Monday, April 21, 2025
முகப்புஉலகம்அமெரிக்காதெற்கு சூடான் - உள்நாட்டுப் போரில் உருகுலையும் புதிய நாடு

தெற்கு சூடான் – உள்நாட்டுப் போரில் உருகுலையும் புதிய நாடு

-

ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்குள் கிட்டத்தட்ட 30 இலட்சம் மக்கள் கடுமையான உணவுப்பற்றாக்குறையால் பாதிக்கப்படுவார்கள்

தொடர்ச்சியான உள்நாட்டுப் போரினால் தண்ணீர், உணவு கிடைக்காமல் உலகின் புதிய நாடான தெற்கு சூடானியக் குடியரசின் 50 விழுக்காட்டு மக்கள் தவிக்கின்றனர். எளிதில் தடுக்கப்பட கூடிய மலேரியா உள்ளிட்ட நோய்களால் சூடான் மண்ணின் மைந்தர்கள் செத்து மடிகின்றனர். 2016 ஆண்டில் மட்டும் மலேரியாவினால் ஆயிரத்திற்கும் அதிகமானோர் மடிந்துள்ளனர்.

ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்குள் கிட்டத்தட்ட 30 இலட்சம் மக்கள் கடுமையான உணவுப்பற்றாக்குறையால் பாதிக்கப்படுவார்கள் என்கிறது தெற்கு சூடானிய அரசின் அதிகாரபூர்வ புள்ளி விவரம். இது ஒருபுறமிருக்க, 2013 ஆண்டு டிசம்பரில் இருந்து தொடர்ச்சியாக அதிபர் சல்வா கீருக்கும் அவரது முன்னாள் துணை அதிபரான ரிக் மச்சாருக்கும் இடையே நடக்கும் அதிகாரச் சண்டையானது, தெற்கு சூடானின் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை இரத்த பலி கொண்டு வருவதுடன் இலட்சக்கணக்கான மக்களை அகதிகளாக்கியும் வருகிறது.

இந்த பிரச்சனைகளின் ஆணி வேர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களில் முடிகிறது என்பதை தெற்கு சூடானின் மீது அதன் தொடர்ச்சியான தலையீடு மெய்பிக்கிறது. கைப்புண்ணிற்கு கண்ணாடி தேவையா என்ன?

தீவிரவாதம், சமாதானம், உதவி, வாணிபம் என்று உலகெங்கிலும் அமெரிக்கா கால் பதித்த நாடுகளில் வன்முறை, படுகொலை, அரசியல் குழப்பம், ஆட்சி கவிழ்ப்பு, பலி வாங்குதல் என்பது தான் நடைமுறையாக இருக்கிறது. தெற்கு சூடான் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன?.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடான் 2011 ஆண்டு சூடானிடமிருந்து விடுதலைப் பெற்றது. இந்தப் போரில் தெற்கு சூடானிய போராளிக் குழுக்களுக்கு நிதி மற்றும் ஆயுதங்கள் வழங்கியதில் இருந்து தெற்கு சூடானை தனி நாடாக்கியது வரை எங்கும் நீக்கமற நிறைந்துள்ள அமெரிக்காவின் பங்கு வரலாற்றில் பதிந்துள்ளது.

சிறுவர்களை உள்நாட்டுப்போரில் தெற்கு சூடான் ஈடுபடுத்தியது, அமெரிக்க தேசிய நலன் சார்ந்தது

ஐ.நாவின் மனித உரிமை தீர்மானத்திற்கு எதிராக சிறுவர்களை உள்நாட்டுப்போரில் தெற்கு சூடான் ஈடுபடுத்தியதை அன்றைய ஒபாமா அரசு கண்டுகொள்ளாமல் விட்டது. அதே நேரத்தில் தனக்குப் பிடிக்காத நாடுகளுக்கு அதே காரணங்களைக் காட்டி உதவிகளை நிறுத்தியதும் அதே அமெரிக்கா தான். இந்த நிலையில் தெற்கு சூடானுக்கு கடன் தள்ளுபடி செய்யும் அமெரிக்க அரசை மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்த்தவுடன், “இது அமெரிக்காவின் தேசிய நலன் சார்ந்தது” என்று ஒபாமா அன்று சப்பைக்கட்டு கட்டினார்.

2013 ஆண்டிலிருந்து 2016 வரையிலான தெற்கு சூடானின் உள்நாட்டுப் போரை, “பிணங்களை கணக்கிட அவர்கள் அடுத்த முறை வருவார்கள்” – (Next Time They’ll Come to Count The Dead) என்ற தன்னுடைய நூலில் புகழ் பெற்ற அமெரிக்க புலனாய்வு பத்திரிக்கையாளரான நிக் துர்சே (Nick Turse) பதிவு செய்திருக்கிறார். வியட்நாம் போரின் போது அமெரிக்க இராணுவம் செய்த மனித உரிமை மீறல்களையும் இதே நிக் துர்சே பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏகாதிபத்திய வல்லூறுகளால் கொத்திக் குதறப்படுகிறது ஆப்ரிக்கா. ஆப்ரிக்க கண்டத்தின் இனக்குழு மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி அதன் இயற்கை வளங்களை கொள்ளையடிப்பது தான் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களின் உள்ளக்கிடை.

செய்தி ஆதாரம்:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க