Monday, April 21, 2025
முகப்புஉலகம்அமெரிக்காஅமெரிக்க மண்ணில் மோடியின் ரத்தக்கறை ரமலான் வாழ்த்து !

அமெரிக்க மண்ணில் மோடியின் ரத்தக்கறை ரமலான் வாழ்த்து !

-

மெரிக்காவிற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாகச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி நேற்று 25.06.2017 அன்று வாஷிங்டன் சென்றடைந்தார். அங்கே முதல்வேலையாக உலகப் பெருநிறுவனங்களில் முதல் 20 நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

ஆப்பிள், கூகுள், மைக்ரோசாஃப்ட், அமேசான், சிஸ்கோ, அடோப், மாஸ்டர்கார்ட், எமெர்சன் ஆகிய நிறுவனங்களும் அதில் அடக்கம். இந்தியாவில் பெருநிறுவனங்கள் சுதந்திரமாக வர்த்தகம் செய்ய இதுவரை சுமார் 7000 சீர்திருத்தங்களை, தமது அரசு மேற்கொண்டுள்ளதாக மோடி அந்தக் கூட்டத்தில் கூறியிருக்கிறார். மேலும் இந்தியாவில் தொழில் செய்பவர்களின் வசதிக்காக, சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாகவும் கூறியுள்ளார். முதலாளிகளின் நல்வாழ்வுக்கான இச்சீர்திருத்தங்கள் அனைத்தும் தொழிலாளர் உரிமைப் பறிப்பு மற்றும், விவசாயிகளின் வாழ்வாதாரப் பறிப்புச் சட்ட்திருத்தங்களே என்பது குறிப்பிடத்தக்கது.

உலகப் பெருநிறுவனங்களில் முதல் 20 நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளைச் சந்தித்த மோடி

தனது டிவிட்டர் பக்கத்தில் தனது பயணத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள மோடி, முஸ்லீகளுக்கு தனது ஈத் முபாரக் வாழ்த்துக்களையும் தவறாமல் தெரிவித்துள்ளார். அவ்வாழ்த்துச் செய்தியில், இந்த மங்களகரமான நாள், சமூகத்தில் அமைதியையும், சகோதரத்துவத்தையும் நிலைநாட்டட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆறு முசுலீம் நாடுகளைச் சேர்ந்தோர் அமெரிக்காவில் வரக்கூடாது என்று உத்தரவு போட்ட டிரம்பின் தேசத்தில் மோடி தெரிவித்த ரம்ஜான் வாழ்த்தின் பொருள் என்ன?

மூன்று நாட்களுக்கு முன்பு, ஹரியானா மாநிலம், பல்லாப்கர் என்னும் ஊரைச் சேர்ந்த ஜுனைத், ஹசிம், சகிர் மூன்று சிறுவர்கள் இரம்ஜான் பண்டிகைக்காக டில்லியிலிருந்து பொருட்களை வாங்கிக் கொண்டு இரயில் ஏறி தங்களது சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இடையில் இரயிலில் ஏறிய ஒரு கும்பல், சகோதர்ரகளாகிய அம்மூவரையும், முஸ்லீம்கள் என்ற காரணத்திற்காகவே தாக்கி, அவர்களை இருக்கையில் இருந்து எழச் செய்திருக்கின்றது. எழ மறுத்த அச்சிறுவர்களின் தலைக் குல்லாய்களை கழற்றி கீழே போட்டு மிதித்தது. அச்சிறுவர்களை மாட்டுக்கறி தின்னும் தேசவிரோதிகள் எனக் கூறி, சரமாரியாக கத்தியால் குத்தியிருக்கின்றது. இதில் கடுங்காயமடைந்த ஜுனைத் சிறிது நேரத்திலேயே மரணமடைந்தார். ஹசிமும், சகிரும் காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஓடும் ரயிலில் கொல்லப்பட்ட சிறுவன் ஜூனைத்

இச்சம்பவம் குறித்து மோடியின் ட்விட்டர் பக்கம் வாய்மூடி அமைதி காக்கிறது. மோடி மட்டுமல்ல, இச்சம்பவம் நடந்த ஹரியானா மாநிலத்தின் முதல்வர் கட்டாரின் சமூக வலைத்தளப் பக்கங்களோ, வேறு எந்த ஒரு பாஜக தலைவரின் சமூக வலைத்தளங்களோ வாயே திறக்கவில்லை. அமித்ஷா, இராஜ்நாத் சிங்கும் ஒரு படி மேலே போய், பூரி ஜெகன்நாதர் கோவில் தேரோட்டத்திற்கு வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளனரே தவிர, மதத்தைக் காரணம் காட்டி சிறுவன் கொல்லப்பட்டதைக் கண்டிப்பதாக சிறு அறிக்கை கூட வெளியிடவில்லை. அப்பகுதி எம்.எல்.ஏ மட்டும் பாதிக்கப்பட்ட ஜுனைத்தின் குடும்பத்தை இரண்டு நிமிடங்களில் சந்தித்துவிட்டு கிளம்பி விட்டார்.

இச்சம்பவம் குறித்து ஆதங்கப்படும் ஜுனைத்தின் அக்கம்பக்கத்தார், ஆளும் மாநில அரசின் சார்பாகவோ, மத்திய அரசின் சார்பாகவோ யாரும் வந்து பார்க்கவில்லை. முசுலீம் என்ற காரணத்திற்காகவே கொல்லப்பட்டிருக்கும் சிறுவன் ஜுனைத்தின் கொலையைக் கண்டித்து ஒரு அறிக்கை கூட யாரும் விடவில்லை. என்று வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

மோடி ஆட்சி அமைத்த பிறகு இது போன்ற பல பத்து சம்பவங்கள் நடந்துவிட்டன. உ.பி-யில் யோகி ஆதித்யநாத் ஆட்சி அமைத்த பின்னர், அங்ளே இத்தகைய சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வழக்கமாக இது போன்று இந்துத்துவக் கும்பல்களின் கிரிமினல் நடவடிக்கைகள் நடைபெறும் மோடி அமைதி காப்பார். மோடியின் இந்த அமைதி என்பது, இத்தகைய செயல்களைத் தொடர இந்துத்துவக் கும்பல்களுக்கு வழங்கும் அங்கீகாரமே.

பிரச்சினையின் தீவிரம் தணிந்த பின்னர், ஏதாவது ஒரு பொதுக் கூட்டத்தில் இத்தகைய சம்பவங்களைக் கண்டிக்காமல் ஏதோ கொஞ்சம் பார்த்து போட்டு பேசுவார். இதுதான் மோடியின் வாடிக்கை. ஒருபுறம் நாட்டைக் கூறு போட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்றுவிட்டு, அவர்களது கொள்ளைகளுக்கு ஏற்றாற் போல் மக்களை ஒடுக்கும் பல்வேறு சட்டங்களையும், சட்ட சீர்திருத்தங்களையும் கொண்டு வருகிறார் மோடி. இதன் மூலமாக பெரும்பான்மை விவசாயிகள், தொழிலாளர்களின் வயிற்றில் அடித்து அவர்களை மரணத்தை நோக்கித் தள்ளுகிறார்.

அமெரிக்காவில் பெரும் பணத்தை கொடுத்து ஆயுதங்களை வாங்க இருக்கும் ஒப்பந்தமே மோடி பயணத்தின் நோக்கம். அமெரிக்க முதலாளிகளிடம் அவர் பேசும் கருணை முகம் மட்டுமல்ல, இந்தியாவில் முசுலீம் மக்களை ஒடுக்கும் அவரது  கொடூர முகமும் கூட உண்மையானதுதான்.

மேலும் :