Saturday, April 19, 2025
முகப்புசெய்திதேனி : சிறுவனைக் கொன்ற மதயானை - வேடிக்கை பார்க்கும் அரசு

தேனி : சிறுவனைக் கொன்ற மதயானை – வேடிக்கை பார்க்கும் அரசு

-

தேனி மாவட்டம் தேவாரம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் ஒரு சிறு விவசாயி. ஊருக்குள் இவருக்கு சொந்த வீடு இருந்தாலும், 4 கி.மீ. தூரத்தில் மலை அடிவாரத்தில் உள்ள தோட்டத்தில்தான் இவரின் உழைப்பும், பிழைப்பும் இருக்கிறது. எனவே, தன் மனைவி, 7-ம் வகுப்பு, மற்றும், 4-ம் வகுப்பு படிக்கும்  இரு மகன்களுடன் தோட்டத்திலேயே குடியிருந்து வருகிறார். விவசாய வருமானத்தை மட்டுமே நம்பி வாழ முடியாது என்பதால் துணைத்தொழிலாக 4 பால் மாடுகளையும், சில நாட்டுக் கோழிகளையும் வளர்த்து வருவதால், வாழ்க்கையில் ஓய்வு என்பதை நினைத்துக்கூட பார்க்கமுடியாத உழைப்பாளிக் குடும்பம் இவருடையது.

வழக்கம்போல கடந்த 10.06.2017 அன்று இரவு தனது குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் தோட்டத்திற்கு சென்ற முருகனை, திடீரென்று வழிமறித்த காட்டு யானைத் தாக்கியதில் 13 வயது மகன் அழகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனான். முருகனும், அவரது மனைவியும் இடுப்பு எழும்பு முறிவுடன் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

காட்டு யானை தாக்குதலால் உயிரிழந்த சிறுவன் அழகேசன்

தகவலறிந்து சிறுவன் அழகேசன் சடலமிருந்த தேவாரம் மருத்துவமனைக்கு வந்த தேவாரம் போலீசார், இரவு நேரத்தில் தோட்டத்தில் என்ன வேலை? முருகன் குடித்துவிட்டு வண்டி ஓட்டினாரா? அதனால்தான் விபத்து நடந்ததா? என்று துக்கத்தில் இருந்த உறவினர்களிடம் விசாரணை செய்தனர். அடுத்து  சம்பவம் நடந்த இடத்தை புலனாய்வு செய்துவிட்டு வந்து “யானையின் தடையமே இல்லை. பொய் சொல்கிறார்கள்” என்று  புரளியைக் கிளப்பி விட்டனர். அடுத்த நாள் காலையில் வனத்துறையினர் வந்தபின்தான் யானை அடித்ததை போலீசுப் புலிகள் ஒத்துக்கொண்டு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.

ஏற்கனவே இப்பகுதியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு இதே யானையால் கருப்பாயி என்ற 60 வயது பெண் கொடூரமாக கொல்லப்பட்டார். அப்போது வனத்துறையால் விரட்டப்பட்ட இந்த மதம்பிடித்த யானை கேரளா வனப்பகுதியில் உள்ள காபி, ஏலத் தோட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியதோடு, பல விவசாயிகளையும் தாக்கிய விவரங்கள் பத்திரிகைகளில் வெளியாகியது. மகனா என்று அழைக்கப்படும் இந்த யானையை பிற யானைக் கூட்டங்களில் சேர்ப்பதில்லை. எனவே ஒரு காலில் காயத்துடன் தனியாக சுற்றித் திரியும் இந்த யானை எதிர்படும் மனிதர்களை வெறியுடன் தாக்கி வருகிறது. வனத்துறையினருக்கு இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்தாலும் இந்த யானையை சுட்டுக் கொல்லவோ, காட்டுக்குள் நிரந்தரமாக விரட்டியடிக்கவோ திராணியில்லாமல், “யானை தாக்கி இறந்தால் 4 லட்சம் நட்டஈடு தருகிறோம். யானையை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது” என்று விவசாயிகளை மிரட்டி வருகின்றனர்!

