சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் நாளுக்கு நாள் அதிகமாக பரவிக்கொண்டே வருகிறது. இதனை தடுக்க வேண்டிய அரசோ, பெங்களூரு சசிகலா வீடியோ பிரச்சினையை சமாளிக்க சென்று விட்டது. சென்னையை பொறுத்த வரையில் மெட்ரோ ரயில், பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டி விட்டு அதனை முறையாக மூடாமல் விடுகிறார்கள். மழைக்காலங்களில் அதிக அளவிலான கொசுக்கள் உற்பத்தியாகி நோய்களை பரப்புகின்றன.
அதே போல், “காடுகள் அழிக்கப்படுவதால் அங்கு இருக்கும் கொசுக்கள் மக்கள் வாழும்” பகுதிகளுக்கு வந்து விடுவதாக 2016 -ம் ஆண்டு இந்திய மருத்துவ ஆராய்சிக் கவுன்சில் நடத்திய ஆய்வில் தெரிவித்திருக்கிறார்கள். கிராமங்களின் வளர்ச்சியின்மை, தண்ணீர் பற்றாக்குறையை போக்க நீரைப் பாதுகாப்பின்றி சேமித்து வைப்பது உள்ளிட்டவை “நோய்களை பரப்பும் கொசுக்களின் வளர்ச்சிக்கு” காரணமாக உள்ளன.

கடந்த ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் உச்சகட்டத்தில் அழிவை ஏற்படுத்தியது. சுமார் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்பொழுது மீண்டும் ஒருவருக்கு டெங்கு அறிகுறி ஏற்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது பரவி வரும் காய்ச்சல் டெங்குவாக இருக்குமோ என்ற அச்சப்படுமளவு, சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என ஏராளமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘’பருவ மாற்றம் கொசு வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. துப்புரவு பணிகளும் மோசமாக உள்ளது. ஒரு கொசு கடித்தால் சகித்து கொள்ளலாம். ஒரே நேரத்தில் கொசு கூட்டமே கடிப்பதால் தாங்கி கொள்ள முடியவில்லை.’’ என்கிறார்கள்.
கடந்த 2016-ம் ஆண்டில் இந்தியாவிலேயே டெங்கு காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்ப்ட்ட இரண்டாவது மாநிலமாக தமிழ்நாடு விளங்கியது. தற்போது முதலிடத்தில் கொண்டு விடுவார்களோ தெரியவில்லை!
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக அதிகளவில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பின் காரணமாக ஈரோடு, பவானி, பெருந்துறை, அந்தியூர், கவுந்தப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி குழந்தைகள் உள்பட 16 பேர் இறந்துள்ளனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பொதுசுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறுகிறார்கள்.
ஆனால் 2017, ஜூலை 17-ம் தேதி அன்று மட்டும் 65 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 178 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 16 பேர் குழந்தைகள். நாளுக்கு நாள் காய்ச்சல் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தலா 2 வீதம் என்று மொத்தம் 6 வார்டுகள் மட்டுமே ஒதுக்கியிருந்தனர்.
திடீரென்று நோயாளிகள் எண்ணிக்கை நேற்று அதிகரித்ததால் படுக்கை வசதி இல்லாததால் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளித்த அவலமும் நடந்தேறியுள்ளது. இவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளை பரிசோதித்ததில் 16 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த மாவட்டத்தில் பவானி, அந்தியூர், கோபி, சத்தி, கொடுமுடி, பெருந்துறை உள்ளிட்ட வட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப துணை சுகாதார நிலையங்களிலும் காய்ச்சல் பாதிப்பினால் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகளில் இடமின்மை காரணமாக தனியார் மருத்துவமனைகளை நோக்கி செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதுவரை ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் சுமார் 300 பேர் வரை அதிவேகமாக பரவி வரும் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு 2,531 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். நடப்பாண்டில் மே 31-ம் தேதி வரை 3,251 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் இதுவரை டெங்கு தடுப்பிற்கான பிரத்யோக மருந்துகளோ, தடுப்பு மருந்துகளோ இல்லை. தடுப்புகளை தீவிரப்படுத்தி நோய் பரவலை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசின் ஊராக திட்டத்தின் கூடுதல் செயலர் அருண் கே.பாண்டா, மாநில சுகாதார துறைக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்தார் என்று தினமணி செய்தி வெளிட்டது. ஆனால் இதுவரை மத்திய அரசோ, மாநில அரசோ டெங்குவை ஒழிப்பதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் மோடி அரசும், தமிழக வளங்களை கொள்ளையடிப்பதிலேயே குறியாக இருக்கும் எடப்பாடி அரசும் இருக்கும் போது கொசுக்களுக்கு என்ன கவலை?
செய்தி ஆதாரம்:
- துப்புரவு பணி இல்லாததால் மழைநீரால் கொசு உற்பத்தி அதிகரிப்பு மீண்டும் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் பீதியில் குழந்தைகள், முதியோர்
- ஈரோடு அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதித்தவர்களை தரையில் படுக்க வைத்து சிகிச்சை
_____________
இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?
- உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி