மாதம் ஒரு முறையாவது சிலை கடத்தல் குறித்த செய்திகளை நாளிதழ்களில் பார்க்காமல் இருக்க முடியாது. அவ்வப் போது சிலை கடத்தல் கும்பல் பிடிபட்டது என்றும் அவர்களிடம் இருந்து பல கோடி மதிப்புள்ள சிலைகள் கைப்பற்றப்பட்டன என்றும் செய்திகள் வெளிவருகின்றன.
அருப்புக்கோட்டை அருகே ஆலடிப்பட்டியைச் சேந்த ஆரோக்கியராஜ் என்பவர், கடந்த 2008 -ம் ஆண்டு தனது நிலத்தைத் தோண்டுகையில் பஞ்சலோகச் சிலைகளைக் கண்டெடுத்துள்ளார். அப்போது அப்பகுதியின் சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவின் ஆய்வாளராக காதர்பாட்சா என்பவரும் தலைமைக்காவலராக சுப்புராஜ் என்பவரும், பணி புரிந்தனர். இவர்கள் இருவரும் அந்த பஞ்சலோகச் சிலைகளை ஆரோக்கியராஜிடம் இருந்து பறிமுதல் செய்து, அதனை பிரபல சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் சுமார் 15 இலட்ச ரூபாய்க்கு விற்றிருக்கின்றனர்.
சமீபத்தில் சிலைக்கடத்தல் வழக்கில் தீனதயாளன் கைது செய்யப்பட்ட பின்னர், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சிலைக்கடத்தலில் ஈடுபட்டவர்களை வரிசையாகக் கைது செய்தது போலீசு. இடைக்கால கட்டத்தில் சுப்புராஜ் துணை ஆய்வாளராகவும், காதர் பாட்சா, டி.எஸ்.பியாகவும் பதவி உயர்வு பெற்றிருக்கின்றனர்.

தீனதயாளன் வழக்கை விசாரித்து வந்த சிலைக்கடத்தல் பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேலின் உத்தரவின் பெயரில் கோயம்பேடு போலீசு நிலையத்தில் துணை ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சுப்புராஜைக் கைது செய்தது போலீசு. டி.எஸ்.பி.-யாக பதவி வகிக்கும், காதர் பாட்சாவைக் கைது செய்வதற்கு முன்னரே அதிகாரவர்க்கத்தின் உதவியுடன் காதர் பாட்சா தலைமறைவாகிவிட்டார்.
இந்நிலையில் கடந்த ஜூன் 30 அன்று தமிழக அரசு வெளியிட்ட ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் மற்றும் பணி நீட்டிப்புப் பட்டியலின் படி, இவ்வழக்கைக் கையாண்டு வந்த சிலைத் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் இரயில்வே துறைக்கு மாற்றியிருக்கிறது தமிழக அரசு.

தமிழக அரசின் இப்பட்டியலில் சிலை திருட்டு வழக்கை விசாரித்த அதிகாரி பொன் மாணிக்கவேல் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதோடு, ‘குட்கா’ புகழ் டி.கே. இராஜேந்திரனுக்கு டி.ஜி.பி. பதவி வழங்கியும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலைத் தன் கையோடு எடுத்துச் சென்று உடனிருந்து மத்திய ஆட்சிப் பணியாளர்கள் தேர்வாணையத் தலைவரின் ஒப்புதலையும், தமிழக பொறுப்புக் கவர்னரின் ஒப்புதலையும் பெற்றுத் திரும்பினார், தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்.
கடவுளர் சிலைகளுக்கு மதிப்பு அதன் மேல் பக்தர்கள் கொண்ட நம்பிக்கை அல்ல, வெளிநாட்டவர்கள் செலுத்தும் பணமதிப்பே என்றான பிறகு சிலைகள் அனைத்தும் வகை தொகையில்லாமல் கடத்தப்பட்டன. இக்கடத்தலில் ஈடுபடுவோர் சாதாரண கிரிமினல்கள் அல்லர். சமூகத்தில் பெரிய மனிதர்களாக உலா வந்த பலர், அவர்களில் பலர் சாட்சாத் பட்டையும் கொட்டையும் போட்ட இந்துக்களாகவும் இருக்கின்றனர்.
மற்றொரு புறம் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதாக நம்பப்படும் காவல்துறையும் இத்திருட்டில் சம்பந்தப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கரூர் போலீசு ஹவாலா பணத்தை பறித்த கதை மறந்திருக்காது. தற்போது சிலை திருட்டு!
போலீசும் பொறுக்கிதான், கடவுளும் சிலைதான் என்பதை நீரூபித்திருக்கிறார்கள்.