
கருவுற்ற பெண்கள் இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று மோடியின் ஆயுஷ் அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கை அறிவுறுத்துகிறது. ஆன்மிகச் சிந்தனைகளை வளர்ப்பதும் நல்ல படங்களை அறையில் மாட்டுவதும் நலமிக்க குழந்தைகளை பெறுவதற்கு அவசியமாகும் என்றும் கூறியிருக்கிறது.
ஆயுஷ் அமைச்சரவையின் கீழ் யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சி மையம் (CCRYN) இந்த அறிவுறுத்தல்களை மைய அரசின் நிதியுதவியுடன் கையேடாக தொகுத்து வெளியிட்டுள்ளது.
மேலும் “கருத்தரித்த பெண்கள் [தாமச உணர்ச்சிகளான] ஆசை, கோபம், ஈர்ப்பு, வெறுப்பு, காமம் ஆகிய உணர்ச்சிகளில் இருந்து தங்களை துண்டித்துக் கொள்ள வேண்டும்…” என்று கையேட்டின் 14 ஆம் பக்கத்தின் ஒரு பத்தியில் எழுதப்பட்டிருக்கிறது. பாலியல் உணர்ச்சி கூடாது என்று இதைப் பத்திரிகைகள் திரித்துக் கூறியதாக சொல்லி அதற்கு மறுப்பும் ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. பாலியல் உணர்ச்சியை மறுக்கவில்லை என்று சமாளிக்கும் ஆயுஷ் இதர உளறல்களை மறுப்பதற்கு முன்வரவில்லை.
யோகா மற்றும் இயற்கை மருத்துவம் இறைச்சி உணவை பரிந்துரைப்பதில்லை. அதனால் கருத்தரித்த பெண்களும் பால் கொடுக்கும் தாய்மார்களும் இறைச்சி மற்றும் முட்டையை தவிர்த்து சாத்வீக உணவையே உண்ண வேண்டும் என்றும் அந்த கையேடு அறிவுறித்தியிருக்கிறது.
ஆனால் இது அறிவியல் ஆதாரமற்றவை என்கிறார் அப்போலோ மருத்துவ குழுமத்தின் மூத்த மகளிர் மருத்துவரும் மகப்பேறு மருத்துவருமான மாலவிகா சபர்வால். ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்தசோகை இரண்டும் கருவுற்ற பெண்களை பாதிக்கும் உடல்நலப் பிரச்சனைகள். புரதச்சத்திற்கான மிகச்சிறந்த மூலாதாரங்கள் இறைச்சி உணவுகள். தாவரங்களை விட இறைச்சியிலிருந்து தான் புரதச்சத்துக்கள் விரைவாக உடலால் உறிஞ்சப்படுகிறது என்று மேலும் கூறுகிறார்.
இறைச்சி உட்கொள்ளுவதில் இந்தியாவின் தனிநபர் சராசரி உலகிலேயே இரண்டாவது குறைவான அளவாக 4.4 கிலோவாக மட்டுமே இருக்கிறது. கருத்தரிப்பு தொடர்பான பிரச்சினைகளால் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 44 ஆயிரம் பெண்கள் இந்தியாவில் உயிரிழக்கிறார்கள். பேறுகால இறப்பு விகிதம் 167 ஆகவும் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் 30 ஆக உலகிலேயே மோசமான ஒன்றாகவும் இருக்கிறது. மனித மேம்பாட்டு குறியீட்டில்(HDI) உலகிலேயே 131 வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் சராசரி தனிநபர் ஆயுட்காலம் 68.01 ஆண்டுகள் மட்டுமே. பங்களாதேசின் நிலையும் ஏறக்குறைய இதே தான்.
ஆனால் இறைச்சி உணவை அதிகமாக உண்ணும் நாடுகளில் மக்களின் வாழ்க்கைத்தரம் எப்படி பார்ப்பினும் இந்தியாவை விட பன்மடங்கு மேம்பட்டே இருக்கிறது. எடுத்துக்காட்டாக இறைச்சி உட்கொள்ளுவதில் ஆஸ்திரேலியாவின் தனிமனித சராசரி 111.5 கிலோவாக இருக்கிறது. அதே நேரத்தில் பேறுகால இறப்பு விகிதம் வெறும் 6 ஆகவும், ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் 3.8 ஆகவுமே இருக்கிறது. மனித மேம்பாட்டு குறியீட்டில்(HDI) உலகிலேயே இரண்டாவது இடத்தில இருக்கும் ஆஸ்திரேலியாவின் சராசரி தனிநபர் ஆயுட்காலம் 83.1 ஆண்டுகள் ஆகும். ஆஸ்திரேலியா ஒரு முன்னேறிய நாடாக இருப்பதாலும் இது சாத்தியம் எனலாம். ஆனால் அந்த முன்னேற்றம் என்பது இறைச்சி இல்லாமல் இல்லை.
ஆயுஷின் அறிக்கை படி பார்த்தால் மிகக்குறைவான இறைச்சி உண்ணும் இந்தியா தான் உலகிலேயே நலமான குழந்தைகள் பெறுவதில் முன்னணியில் இருக்க வேண்டும். ஆனால் புள்ளிவிவரம் உணர்த்தும் எதார்த்தம் நேர்மாறாக இருக்கிறது. ஏனெனில் இந்தியாவின் சமூகப்பொருளாதாரம் தாமஸ உணவை மட்டுமல்ல சாத்விக உணவையும் பெரும்பாலான ஏழை எளிய மக்களுக்குத் தடை செய்திருக்கிறது.
குறிப்புகள்:
- பேறுகால இறப்பு விகிதம் ஒவ்வொரு இலட்சம் கருத்தரித்தப் பெண்களில் எத்தனை பெண்கள் இறக்கிறார்கள் என்பதைக் குறிக்கிறது.
- குழந்தைகள் இறப்பு விகிதம் ஒவ்வொரு ஆயிரம் குழந்தைகளில் எத்தனை குழந்தைகள் ஐந்து வயதிற்குள் இறக்கிறார்கள் என்பதைக் குறிக்கிறது.
செய்தி ஆதாரம்: