Monday, April 21, 2025
முகப்புசெய்திஅர்ஜெண்டினா : மெஸ்ஸியின் வரி ஏய்ப்பு - விலைவாசிக்காக மக்கள் போராட்டம்

அர்ஜெண்டினா : மெஸ்ஸியின் வரி ஏய்ப்பு – விலைவாசிக்காக மக்கள் போராட்டம்

-

தென்னமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அந்நாட்டு அரசுக்கெதிராக 15.06.2017 அன்று தலைநகர் பியூனஸ் அயர்ஸ்-ல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அர்ஜெண்டினா நாட்டின் அதிபரான மௌரிசியோ மேக்ரி 2015-ம் ஆண்டு பதவியேற்ற காலம் முதல் நாட்டு மக்களின் மீது கடுமையான பொருளாதாரக் கட்டுப்பாடுகளை விதித்து வருவதாகவும், வேலை இழப்புக்கள் அதிகரித்து மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவதாகவும், அதே சமயத்தில் அத்தியாவசியத் தேவைகளுக்கான பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருவதாகவும் குற்றம் சாட்டுகிறார் தேசிய தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் ஹியூகோ கோடாய்.

இது மட்டுமன்றி தனியார் நிறுவனங்களுக்கு வரி ரத்து உள்ளிட்ட பல சலுகைகளைக் அள்ளிக் கொடுப்பதோடு, ஏராளமான அரசு நிறுவனங்களைத் திட்டமிட்டு மூடி வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றார் ஹியூகோ கோடாய்.

ஏற்கனவே மார்ச் 2017-ல் மௌரிசியோ மேக்ரியின் அரசுக்கெதிராக அனைத்து தொழிலாளர் சங்கங்களும் வேலையிழப்பு, தனியார்மயமாக்கல், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டன. இதைப் போன்று ஆசிரியர் சங்கங்களும் கல்வி தனியார்மயமாக்கப்படுதல் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காகத் தலைநகர் பியூனஸ் அயர்ஸ்-ல் போராடியுள்ளனர்.

அர்ஜெண்டினாவும் கால்பந்தும் !

வாழ்க்கை   ஆதாரங்களுக்காக தொழிலாளிகள் போராடும் இதே அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவர் பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி. இவர் கால்பந்து விளையாட்டின் மூலம் ஆண்டொன்றுக்கு 517 கோடி ரூபாய்(இந்தியப் பணம்) சம்பாதிக்கின்றார். ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையில் (2017 நிலவரத்தின்படி) உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் மூன்றாவது விளையாட்டு வீரர் என்ற ‘பெருமை’யைப் பெறுகின்றார்.

லயோனல் மெஸ்ஸி

கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்கள் வணிக மயமாகிவிட்ட நிலையில் வறுமைப் பின்னணியுள்ள நாடுகளிலிருந்து விளையாட வரும் நட்சத்திர வீரர்களுக்குக் கட்டுக்கடங்காத பணம் வாரியிறைக்கப்படுகிறது.

பனாமா லீக்ஸ் விவகாரத்தில் மெஸ்ஸியின் பெயரும் அடிபட்டது. மேலும் கால்பந்தின் மூலம் ஸ்பெயினில் சம்பாதித்த பணத்திற்கு 4 மில்லியன் யூரோக்களை வரி கட்டாமல் ஏமாற்றியதற்காக இவர் மீது 2016-ல் வழக்கும் தொடுக்கப்பட்டது. மெஸ்ஸி போன்று இன்னும் ஏராளமான கால்பந்து வீரர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். இவர்கள் வரி ஏய்ப்பு செய்வதற்கு அரசும் நேரடியாகவே உதவுகிறது.

மெஸ்ஸி போன்ற வீரர்களை கால்பந்து உலகின் கடவுளாக மதிக்கும் அர்ஜெண்டினா மக்களின் வாழ்வாதாரமோ உலகமயமாக்கலின் விளைவாக அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு மெஸ்ஸி உள்ளிட்ட ஏராளமான தனி நபர்களிடம் சொத்தாக எழுதித்தரப்படுகிறது. மறுபுறம் உழைக்கும் மக்களுக்கு இருக்கும் சொற்ப சலுகைகளையும் ரத்து செய்து அவர்களின் வயிற்றிலடிக்கிறது ஆளும் வர்க்கம். இதுதான் இன்றைய அர்ஜெண்டினா!

மேலும் படிக்க :

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க