
டார்வினின் பரிணாமவியல் கோட்பாடு விஞ்ஞானரீதியில் ஒரு பயனற்ற அழுகிய கோட்பாடு என்று கூறி ஒன்பதாம் வகுப்பு உயிரியல் பாடத்தில் இருந்து துருக்கி அரசு நீக்கியிருக்கிறது. ரமலான் நோன்புக்குப் பிறகு செப்டம்பரில் இருந்து நடைமுறைக்கு வரும் இந்த பாடத்திட்டத் திருத்தத்திற்கு இசுலாமிய அடிப்படைவாதியான அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் ஒப்புதல் அளித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய பாடங்களைக் கற்றுக் கொள்வதற்கு மாணவர்களுக்கு போதிய வயதில்லை என்று பாட நீக்கத்திற்கு காரணம் கூறியிருக்கிறார் துருக்கி கல்வி அமைச்சகத்தின் பாடத்திட்டக்குழு தலைவர் அல்புஸ்லன் டர்முஸ். எனவே பரிணாமவியல் கோட்பாடு இளங்கலை படிப்பு வரைக்கும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று மேலும் கூறியிருக்கிறார். என்ன இருந்தாலும் இவர்களால் டார்விணின் கோட்பாட்டை முற்றிலும் தடை செய்ய முடியவில்லை.
சவூதி அரேபியாவிற்குப் பிறகு பரிணாமவியல் கோட்பாட்டை தேசியப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியிருக்கும் இரண்டாவது நாடு துருக்கி என்று கூறுகிறார் துருக்கியின் ஆசிரியர் சங்கமான எகிடிம் சேன்னின் தலைவர் ஃபெரே அய்ட்கின் அய்டோகன். பரிணாமவியல் குறித்து 60 மணி நேரமும் டார்வினைப் பற்றி 11 மணி நேரமும் ஈரானில் கூட பாடம் எடுக்கிறார்கள் என்று மேலும் அவர் கூறினார்.
ஏக இறைவனே களிமண்ணில் இருந்து ஆதாமை படைத்ததாக இஸ்லாம் நம்புவதற்கு மாறாக ஆதாமைப் படைத்தது இயற்கைத் தேர்வே என்று டார்வின் கூறுவது இசுலாமிய அடிப்படைவாதிகளுக்கு வேப்பங்காயாக கசக்கிறது. அதனால் தான் “பரிணாமவியல் மட்டுமல்ல அனைத்து வகுப்புகளுமே [இசுலாமிய] மதம் சார்ந்தே கற்றுக் கொடுக்கப்படுகிறது” என்று அய்டோகன் கூறுகிறார். “இந்த புதியப் பாடத்திட்டம் மாணவர்களுக்கும் இந்த நாட்டின் எதிர்காலத்திற்கும் பெருங்கேட்டையே கொண்டு வரும்” என்பது அவரது வாதம்.
“துருக்கி மறுவார்ப்பு செய்யப்பட்டு வருகிறது. இதுதான் ஆபத்து. இதற்கெதிராக எங்கள் ஆசிரியர்கள் வீதியில் இறங்கிப் போராடுவார்கள். அரசின் நடவடிக்கைகளைப் பற்றி கவலையில்லை மாறாக மதச்சார்பற்ற அறிவியல் மதிப்பீடுகளின் படி வகுப்பறைகளில் மாணவர்களுக்கு அவர்கள் கல்விக் கற்றுக் கொடுப்பார்கள்” என்று அவர் மேலும் கூறினார்.
1922 ஆம் ஆண்டு இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்தில் இருந்த துருக்கியை முஸ்தபா கெமாலின் தலைமையில் சோவியத் யூனியன் உதவியுடன் துருக்கியில் தேசியப்புரட்சி நடந்தது. மதச்சார்பற்ற அறிவியல் கல்விக்கான கதவினையும் அந்தப் புரட்சி தன் குடிமக்களுக்கு திறந்து விட்டது. பரிணாமவியல் பற்றி அடிப்படை வகுப்புகளில் இருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற அழுத்தத்தையும் அது ஆழமாக விதைத்திருந்தது.
நூற்றாண்டுகளுக்குப் பிறகு அறிவியலைப் பற்றியதான துருக்கியின் இந்த நிலைப்பாடு இசுலாமிய அடிப்படைவாதிகளுக்கு மட்டுமே உரிய ஒன்றன்று. அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளிலும் கூட கிறித்தவ திருச்சபைகள் பரிணாமவில் கொள்கையை மறுத்து பேசி வருகிறது. இந்தியாவிலோ வர்ணாஸிரமும் விஷ்ணுவின் தசாவதாரமுமே பரிணாமவியல் கொள்கையாக இந்துமத அடிப்படைவாதிகள் பேசுகின்றனர்.
அறிவியலைக் கற்பதற்கு சக்தி, முயற்சி மற்றும் காலத்தை அதிகமாகச் செலவிடுவது அவசியம். மார்க்ஸ் கூறுவது போல “விஞ்ஞானத்தில் ராஜபாட்டை என்பது கிடையாது. அதன் செங்குத்தான பாதைகளில் களைப்போடு ஏறிச் செல்வதற்குத் தயங்காதவர்களுக்கு மட்டுமே அதன் பிரகாசமான சிகரங்களை எட்டுகின்ற சந்தர்ப்பம் கிடைக்கும்.” இறைவனே அனைத்தையும் படைத்தான் அவன் விதிப்படி தான் சகலமும் இயங்குகின்றன என்ற மதவாதிகளின் மூளைகள் அத்தகைய கடுமுழைப்பை நினைத்துக்கூட பார்க்க முடியாதவை.
கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியா உள்ளிட்ட மிகச்சிறிய உயிரினங்கள் ஒவ்வொரு கணமும் நுண்கூர்ப்பு (microevolution) அடைகின்றன. மிக உயரமான மலைச்சிகரங்களில் உயிர்ப்பிழைத்திருப்பதற்கான பெருங்கூர்ப்பை (macroevolution) மூவாயிரம் ஆண்டுகால போராட்டத்தினால் திபெத்திய மக்கள் பெற்றிருக்கிறார்கள். இது டார்வினின் இயற்கைத்தேர்வுக்கு மிகச்சிறந்த நிரூபணங்கள்.
உயிர்ப் பிழைத்திருப்பதற்கான ஒவ்வொரு கணமும் பரிணாமத்திற்கான நிரூபணம் என்று அறிவியல் உலகம் நிறுவிக் கொண்டிருக்கிறது. ஆனால் அறிவியல் கூற்றை ஏற்காமல் பரிணாமம் புரியவில்லை பொய்யானது என்று படைப்புவாதிகளும் அடிப்படைவாதிகளும் கூறுவது மக்களை அறியாமையில் மூழ்கடித்து மூடர்களாக அடிக்கவே என்பது தெள்ளத் தெளிவு.
செய்தி ஆதாரம்:
- Passions flare as Turkey excludes evolution from textbooks
- Identifying Signatures of Natural Selection in Tibetan and Andean Populations Using Dense Genome Scan Data
- Ten Major Court Cases about Evolution and Creationis
_________________________________________
இந்தக் கட்டுரை பிடித்திருக்கிறதா?