Tuesday, April 22, 2025
முகப்புஉலகம்அமெரிக்காநீங்கள் இதைப் படித்து முடிப்பதற்குள் ஒருவர் புலம் பெயர்ந்திருப்பார் !

நீங்கள் இதைப் படித்து முடிப்பதற்குள் ஒருவர் புலம் பெயர்ந்திருப்பார் !

-

நீங்கள் இந்த வரியைப் படித்து முடிப்பதற்குள் ஒருவர் இடம் பெயர்ந்திருப்பார். ஆக்கிரமிப்பு போர், உள்நாட்டுப் போர் மற்றும் இனக்கலவரங்களால் ஒவ்வொரு 3 விநாடிக்கும் ஒரு நபர் சொந்த வீட்டை விட்டு இடம்பெயருகின்றார் என்று ஐ.நா செய்தியறிக்கை தெரிவிக்கிறது.

2016-ம் ஆண்டு முடிவில் எடுக்கப்பட்ட ஐ.நா-வின் அறிக்கையின் படி இடம் பெயர்ந்து செல்பவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 6.6 கோடியைத் தொட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையின் படி உலக அகதிகளாக 2.25 கோடி மக்களும், உள்நாட்டிலேயே 4 கோடி மக்களும் மற்றும் வெளிநாடுகளில் தஞ்சமடைவதற்காக 28 இலட்சம் மக்களும் இடம் பெயர்ந்துள்ளனர்.

அகதிகளைப் பொருத்தவரை அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் ‘கருணை’யால் அதிகபட்சமாக சிரியாவிலிருந்து மட்டும் 1.2 கோடி மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். கொலம்பியாவில் 77 இலட்சம் பேரும், ஆப்கானிஸ்தானில் 47 இலட்சம் பேரும், ஈராக்கிலிருந்து 42 இலட்சம் பேரும் சொந்த வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

2016-ம் ஆண்டு ஜூலை மாதம் தெற்கு சூடானில் அரசுக்கும், மக்கள் விடுதலை இயக்கத்திற்கும் இடையே நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை முறிவடைந்ததால் உள்நாட்டுக் கலவரம் வெடித்ததில் 7,37,400 பேர் நாட்டை விட்டு வெளியேறினர். இது ஒரு பெரிய எண்ணிக்கையாகக் கருதப்பட்டது.

ஆனால் இந்த ஆண்டு வெளிவந்துள்ள முடிவுகள் பெருத்த அதிர்ச்சியைத் தருகின்றன. போர் வெறிக்குப் பலியாகும் இளம் பிஞ்சுகள் உலகின் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் குழந்தைகளின் பங்களிப்பு 31 சதவீதம் என்ற நிலையில் 2.25 கோடி அகதிகளில் ஏறக்குறைய பாதி பேர் 18 வயதுக்குட்பட்டோர் என்கிறது ஐ.நா-வின் அறிக்கை.

வெளிநாடுகளில் தஞ்சமடையும் இளம் சிறார்களில் ஏறக்குறைய 75,000 பேர் வரை பெற்றோர்களை இழந்தவர்களாகவோ அல்லது பெற்றோரிடம் இருந்து பிரித்து விடப்பட்டவர்களாகவோ இருக்கின்றனர். சிரியாவில் தீவிரவாதிகளிடம் சிக்கி வலுக்கட்டாயமாகப் போரில் ஈடுபடுத்தப்பட்டு பின்னர் அவர்களிடமிருந்து தப்பி துருக்கியில் தஞ்சமடைந்த 16 வயது சிறுவன் தாரிக் ஐ.நா நிருபர்களிடம் கூறுகையில் “நான் வாழ்ந்த சிரியாவில் எதிர்காலம் இருண்டு விட்டது. பள்ளி, கல்லூரி மற்றும் வேலைவாய்ப்பு என்பதற்கு வாய்ப்பேயில்லை. என்னைப் போன்ற பல சிறார்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு போரில் ஈடுபடுத்தப்பட்டு மாண்டு மடிகின்றனர். எனக்குப் படிக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது”, என்கிறான். தீவிரவாதிகளைப் பற்றி கூறும் சிறுவனுக்கு ஏகாதிபத்தியங்களின் ஆட்டம் மட்டும் தெரியாமல் போய்விடுமா என்ன? ஐ.நா தரப்பு அதை எடிட் செய்திருக்கக் கூடும்.

ஏழை நாடுகளின் உள்நாட்டுப் போர்களினால் அகதிகளாக்கப் படுபவர்களில் 84 சதவீதம் பேர் ஏழை நாடுகளிலேயே தஞ்சம் புகுகின்றனர். இது மேலும் பல்வேறு இன்னல்களுக்கு வழிவகுக்கின்றது. இவர்களுக்கு முறையான வாழ்க்கை கிடைக்காவிடில் தஞ்சம் புகுகின்ற நாடுகளிலும் நிம்மதியற்ற நிலையே உருவாகும் என ஐ.நா அறிக்கை எச்சரிக்கின்றது. அப்பாவி மக்கள் போர் மற்றும் கலவரங்களால் இடம்பெயர்வது கடந்த எழுபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக அறிவிக்கிறது ஐ.நா-வின் அறிக்கை.

எனினும் ஐ.நா நிறுவனம் அமெரிக்காவின் நிதியால் சார்ந்து இயங்குகின்ற நிறுவனம். அகதிகளின் இடப்பெயர்வு குறித்து எச்சரிக்கும் ஐ.நா, அகதிகளை உருவாக்கும் ஆக்கிரமிப்பு போர்கள் குறித்தும், அந்தப் போர்களின் மூலவர்களான மேலை நாடுகள் குறித்தும் பேசுவதில்லை.

உலக நாடுகளே மூக்கில் விரலை வைக்கும் அளவுக்கு கடந்த ஜூன் 21, 2017 அன்று உலக யோகா தினத்தைக் கொண்டாடியுள்ளது இந்தியா. யோகா குறித்து உரையாற்றிய மோடி இது உலக மக்களுக்கு இந்தியா அளித்த கொடை என்று வர்ணித்தார். “யோகா மூலம் நல்லுணர்வை அடைய முடியும் எனில் மனித குலமே அதன் எண்ணங்கள் தோற்றுவிக்கும் பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். உணவுக்கு உப்பு எப்படி வெறும் ருசி மட்டுமல்லாது உடலின் நல்லுணர்வுக்கு ஆதாரமாக உள்ளதோ, வாழ்க்கைக்கு யோகா நமக்கு உள்ளது” என்று அள்ளித் தெளித்துள்ளார்.

ஆனால் அதே ஜூன் மாதம் 20-ம் தேதி உலக அகதிகள் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு அன்றைய தினம் தான் சுமார் 6.6 கோடி மக்கள் போர் மற்றும் கலவரங்களால் இடம் பெயரும் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூர், தேசிய, சர்வதேசிய ஊடகங்கள் இது போன்ற செய்திகளை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்து யோகா தினத்தை பிரம்மாண்டமாக விளம்பரம் செய்து கல்லா கட்டுவதிலும் அரசுகளிடமிருந்து சலுகைகளைப் பெறுவதிலும் மட்டுமே குறியாக இருக்கின்றன.

மேலும் படிக்க :