எனவே யானையை விரட்டியடிக்காமல், போஸ்ட்-மார்ட்டத்திற்கு சடலத்தை எடுக்காவிட மாட்டோம் என பெண்கள் மருத்துவமனைக்கு உள்ளேயே ஆவேசமாக போராடத் தொடங்கினர். மாவட்ட வன அதிகாரியோ, தாசில்தாரோ நேரில் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. மாறாக போலீசு வந்து சமாதானம் பேசினார். அவர்களது சமாதானத்திற்கு கட்டுப்படாமல் உறுதியாகப் போராடிய பெண்களை எஸ்.ஐ. ராதிகா, ஆபாச வார்த்தைகளில் திட்டித்தீர்த்தார். இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் பெண்களை நெஞ்சில் இடித்து தள்ளிவிட்டு சடலத்தை எடுத்துச் சென்றார். இதைத் தொடர்ந்து தாலுகா தலைநகர் உத்தமபாளையத்தில் சாலை மறியல் செய்வதற்காக திரளான மக்கள் கிளம்பியதை மோப்பம்பிடித்த போலீசு, வனத்துறை அதிகாரிகளுடன் பேச்சவார்த்தைக்கு வந்தது.

வி.வி.மு.தாலுகா செயலர் தோழர் முருகன், மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன் ஆகியோர் கலந்துகொண்ட பேச்சுவார்த்தையில், “மத யானையை விரட்ட உடனடி நடவடிக்கை எடுப்பதென்றும், 4 லட்சம் நட்டஈடுத் தொகையில் முன்பணமாக 50,000 ரூபாயை இப்போதே கொடுத்துவிடுகிறோம். மீதியை இறப்புச் சான்றிதழ் கொடுத்துப் பெற்றுக் கொள்வது” என்றும் மக்கள் முன்னிலையில் பேசி முடிக்கப்பட்டது. சிகிச்சை பெற்றுவரும் முருகன் மற்றும் அவரது மனைவிக்கு நிவாரணம் பெற வழக்கு போடவும் வி.வி.மு. மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

விவசாயிகளின் உயிர் குடிக்கும் மதயானையை சுட்டுக் கொல் எனக் கோரி விவிமு சார்பில் தேவாரத்தில் அஞ்சலிக் கூட்டம்  17-06-2017 அன்று நடத்தப்பட்டது. அழகேசனின் உருவப்படத்திற்கு விவசாயி வெள்ளைச்சாமி மாலை அணிவிக்க, மவுன அஞ்சலியுடன் கூட்டம் தொடங்கியது. சிபிஎம், சிபிஐ, பென்னி குயிக் விவசாயிகள் சங்கம், ஆகிய அமைப்புகளின் உள்ளூர் தலைவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.

இறுதியாகப் பேசிய மக்கள் அதிகாரம் தோழர். மோகன், “காலங்காலமாக காட்டு விலங்குகளைக் கட்டுப்படுத்தி தன்னையும் விவசாயத்தையும் காப்பாற்றிக் கொள்ளும் அனுபவம் விவசாயிகளுக்கு ஏற்கனவே இருக்கிறது. வனத்துறை என்று ஒன்று வந்தபிறகுதான் வனங்களும், விலங்குகளும் அதிகமாக அழிக்கப்பட்டு வருகிறது. 1960 வரை 23% ஆக இருந்த வனப்பரப்பு, இன்று   17% ஆக குறைந்து போனதற்கு வனத்துறைதான் காரணம். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பல்லாயிரம் தன் வெடி மருந்துகளை வெடித்து பாறையைக் குடையும் நியுற்றினோ திட்டத்திற்கு அனுமதிய வழங்கியது வனத்துறைதான்.

வனப்பகுதியில் சுற்றுலா விடுதிகள் அதிகரிப்பதுதான் காட்டு விலங்குகள் ஊருக்குள் இடம்பெயர்வதும், அதனால் மனித உயிர்கள் பலியாவது அதிகரிக்கவும் காரணம். ஏற்கனவே இந்த அரசின் விவசாயக் கொள்கைகளால் விவசாயத்தில் நீடிக்க முடியாமல் விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

300- தஞ்சை விவசாயிகளின் இறப்பை மூடி மறைக்கும் இந்த கையாலாகாத அரசை நம்பி இனியும் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது. நம்மை நாமே தற்காத்துக் கொள்ளும் வகையில், விவசாயிகளை வாழவிடு என்று நமது வாழும் உரிமைக்காகப் போராடத் தயாராக வேண்டும்” என்று பேசினார்.

பகுதிவாழ் பெண்கள் உட்பட 500- க்கும் மேற்பட்ட விவசாயிகள் என திரளானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இனியொரு விவசாயியின் உயிர் காட்டு விலங்குகளால் பறிக்கப்படக் கூடாது என்ற உத்வேகத்துடன் நடந்த இக்கூட்டம், விவசாயிகள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
விவசாயிகள் விடுதலை முன்னணி,
தேவாரம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க