Saturday, April 19, 2025
முகப்புமறுகாலனியாக்கம்சிறு தொழில்கள்மோடியின் குஜராத்தில் ஜி.எஸ்.டி-ஐ எதிர்த்து சிறு - நடுத்தர வணிகர்களின் போராட்டம்

மோடியின் குஜராத்தில் ஜி.எஸ்.டி-ஐ எதிர்த்து சிறு – நடுத்தர வணிகர்களின் போராட்டம்

-

துணி வர்த்தகர்கள் ஜி.எஸ்.டி க்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்த போது போலீசார் நடத்திய தடியடி

புதிய சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை அமலாக்கப்படுவதற்கு முன்பிருந்தே இந்துத்துவத்தின் ஒரிஜினல் சோதனைச் சாலையான குஜராத் மாநிலத்தில் போராட்டங்கள் துவங்கி விட்டன. கடந்த ஜூன் 17-ம் தேதி சூரத் நகரைச் சேர்ந்த வைரப் பட்டறைகள் மற்றும் வியாபாரிகள், தீட்டப்பட்ட வைரங்களுக்கு 3 சதவீதமும் வைர வர்த்தகத்திற்கு 18 சதவீதமுமாக விதிக்கப்பட்டிருந்த வரியை எதிர்த்து கடையடைப்பு நடத்தினர்.

சூரத் நகரில் மட்டும் சுமார் 4000 வைரப் பட்டறைகளும், 5000 இடைத்தரகர்களும் 2000 வைர வியாபாரிகளும் உள்ளனர். சூரத் நகரின் வைர வர்த்தகத்தில் மட்டும் ஒவ்வொரு நாளும் சுமார் 700 கோடி அளவுக்குப் புழங்கி வருகின்றது. வைரப் பட்டறைத் தொழிலில் கடும் போட்டி நிலவுவதால், பெரும்பாலான பட்டறைகள் வெறும் ஒரு சதவீதம் அளவுக்கே லாபம் வைத்து இயங்கி வருவதாகவும், 3 சதவீத வரி விதிப்பு இத்தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு மற்றும் நடுத்தர பட்டறைகளையும் வர்த்தகர்களையும் ஒழித்துக் கட்டி விடுமென்றும், இதனால், பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகள் வேலை இழப்புக்கு ஆளாவார்கள் என்றும் தெரிவிக்கிறார் வைர வியாபாரிகளுக்கான ஜி.எஸ்.டி கமிட்டியின் உறுப்பினர் ஜெய்ராம் கலாசியா.

இந்நிலையில், வைரத் தொழிலுக்கு அடுத்து குஜராத்தில் வேலைவாய்ப்புகளுக்கான ஆதாரமாக உள்ள ஜவுளித் துறையைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சூரத் நகரில் மட்டும் சுமார் 175 மொத்த மற்றும் சில்லறை ஜவுளி சந்தைகள் உள்ளன. இச்சந்தைகளில் சுமார் 70,000 சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சூரத் நகரின் ஜவுளித் தொழிலில் மட்டும் ஒவ்வொரு நாளும் சுமார் 300 கோடி அளவுக்கு வர்த்தகம் நடந்து கொண்டிருக்கின்றது. வியாபாரிகள் தவிற, லட்சக்கணக்கான தொழிலாளிகளுக்கு இத்துறை வேலை வாய்ப்பு அளித்து வருகின்றது.

மீண்டும் ஒரு முறை பிறந்த புதிய இந்தியாவுக்கான சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறையில், ஜவுளித் துறைக்கு 5 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து ஜி.எஸ்.டி போராட்டக் குழு (GST Sangarsh Samiti) ஒன்றை அமைத்த வர்த்தகர்கள், கடந்த ஒரு வார காலமாக போராடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று சூரத் நகரில் பந்த் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே தலைமைச் சோதனைச் சாலையான குஜராத்திலேயே போராட்டங்கள் நடப்பதை மானப் பிரச்சினையாக கருதிய இந்துத்துவ கும்பல், ஒருசில கைக்கூலிகளைக் கொண்டு போட்டி அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை நீர்த்துப் போக வைக்க முயற்சித்துள்ளனர். வேலை நிறுத்த நாளன்று விரல் விட்டு எண்ணக் கூடிய கைக்கூலிகளின் வர்த்தக நிறுவனங்கள் திறந்து வைத்திருப்பதை பெருவாரியான வர்த்தகர்கள் எதிர்த்துள்ளனர். இதற்காகவே காத்திருந்த போலீசார், தடியடி நடத்தி போராடும் வியாபாரிகளில் சிலரைக் கைது செய்துள்ளனர்.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையினால் ஜவுளி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் ஒழிந்து போவார்கள் என்பதே போராடும் பிரிவினரின் கருத்து.

ஜி.எஸ்.டியை எதிர்த்து குஜராத்தில் போராடி வரும் வர்த்தகர்கள் பாரம்பரியமாகவே பாரதிய ஜனதாவின் வாக்கு வங்கி என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மோடி குஜராத் அரசியல் அரங்கில் ஒரு ஆளாவதற்கு இந்து பனியா வியாபாரிகளுக்கும் முசுலீம் வர்த்தகர்களுக்குமான போட்டியைப் பயன்படுத்திக் கொண்டதும், கலவரங்களின் மூலம் இந்து வர்த்தகர்களின் காவலனாக தன்னைக் காட்டிக் கொண்டு அவர்களை கட்சியின் புரவலர்களாக திரட்டியதும் நம் கண்முன்னே நடந்த சமீபத்திய வரலாறு. குஜராத்தில் மட்டுமின்றி நாடு முழுவதுமே கணிசமாக சிறு மற்றும் நடுத்தர வணிகர்களைத் தனது வாக்கு வங்கியாக கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக தன்னை நம்பியவர்களையே கழுத்தறுத்துள்ளது.

இதில் வியப்படைவதற்கு ஏதுமில்லை – பாடம் கற்றுக் கொள்வதற்கு நிறைய உள்ளது; குறிப்பாக தமிழர்களுக்கு. பிள்ளையார் ஊர்வலங்கள் மூலமும் சிறுபான்மையினருக்கு எதிரான பொய் பிரச்சாரங்களின் மூலமும் திரட்டப்பட்டுள்ள தமிழ் ‘இந்துக்களே’, இனியும் நீங்கள் விழித்துக் கொள்ளாவிட்டால் உங்கள் கோவணமும் வெகு விரையில் இந்துத்துவத்தால் உருவப்படும்.

செய்தி ஆதாரம்:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க