Thursday, April 17, 2025
முகப்புஉலகம்அமெரிக்காஇங்கிலாந்தில் தொடரும் தீவிரவாதத் தாக்குதல்கள்

இங்கிலாந்தில் தொடரும் தீவிரவாதத் தாக்குதல்கள்

-

இலண்டன் – ஃபின்ஸ்பரி பூங்கா தாக்குதல்:

ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார், 10 பேர் கடுங்காயம் அடைந்தனர்

இங்கிலாந்து நாட்டின் தலைநகர் இலண்டனில், ஏழு சகோதரிகள் சாலையில் அமைந்துள்ள மசூதி ஒன்றில் 19/06/2017 அன்று நள்ளிரவு ரம்ஜான் நோன்புத் தொழுகை முடித்து நூற்றுக்கும் மேற்பட்ட முசுலீம்கள் வெளியே வந்து கொண்டிருந்தனர். திடீரென வேன் ஒன்று மணிக்கு 122 கிமீ வேகத்தில் கூட்டத்தின் நடுவே புகுந்தது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 10 பேர் கடுங்காயம் அடைந்தனர். பின்னர் வேனை விட்டு கீழே இறங்கிய ‘தீவிரவாதி’, அங்கிருக்கும் மக்களைக் கத்தியால் குத்த முயன்றிருக்கிறார். அவரை மடக்கிப் பிடித்த மக்கள், அங்கு விரைந்து வந்த போலீசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இங்கிலாந்தில், கடந்த 90 நாட்களுக்குள் நடத்தப்பட்டிருக்கும் 4-வது தீவிரவாதத் தாக்குதல் சம்பவம் இது. முதல் சம்பவம் 2017, மார்ச் 22 அன்று, இலண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் நடந்தது. மசூத் என்ற தீவிரவாதி வாடகைக்கு ஒரு காரை எடுத்துக் கொண்டு, வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் சென்று கொண்டிருந்த பாதசாரிகள் மீது அதிவேகமாக வாகனத்தில் சென்று மோதி4 பேர் பலியாகினர். அதோடு பிரிட்டன் பாராளுமன்றப் பாதுகாப்புப் பணியில் நின்ற ஒரு போலீசு அதிகாரி கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.உடனடியாக அங்கிருக்கும் மற்றொரு அதிகாரியால் அந்த தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். இத்தாக்குதலில் போலீசு உட்பட 5 பேர் உயிரிழந்தனர். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் நடந்து அடுத்த இரண்டாவது மாதத்திலேயே, மே 22 அன்று மான்செஸ்டரில் நடைபெற்ற ஒரு பாப் இசை நிகழ்ச்சியைக் கண்டு களிக்க வந்த மக்கள் கூட்ட்த்தின் மத்தியில் ஒரு தீவிரவாதி, மனித வெடிகுண்டாக மாறி, குண்டு வெடிக்கச் செய்த சம்பவத்தில் 22 பொதுமக்கள் உயிரிழந்தனர். 120 பேர் படுகாயமடைந்தனர். கடந்த ஜூன் 3 அன்று இலண்டன் பாலம் அருகே மீண்டும் ஒரு தாக்குதல் தொடுக்கப்பட்டது. மூன்று தீவிரவாதிகள், ஒரு வாகனத்தை வாடகைக்கு எடுத்துக் கொண்டு பாதசாரிகள் மீது மோதியதோடு மட்டுமல்லாமல், மக்களைக் கத்தியால் குத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் 8 பொதுமக்கள் உயிரிழந்தனர், 21 பேர் படுகாயமடைந்தனர். அங்கு விரைந்த போலீசு அந்த மூன்று தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்றது.

தற்போதைய தாக்குதல் சம்பவம் தவிர மற்ற அனைத்து தாக்குதல்களுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தற்போதைய தாக்குதலைத் தொடுத்துள்ள 47 வயதான டர்ரென் ஓஸ்போர்ன் ஒரு வெள்ளையர். வேலையில்லாததால் தொடர்ச்சியான மன அழுத்தத்தில் இருந்தார் என்றும் அதற்காக அவர் மருந்துவம் எடுத்து வந்துள்ளார் என்றும் அவரது 72 வயதுத் தாய் கிரிஸ்டைன் ஓஸ்போர்ன் கூறியுள்ளார். அவரது குற்றத்திற்கு ஆதரவளிக்கவில்லை என்று கூறும் கிரிஸ்டைன், அதே நேரத்தில் தனது மகன் ஒரு தீவிரவாதியும் அல்ல என்றும் கூறியுள்ளார்.

இந்தத் தாக்குதலைத் தவிர மற்றவை முஸ்லீம் பயங்கரவாதத்தினால் நடந்தது என்றால் தற்போதைய தாக்குதல் முஸ்லீம்கள் மீதான ஐரோப்பியர்களின் வெறுப்பு சார்ந்த பொதுப்புத்தியில் நடந்துள்ளது. டர்ரென் ஓஸ்போர்ன் மன அழுத்தம் கொண்டிருந்தாலும் அவர் கொலை செய்தது மசூதி முன் வந்த மக்களைத்தான்.

மூன்றாம் உலக நாடுகளையும், தனக்குக் கட்டுப்படாத நாடுகளையும் கட்டுக்குள் கொண்டுவர, ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கி வளர்த்தது, அமெரிக்கா. அதற்கு பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள் ஆதரவளித்தன. வளர்த்தவனின் கட்டுப்பாட்டை மீறி அவன் கழுத்திலேயே தற்போது தனது நகங்களைப் பதித்திருக்கிறது ஐ.எஸ்.ஐ.எஸ். ஒருபுறம் ஐ.எஸ்.ஐ.எஸ்.ன் தாக்குதல்களாலும், மறுபுறம் முதலாளித்துவம் ஏற்படுத்தியிருக்கும் வேலையின்மை, வாழ்க்கைப் பாதுகாப்பின்மை ஆகியவை உருவாக்கியிருக்கும் மனச்சிக்கல்கள், அதனால் நடத்தப்படும் சைக்கோத்தனமான, இனவெறி, மதவெறித் தாக்குதல்களாலும் இந்த ஏகாதிபத்திய நாடுகளின் அப்பாவிப் பொதுமக்களே பாதிக்கப்படுகின்றனர்.

செய்தி ஆதாரம்:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க