கோவை மாவட்ட பு.மா.இ.மு அமைப்பாளர், சட்டக்கல்லூரி மாணவர் தோழர் வினோத் கைது !

கோவை அரசுக் கல்லூரி வாசலில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் ‘ புதிய மாணவன்’, என்ற பத்திரிக்கையை பு.மா.இ.மு தோழர்கள் விநியோகித்து கொண்டிருக்கும் போது காவி – மதவெறிக் கும்பலின் அடியாட்படையான போலீசு, தோழர் வினோத்தை கைது செய்துள்ளது. பா.ஜ.க-வின் வழக்கறிஞர் என்கிற அடையாளத்துடன் சுந்தரராஜன் என்பவர் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்து இருப்பதாகக் கூறுகிறது கோவை போலீசு .
மோடி அரசின் மாட்டுக்கறி தடை, பசு பாதுகாப்புப் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தி மாணவர்களிடையே பேசிக் கொண்டிருந்தனர் பு.மா.இ.மு தோழர்கள். அவர்களோடு கல்லூரி மாணவர்கள் உற்சாகமாகப் பேசிக்கொண்டும் பத்திரிகை வாங்கிக் கொண்டும் சென்றதை, கல்லூரிக்குள் இருக்கும் காவி வானரங்களின் மூலம் அறிந்து கொண்டு சுந்தரராஜன் என்கிற வழக்கறிஞர் புகார் அளிக்கிறார். மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை யார் பேசினாலும் அவர்களை தேச விரோதிகள் என்று முத்திரை குத்தி ஒடுக்குவதே பாஜக அரசின் வேலை. தமிழகத்தில் இருக்கும் அவர்களது பினாமியான எடப்பாடி அரசின் போலீசும் உள்ளூர் உதவாக்கரை பாஜக நபர்கள் புகார் கொடுத்தாலும் உடன் நடவடிக்கை எடுப்பார்கள்.
அரசுக் கல்லூரி வளாகத்தினுள் விசச்செடியாக வேர்விட்டிருக்கும் காவிவெறிக் கும்பலின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி -யின் மாணவர், ஆசிரியர், சமூக விரோதப் போக்கு கண்கூடானது . மாணவர்களிடையே மதவெறி பிரச்சாரத்தை நடத்துவதிலிருந்து, பேராசிரியர் அவமதிப்பு வரையிலும் ஒரு வெறிக் கும்பலை வளர்த்தெடுக்கிறது ஏ.பி.வி.பி. இவர்கள் இந்து – முஸ்ஸீம் மாணவர்களிடையே மோதலை தூண்டிவிடுவதாக தோழர் மீது புகார் அளித்திருப்பது அயோக்கியத்தனம்.

இப்புகாரை அப்படியே ஏற்றுக்கொண்டு காவல்துறை நான்கு தோழர்களை ஏற்றிச் செல்ல நாற்பது பேரை ஏற்றக்கூடிய வாகனத்தைக் கொண்டு வந்தது . போதாக்குறைக்கு மூன்று ஜீப்புகள் , சில சீருடை அணியாத போலீசார் என படுபயங்கர நடவடிக்கை போல மாணவர்களுக்கு பீதியூட்ட நினைத்தது போலீசு. சீருடை அணிந்த போலீசு வானகங்களை எடுத்து வருவதற்கு முன்பே சீருடை அணியாத போலீசு தோழர்களிடம் நண்பர்கள் போல பேச்சுக் கொடுத்தது. போலீசின் கெடுபிடிக்கு இடையே ‘நீங்க போலீஸ் வண்டில வரலன்னா கூட பரவால்ல. நடந்து வாங்க. சின்ன என்கொயரி தான்’ என்று தோழர்களிடம் நயவஞ்சகமாகப் பேசி வண்டியில் ஏற்றப் பார்த்தது சீருடை அணியாத போலீசு.
