Monday, April 21, 2025
முகப்புசெய்திடாஸ்மாக் - கள்ளச்சாராயத்தை தடை செய்த பென்னாகரம் பெண்கள் !

டாஸ்மாக் – கள்ளச்சாராயத்தை தடை செய்த பென்னாகரம் பெண்கள் !

-

நல்லச்சாராயமோ, கள்ளச்சாராயமோ? மது ஒழிப்புத்துறையால் ஒழிக்கமுடியாது! மது ஒழிப்பு பெண்கள் குழுவால்தான் ஒழிக்கமுடியும்! பென்னாகரம் பெண்கள் போராட்டம் !

தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்ற உச்சநீதி மன்றத் தீர்ப்பை அடுத்து ஊருக்குள் சாராயக்கடையைத் திறந்து ஊரையே சீரழிக்கும் வேலையை தமிழக அரசு செய்து  வருகிறது. அதோடு ஏற்கனவே கள்ளச்சாராயம் விற்றவர்களும் போலீசுசின் நல்லாசியோடு சாராய விற்பனை எந்த விதத்திலும் பாதிக்காமல் செய்து வருகிறனர். அது தான்  தருமபுரி  மாவட்டம்  பென்னாகரத்தில்  நடந்து வருகின்றது.

பென்னாகரத்தில் அண்ணாநகர். அண்ணாநகர் காலணி, சமத்துவபுரம் ஆகிய கிராமங்களில் கடந்த ஒரு மாதகாலமாக அதே ஊரை சார்ந்த 10 பேர் டாஸ்மாக் சரக்ககை விற்று வந்தனர். அப்பகுதியைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல, அருகாமையில் இருப்பவர்களும் என, எந்நேரமும் குடிப்பதற்கு கூட்டம் அலைமோதும். இதனால் பெண்கள் கடைவீதிக்கோ, பள்ளிக்கோ சென்றுவரமுடியாது.

அதோடு அந்த கிராமங்களில் 100-க்கு 90 ஆண்கள் குடிப்பவர்கள் என்பதால் அந்த குடும்பத்தை சார்ந்த பெண்கள் நிம்மதி இழந்து, வருவாயயை இழந்து அடுத்த வேளை சாப்பாட்டிற்கே அல்லல்படும் நிலையில் தான் உள்ளனர். இவற்றை தடுக்க வேண்டிய  காவல்துறை குறைந்தது ஒரு நாளைக்கு 6,7 முறை அந்த ஊரில் ஏதோ பதட்டம் நிலவுவதை போல சுற்றி வருவார்கள். இவர்கள் வருவது சாராயத்தை தடுப்பதற்காக அல்ல, மாமூல் வாங்குவதற்காக.

அப்பகுதி போலீசிடம் போனால் சாராயத்தை ஒழிக்க முடியாது என்பதால் பெண்கள் காவல்துறையிடம் செல்லாமல், அப்பகுதியில் உள்ள மக்கள் அதிகாரம் தோழர்களை சந்தித்து இதனை உடனடியாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கூறினர்.

அந்த வகையில் 06.07.2017 அன்று 200 -க்கும் மேற்பட்ட பெண்கள் சாதி பேதம் பார்க்காமல் ஒன்று சேர்ந்தால்தான் சாராயத்தை ஒழித்துக்கட்ட முடியும் என்று அவர்களுக்குள்ளே பேசி ஒன்று திரண்டனர். சாராயம் விற்பவர்களை சந்திந்து இன்று மாலைக்குள் சாராய விற்பனையை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் நாங்களே உடைத்து விடுவோம் என்று எச்சரிக்கை விட்டனர்.

அடுத்தநாள் 07.07.2017 அன்று  மது ஒழிப்பு பெண்கள் குழு சார்பாக பேனர் வைத்தபிறகு, இனிமேல் யாருக்காவது துணிச்சல் இருத்து சாராயம் விற்றால் இக்குழுவே திரண்டு துடைப்பம், விளக்கமாறால் விரட்டி அடிப்போம். கள்ளச்சாராயம்மோ, நல்லச்சாராயமோ? எதுவாக இருந்தாலும் இனிமேல்  எங்கள் ஊருக்குள் விடமாட்டோம். என்று எச்சரிக்கை விடுத்த அடுத்த கணமே அக்கும்பல் அலறி அடித்து சரக்கை அள்ளிக்கொண்டு சென்றுவிட்டனர்.

மது ஒழிப்புத்துறையையோ, காவல் துறையையோ நம்பாமல் மது ஒழிப்பு பெண்கள் குழுவை கட்டி பெண்கள் அதிகாரத்தை எடுத்தால்தான் சாராயத்தை விரட்டியிடிக்க முடியும் என்பதை பென்னாகரம் பெண்கள் சாதித்ததுள்ளனர். இது போன்ற போரட்ட முறைகள் தான் தமிழ்நாட்டுக்கு இன்றைய தேவையாக இருக்கிறது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

-பு.ஜ  செய்தியாளர், பென்னாகரம்.