
இது மற்றவர்கள் தன்னை கவனிக்க வேண்டி எதையும் செய்யத் துணியும் சமூகவலைத்தளங்களின் காலம். அந்தக் கவனிப்புக்கு நிறைய போட்டிகள் புதுமைகள் இருப்பதால் புதிதாக என்ன செய்ய? வீடியோ வைரலாக வேண்டுமென்ன்றால் அந்த அதிபுதுமை சரக்கு வேண்டும். இல்லையேல் உங்களை இலட்சக்கணக்கானோர் பார்க்க வாய்ப்பில்லாமலே போய்விடும்.
ஆம். இந்த வைரல் நோயின் பொருட்டு அமெரிக்காவின் மின்னசோட்டாவைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் மோனோலிசா பெரஸ் தனது காதலனை அப்படி விபரீதமாக சுட்டுக் கொன்றுவிட்டாள். ஆனால் இது முற்றிலும் கொலையல்ல. அவளது காதலன் பெட்ரோ ரூயிஸ் தனது யூ டியூப் தளத்தில் ஒரு சாகச வீடியோ தயாரிக்க நினைத்தான்.
அந்த சாகசம் என்ன தெரியுமா? ஒரு கனமான புத்தகத்தை காதலன் தனது நெஞ்சில் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த புத்தகத்தை நோக்கி காதலி கைத்துப்பாக்கியால் சுட வேண்டும். தோட்டாவை அந்த கனமான புத்தகம் தடுத்துவிடும் என்பதால் இது சாகசம். அதை படம்பிடித்து வெளியிட்டால் யூ டியூபில் பார்வைகள் அள்ளும்.
ஒன்பது மாத கர்ப்பிணிப் பெண்ணான பெரஸ் 26.06.2017 அன்று மாலை, அவசர போலீஸ் உதவி தொலைபேசி எண் 911-க்கு அழைத்து இந்த விபத்தை தெரிவித்திருக்கிறாள். அவளது அத்தையான கிளாடியா ரூயிஸ், அந்த இளம் காதலர்கள் ஒருவருக்கொருவர் காதலித்ததையும், சட்டென ஒரு கோமாளித்தனத்தால் அனைத்தும் தவறாக முடிந்து விட்டது என்கிறார். ஒரு போதும் இது நடந்திருக்க கூடாது என்றும் வருத்தப்படுகிறார் அவர். அந்தக் காதலர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கிறது. வயிற்றில் இருப்பது இரண்டாவது குழந்தை என்பதையும் அவர் சோகத்துடன் பகிர்ந்திருக்கிறார்.
Me and Pedro are probably going to shoot one of the most dangerous videos ever?? HIS idea not MINE?
— Monalisa Perez (@MonalisaPerez5) June 26, 2017
பெரஸ் கூறியது என்னவென்றால், அவளது காதலன்தான் இப்படி ஒரு ஆலோசனையை முன் வைத்தானென்றும், அவன் கூறியது போல அந்தப் புத்தகம் தோட்டாவை தடுத்துவிடுமென்று தான் நினைத்தாளாம். இது பாதுகாப்பானதுதான் என்று அவன் கூறியதை அந்த பேதைப் பெண் நம்பினாளாம். ஆனால் தோட்டா புத்தகத்தை துளைத்துவிட்டு இதயத்தையும் நிறுத்தி விட்டது. இதை படம் பிடிப்பதற்கு அவன் இரண்டு கேமராக்களையும் ஏற்பாடு செய்து தயார் நிலையில் வைத்திருக்கிறான். அவனது நம்பிக்கை இந்த வீடியோ வைரலாகிவிடும் என்பதே.
சம்பவத்திற்கு முன்பாக டிவிட்டரில் “நானும் பெட்ரோவும் ஒரு அபாயகரமான வீடியோவை படம் பிடிக்க போகிறோம். இது அவனது யோசனை, என்னுடையதல்ல” என்று கூறியிருக்கிறாள் பெரஸ்.
பெரஸின் குற்றம் இரண்டாம் நிலைக் கொலையில் வரும் என்பதால் குற்றம் நிரூபிக்கப்படும் போது அவளுக்கு பத்தாண்டு சிறையும், பதினான்கு இலட்ச ரூபாய் அபராதமும் கிடைக்கும். தற்போது அவள் பிணையில் விடுவிக்கப்பட்டாலும் ஜூலை 5-ம் தேதியில் நீதிமன்றத்திற்கு வரவேண்டும்.
இனி அவளது வாழ்க்கை யாரும் கண்டு கொள்ள முடியாத இருட்டில் முடங்கிவிடும். அவளது பிறந்த மற்றும் பிறக்கப் போகும் குழந்தைகளின் வாழ்க்கையிலும் கவனிப்பு பெரிய அளவுக்கு இருக்காது.
காதலின் சின்னமாக போற்றப்படும் இதயத்தையே ஒரு காதலி சுட்டுவிட்டாள். சமூக வலைத்தளங்களின் காலத்தில் உலகமே ஃசெல்பியில் மற்றவர் தன்னை பார்க்க மெனக்கெடுகிறது. அதையே ஒரு அபாயகரமான ரியாலிட்டி ஷோ மூலம் கொண்டு சென்றால் அதுதான் வைரல்.
இத்தகைய அபத்தமான, முட்டாள்தனமான யோசனைகள் அமெரிக்காவில் அதிகம். அங்கே ஊடகங்கள் அனைத்தும் இத்தகைய வீடியோக்களை ஃபன்னி என்று விதவிதமாக வெளியிடுகின்றன.
முதலாளித்துவம் ஒழிக எனும் வால் வீதிப் போராட்டங்கள் வளர வளர எதற்கு இந்த உலகம் நம்மைக் கவனிக்க வேண்டும் என்று அமெரிக்க இளையோர் மாறுவர். அது வரை பெரஸ் சிறை வாழ்க்கையை கழிப்பாள் எனும் வேதனையை நாம் ஏற்கத்தான் வேண்டும்.
செய்தி ஆதாரம்: