமாதானம் செய்ததால் அனைவரும் கலைந்து சென்றுள்ளனர்.

ஜக்கி, ஸ்ரீஸ்ரீரவிசங்கர் போன்ற கார்ப்பரேட் சாமியார்கள் பாஜக ஆதரவு, அதிகார வர்க்கம், போலீசின் உதவியோடு பொதுச்சொத்துக்களை தங்களது மடமாக்கி வருகிறார்கள். பொறுக்கி நித்தி இவர்களைப் போல நேரடியாக பாஜகவோடு போஸ் கொடுக்க முடியாவிட்டாலும் இது போன்ற சில்லறை வில்லத்தனங்களை செய்யாமல் இல்லை. மதுரை ஆதீனத்தை கைப்பற்ற நினைத்தவர், பல்லாவரத்தில் இருக்கும் புறம்போக்கையும் விடவில்லை.

நித்தியானந்தா இவ்வளவு நாறினாலும் இவர்கள் திருவண்ணாமலையிலோ சென்னையிலோ பெங்களூருவிலோ வைத்திருக்கும் சொத்துக்கள் ஏராளம். அதை ஒட்டி தனது சாம்ராஜ்ஜியத்தை விரிவு படுத்துவதற்காக கிடைக்கும் இடங்களிலெல்லாம் மூக்கை நுழைக்கிறார்கள்.

ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து, அதிகாரத் தரகு போன்றவற்றில் காஞ்சி சங்கர மடம் இன்றும் நம்பர் ஒன்னில் இருக்கிறது. நித்திக்கு சின்ன வயது என்பதால் போட்டியில் இன்னும் இருக்கிறார். இவர்களுக்கு நாம் வேட்டு வைக்கவில்லை என்றால் பொதுப்பாதை மட்டுமல்ல, மக்களின் பொது வாழ்க்கையின் ஆரோக்கியமே பறிபோகும்.