Monday, April 21, 2025
முகப்புசெய்திமகிழ்ச்சித் துறைக்கு ஒரு மந்திரியாம் - ம.பி பா.ஜ.க அரசின் கேலிக்கூத்து

மகிழ்ச்சித் துறைக்கு ஒரு மந்திரியாம் – ம.பி பா.ஜ.க அரசின் கேலிக்கூத்து

-

கேள்வி என்னவென்றால், கோப்பை பாதி நிரம்பியுள்ளதா அல்லது பாதி காலியாக உள்ளதா என்பதே. நம்மிடம் என்ன இல்லையோ அதைத் தான் நமது மனம் நாடுகின்றது. உங்களுக்கான ஆசீர்வாதங்களை எண்ணிப் பாருங்கள். சரியான உந்துதலுடன் காரியமாற்றினால் நீங்கள் நன்றியால் நிரம்பி வழிவீர்கள்”

இது ஏதோ மோகன் சி. லாசரசின் பிரசங்க கூட்டத்தில் சொல்லப்பட்ட விசயம் அல்ல. இது “மகிழ்ச்சித் துறையின்” தத்துவங்களில் ஒன்று. மக்கள் மகிழ்ச்சியடைவதற்கு சாப்பாடோ, துணிமணியோ, இன்னபிற செல்வங்களோ போதுமானதில்லை என்பதைக் கண்டறிந்து “மகிழ்ச்சிக்கு” என்றே தனியே ஒரு துறையை ஏற்படுத்தி அதற்கென ஒரு அமைச்சரவையையும் ஏற்படுத்தியுள்ளது மத்திய பிரதேச பாரதிய ஜனதா அரசு.

மக்கள் மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டுமாம்?

ஒவ்வொரு நாளும் நமக்கு நடந்த நல்ல விசயங்களை நினைவு கூற வேண்டும், நமக்கு நன்மை செய்தவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும், காலையில் எழுந்ததும் சிரிக்க வேண்டும்.. இவ்வாறாக நமது மகிழ்ச்சியை நாமே “உற்பத்தி” செய்து கொள்ள வேண்டும். மேலும் நம்மைப் போல் காலையில் எழுந்ததும் இளிப்பவர்களாகத் தேடி அவர்களோடு ஐக்கியமாக “மகிழ்ச்சி கிளப்புகளையும்” ஏற்படுத்தியுள்ளது மகிழ்ச்சித் துறை. என்னவொரு கேலிக்கூத்து?

பூட்டானிடம் இருந்து காப்பியடிக்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் மத்திய பிரதேச மக்கள் அடைந்த மகிழ்ச்சியைத் தான் மாண்ட்சரில் பார்த்தோம். ஆறு விவசாயிகள் மகிழ்ச்சியோடு போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானார்கள்.

மனிதவளக் குறியீட்டென் வரிசையில் உலகளவிலான நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் இடம் கேவலமாக இருக்கும் நிலையில் இந்திய மாநிலங்களில் மத்திய பிரதேசம் கேடு கெட்ட நிலையில் உள்ளது. 2016-ம் ஆண்டில் மட்டும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சுமார் 6,667 விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டு போயிருக்கிறார்கள். இந்திய மாநிலங்களில் குழந்தைகள் இறப்பு சதவீதத்திலும், தற்கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களின் பட்டியலிலும் மத்திய பிரதேசம் முன்னணியில் உள்ளது.

மக்களை கஞ்சிக்கில்லாத நிலைக்குப் பராரிகளாக தள்ளி விட்ட பின் அவர்களைப் பார்த்து “பொருட்களின் மூலம் மகிழ்ச்சி கிடைக்காது” என்று போதனை செய்ய எந்தளவுக்கு மனவக்கிரம் இருக்க வேண்டும்? விளைபொருட்களுக்கு விலை கிடைக்காத விவசாயிகளிடம் “காசு மகிழ்ச்சியைத் தந்து விடாது” என்றும், வியாபம் ஊழலில் கொல்லப்பட்டவர்களிடம் “பரமாத்மாவிடம் ஐக்கியமாவதே மகிழ்ச்சி” என்றும், பணமதிப்புக் குறைப்பால் தொழில் இழந்தவர்களிடம் “காலையில் எழுந்து சிரிப்பதே மகிழ்ச்சி” என்றும், படித்து விட்டு வேலை கிடைக்காத இளைஞர்களிடம் “நன்றி சொல்வதே மகிழ்ச்சி” என்றும் சொல்கிறது பாரதிய ஜனதா.

அம்பானிகளுக்கும், அதானிகளுக்கு இந்த அளவுகோல் பொருந்தாது. அம்பானியின் மகிழ்ச்சிக்கு கே.ஜி பேசின் தேவை, அதானியின் மகிழ்ச்சிக்கு நிலக்கரி வயல்கள் தேவை, முதலாளிகளின் மகிழ்ச்சிக்கு கடன் தள்ளுபடி தேவை. கபாலியில் ரஜினி பேசிய மகிழ்ச்சி மத்தியப் பிரதேசத்தில் சிரிப்பாய் சிரிக்கிறது.

பாரதிய ஜனதா உள்ளிட்ட இந்துத்துவ கும்பல் மக்களுக்கு விரோதமானவர்கள் மட்டுமல்ல – மக்களின் மேல் பாய்ந்து குதறும் சாடிஸ்டுகளும் கூட என்பதற்கு ஒவ்வொரு நாளும் ஆதாரங்கள் மலையாக குவிந்து கொண்டே இருக்கின்றன.

செய்தி ஆதாரம்:

Madhya Pradesh Leads India in the Pursuit of Happiness: Surprised?