Sunday, April 20, 2025
முகப்புஉலகம்அமெரிக்காஅமெரிக்கா : பூலோக சொர்க்கத்தில் மனக்கவலைகள் அதிகம்

அமெரிக்கா : பூலோக சொர்க்கத்தில் மனக்கவலைகள் அதிகம்

-

உலகத்திலேயே அதிக மன உளைச்சலுக்கு உள்ளாகும் மக்களில் அமெரிக்கர்கள் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர்

யூனிசிஸ் என்ற நிறுவனத்தால் கடந்த 10 வருடங்களாக நடத்தப்பட்டு வந்த ஆய்வுகளில் உலகத்திலேயே அதிக மன உளைச்சலுக்கு உள்ளாகும் மக்களில் அமெரிக்கர்கள் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் மொத்தம் 13 நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தொடர்ச்சியாக கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதிலிருந்து இந்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

2014-ல் எடுக்கப்பட்ட ஆய்வுகளில் இதே அமெரிக்கர்கள் நிதி பாதுகாப்பு குறித்து மட்டுமே அதிகம் கவலை கொண்டிருந்தனர். ஆனால் மூன்றாண்டுகளுக்குள்ளாகவே அந்த நிலை மாறி இன்று தேசப் பாதுகாப்பு மற்றும் வலைத்தள பாதுகாப்பு குறித்த கவலைகளே மேலோங்கிக் காணப்படுகின்றது.

68 சதவீத அமெரிக்கர்கள் மத்தியில் பாதுகாப்பு குறித்த அச்சமே மேலோங்கியுள்ளது

68 சதவீத அமெரிக்கர்கள் மத்தியில் பாதுகாப்பு குறித்த அச்சமே மேலோங்கியுள்ளது. 61 சதவீத அமெரிக்கர்கள் தனிப்பட்ட அடையாளத்(Identity Theft) திருட்டு குறித்து அச்சம் கொண்டுள்ளனர். 58 சதவீத அமெரிக்கர்கள் வங்கிக் கடன் அட்டைகளில் மோசடி செய்தது குறித்து மனக்கவலை கொண்டுள்ளனர். அடுத்தடுத்து கணினி நச்சுநிரல், மின்னனு பரிமாற்றம், இயற்கைச் சீரழிவு என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

உலகத்திலேயே தன் சொந்த நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது என்ற கருத்தோட்டம் மெல்ல மெல்ல அமெரிக்கர்களின் மனதிலிருந்து வெளியேறி வருவதையே இந்த ஆய்வு முடிவுகள் பிரதிபலிப்பதாகக் கூறுகிறார் யூனிசிஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் ’பில் சியர்சி’. மற்ற நாடுகளைக் காட்டிலும் தேசப் பாதுகாப்பு குறித்த அச்சம் அமெரிக்கர்களிடமே மேலோங்கியுள்ளது என்கிறார் அவர்.

தினசரி செய்திகளைப் படிக்கும் எந்த அமெரிக்கருக்கும் இந்த ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியைத் தராது என்கிறார் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் இணையம் மற்றும் வீட்டுப் பாதுகாப்புத் துறைகளின் இயக்குனர் ஃபிராங்க் ஜே.சில்லுஃபோ.

பூலோக சொர்க்கமென்று அழைக்கப்படும் அமெரிக்காவின் சமூக வாழ்க்கை பலருக்கும் நரகமாக இருப்பதையே இந்தக் கருத்துக் கணிப்புக்கள் கூறுகின்றன. முதாளித்துவத்தின் கோட்டையாக அமெரிக்கா இருக்கும் வரை மன அமைதி எங்கிருந்து வரும்?

செய்தி ஆதாரம்:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க