Tuesday, April 22, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மணல் குவாரியை மூடு ! – கடலூர் திருமுட்டம் ஆர்ப்பாட்டம் !

மணல் குவாரியை மூடு ! – கடலூர் திருமுட்டம் ஆர்ப்பாட்டம் !

-

மணல் குவாரியை மூடு ! – திருமுட்டம் ஆர்ப்பாட்டம்
அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராகும் வெள்ளாறு

டலூர் மாவட்டம், திருமுட்டம் தாலுக்காவில் மதகளிர் மாணிக்கம் மற்றும் கூடலையாத்தூர் பகுதியில் அரசு மணல் குவாரி ஆரம்பித்துள்ளது. இதற்கு பல்வேறு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம் சார்பில் பல்வேறு கிராம மக்களை ஒருங்கிணைத்து திருமுட்டத்தில் கடந்த 16-6-2017 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 700 பேருக்கு மேல் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க தலைவர் திரு வெங்கடேசன் தலைமை தாங்கினார். இதில் மதகளிர் மாணிக்கம், கூடலையாத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு, மதகளிர் மாணிக்கத்தில் இயங்கும் அரசு மணல் குவாரியை உடனே மூடவேண்டும், கூடலையாத்தூரில் குவாரி அமைக்க கூடாது என்கிற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை ஏழுப்பினர். மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தோழர் ராஜூ  கலந்து கொண்டு, கண்டன உரையாற்றினார்.

தி.மு.க. ஒன்றிய விவசாய அணி துணை செயலாளர் திரு செங்குட்டுவன், பா.ம.க. திரு ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர் தோழர் பிரகாஷ், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில அமைப்பு குழு உறுப்பினர் திரு தமிழரசன், மாநில மாணவரணி தலைவர் திரு பிரகாஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாக குழு உறுப்பினர் தோழர் பட்டுசாமி, காங்கிரஸ் கட்சி நிர்வாகி திரு தமிழ்வாணன், மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம், வழக்கறிஞர் திரு புஷ்தேவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர துணை செயலாளர் திரு செந்தில், தே.மு.தி.க. திரு ராஜவன்னியன் மற்றும் வெள்ளாற்று பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு பஞ்சமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் கூடலையாத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மலர்மன்னன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் பேசிய அனைவரும் மணல் குவாரியை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் நடத்த வேண்டும் என பேசினர்.ஆர்ப்பாட்டத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் 04.06.2017  அன்று  மணல் குவாரி துவங்கும் முன்பாக ஜே.சி.பியை மறித்து ஆற்றிலிறங்கி மக்கள் போராடினர். அதிகாரிகள் பின்வாங்கி திருமுட்டம் தாலுக்கா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு கிராம மக்கள் மணல் குவாரி அமைக்க ஒத்துக்கொள்ள முடியாது. ஏற்கனவே இதே பகுதியில் ஏழு ஆண்டுகளாக மணல் அள்ளி ஆற்றை நாசப்படுத்தி விட்டீர்கள். பல போர்கள் பயன்படாமல் நிலத்தடி நீர் கீழே இறங்கி விட்டது. தொடர்ந்து அள்ளினால் கடல் நீர் உட்புகுந்து விடும், மொத்த விவசாயமும் நாசமாகி விடும். குடிநீருக்கு பிரச்சினையாக உள்ள நிலையில், மழை பொய்த்து வறட்சிகாலத்தில் கொஞ்சம் நஞ்சம் மணலையும் அள்ளினால் மோசமாக விவசாயம் பாதிப்படையும் என மறுத்தனர்.