“சார், நாங்க சட்டப்படிதான் செய்றோம், கருத்துரிமை இருக்கு” என்று தோழர் வினோத் கூற பதிலுக்கு போலீசு “எங்ககிட்ட சட்டமா பேசுற, போலீஸ் ஸ்டேசன் வா, உனக்கு சட்டம் எங்க இருக்குதுன்னு நாங்க காட்டுறோம்” என திமிராகக் கூறியது. போலீஸின் தொடர் வற்புறுத்தலின் காரணமாக தோழர் வினோத் மட்டும் போலீஸூடன் சென்றார்.
மதியம் நீண்ட நேரமாகியும் எந்த தொடர்பும் வினோத்துடன் இல்லாமலிருக்கவே, அவரைப் பார்க்க மாலை மக்கள் அதிகாரத்தை சேர்த்த தோழர் மூர்த்தி காவல்நிலையம் சென்ற போது ரிமாண்ட் செய்திருப்பதாகக் கூறியது. புதிய மாணவன் பத்திரிக்கைகளைப் பிடுங்கிக் கொண்டு சிறையிலும் அடைத்துள்ளது.
“பா.ஜ.க-வினரின் பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் பெயரால் கோவை மாநகரம் முழுக்க மக்களின் பணத்தை ஆட்டையைப் போட்டது பற்றிய புகாரின் பேரில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? யாரெல்லாம் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்?” என மூர்த்தி கேட்க “அதையெல்லாம் நீ பேசாதே” எனக் கூறி போலீசு தனது பி.ஜே.பி விசுவாசத்தை வெளிப்படுத்தியது .
நாடெங்கும் ஆட்சியதிகாரத்தைப் பிடித்துவிட்டோம் என்கிற மமதையில் வெறியாட்டம் போட்டு வரும் பா.ஜ.கவின் கொட்டம் எல்லை மீறிப் போவதால் மட்டுமே இந்தக் கைது நடக்கவில்லை.
இருபது ஆண்டுகளாக கோவையைத் தனது சர்வாதிகாரத்தின் பிடியில் வைத்திருக்கும் காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிராகத் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டதற்கான வஞ்சம் தீர்க்கும் வழியாக இதைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது போலீசு.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது காந்திபுரம் பேருந்து நிலையத்தில் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்திய போது மாணவர்கள் – இளைஞர்களுக்கு அரணாக தோழர்கள் நின்றது, மற்றும் ஐ.ஐ.டி.-யில் சூரஜ் தாக்கப்பட்டதற்கு எதிரான போராட்டம் – அன்று இரவே சித்தாபுதூரில் டாஸ்மாக்குக்கு எதிராக மக்கள் போராட்டத்தை வீரியமாக நடத்தியது என ஏவல்துறை தோழர் மீது பாயக் காரணங்கள் ஏராளம். இவற்றிற்கிடையேதான் இந்த புகாரை போலீசு தனக்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளது.
“தோழர் என அழைத்து யாரேனும் பேசினால் தொடர்பைத் துண்டியுங்கள்” என இழிபுகழ் பேட்டியளித்த அமல் ராஜ் தலையிலான கோவைப் போலீசு, சசிகுமார் என்கிற காவிப் பொறுக்கியின் கொலைக்காக கோவையை கலவரகாடாக்க துணை புரிந்த அமல்ராஜ் துணையுடன் கோவையைத் தனது தமிழகத் தலைமையகமாக்க ஆர்.எஸ்.எஸ் தெரிவு செய்துள்ளது .
போலீசின் அடாவடியை மக்களும், மாணவர்களும், இளைஞர்களும் கண்டுணர்ந்து வருகின்றனர். பா.ஜ.கவின் தமிழின விரோதப் போக்கும் அடக்குமுறையும் அதிருப்தியை ஏற்படுத்தியள்ளது. மக்கள் எழுச்சியாக இது உருவாகும் போது காவிக்கும், போலீசுக்கும் அதன் அடாவடித்தனத்துக்கும், தொழிற்சங்கங்களின் விளைநிலமான கோவையில், தீர்ப்பு எழுதப்படும் .
முதல் தகவல் அறிக்கை நகல்:
(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்கள் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கோவை.