ஆனால் மாவட்ட நிர்வாகம் அடுத்த நாளே 5-6-17 அன்று மணல் குவாரியில் ஜே.சி.பி இறக்கியது. நூற்றுக்கணக்கான போலீசாரை குவித்து மறியிலில் ஈடுபட்ட 200 மேற்பட்ட கிராம மக்களை பலவந்தமாக மிரட்டி கைது செய்தது. அடுத்த நாள் திருமுட்டம் தாலுக்கா அலுவலகத்தில் குடும்ப அட்டையை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தினர் கிராம மக்கள். தொடர்ந்து வீடுகளில் கருப்புக்கொடி எற்றி எதிர்ப்பை தெரிவித்தனர். இதை தொடர்ந்துதான் திருமுட்டத்தில் 16 ம் தேதி பெரிய அளவில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. கடந்த 2014 –ல் வெள்ளாற்றில் ஆயிரக்கணக்கான மக்களுடன் இரண்டு நாள் முற்றுகை போராட்டம் நடத்தி, மணல் குவாரியை அன்றைக்கு மூடியது மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்.  விவசாயிகள் மத்தியில் தொடர்ந்து போராட்டத்தை எடுத்து செல்வதற்கு உருவாக்கப் பட்டது தான் வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம். அதன் தொடர்ச்சியாக இப்போது திருமுட்டத்திலும் போராட்டம் தொடர்கிறது.

சுமார் 200 கோடி அளவில் மணல் கொள்ளை நடந்துள்ளது பற்றி அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என புகார் மனு கொடுத்தற்கு, அரசு இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.திருமுட்டம் ஆர்பாட்டத்தில் நான்கு தீர்மானங்களை மக்கள் அதிகார மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ அறிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் தங்களின் கரவொலி எழுப்பி தீர்மானங்களை ஆதரித்தனர்.

  1. மதகளிர் மாணிக்கம், கூடலையாத்தூர் பகுதிகளில் உள்ள மணல் குவாரிகளை நிரந்தரமாக மூடும் வரை அனைத்து கட்சிகள் பங்கேற்புடன் போராட்டங்களை ஒருங்கிணைத்து நடத்துவதற்கு வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் போராட்டக்குழு அமைப்பது என முடிவு செய்யபட்டுள்ளது.
  2. 2014 வரை வெள்ளாற்றில் கார்மாங்குடி மற்றும் முடிகண்ட நல்லூர் பகுதி குவாரிகளில் அரசு கணக்கில் வராமல் சுமார் 200 கோடி அளவில் மணல் கொள்ளை அடிக்கபட்டுள்ளது. பொதுப்பணி துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் என அனைவரும் இந்த ஊழலில் சம்பந்த பட்டுள்ளனர். நேர்மையான நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
  3. மாநில சுற்றுசூழல் ஆணைய உத்திரவுபடி மணல் குவாரிகளில் ஜே.சி.பி. எந்திரம் பயன்படுத்தகூடாது. மனித உழைப்பின் மூலமே மணலை அள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யபட்டு நிலுவையில் உள்ளது. எனவே திங்கள் கிழமை 19-6-2017 அன்றுக்குள் ஜே.சி.பி. எந்திரத்தை ஆற்றலிருந்து வெளியேற்ற வேண்டும். இல்லை என்றால் அடுத்தக் கட்ட போராட்டத்தை அறிவிப்போம்.
  4. மணல் கொள்ளை விவசாயத்தின் நேரடி எதிரியாக உள்ளது. இயற்கை வளங்களை பாதுகாப்பது அனைவரின் கடமையாகும். மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அதிகாரிகள், காவல் துறையினர் போராடும் மக்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். குற்றம் செய்தவர்களைப்  போல் போராடும் மக்கள் மீது தொடுக்கும் அத்துமீறலை நிறுத்தி கொள்ள வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு கிராமங்களில் ஊர்க்கூட்டம் போட்டு மக்கள் அதிகாரத்தின் தோழர்கள் மணல் குவாரிகளை மூடிய அனுபவங்களை விளக்கமாக பேசிவருகிறார்கள். அனைத்து மக்களும் உறுதியாக தொடர்ந்து போராடினால் நிச்சயமாக மணல் குவாரிகளை மூட முடியும் என மக்களும் நம்பிக்கையடைந்துள்ளனர்.

அடுத்த கட்ட போராட்டத்திற்கு வெள்ளாறு தயாராகி வருகிறது !

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கடலூர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க