பொருளாதார மற்றும் அரசியல் வார இதழ் (ஈ.பி.டபிள்யூ EPW) என்னும் ஆங்கில வார இதழ் கடந்த 1949 -ம் ஆண்டு முதல் மும்பையிலிருந்து வெளிவருகிறது. ஆரம்ப நாட்களில் பொருளாதார வார இதழ் என்ற பெயரில் இயங்கி வந்த இவ்விதழ், 1966-ம் ஆண்டு முதல் தற்போதைய பெயரில் வெளி வருகிறது. இந்தியாவின் மதிக்கத்தக்க பத்திரிக்கைகளில் ஒன்றாக அரசின் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகளின் மீதான பல்வேறு துறை சார்ந்த அறிஞர்களின் கருத்துக்களைப் வெளியிட்டு வந்தது.
கடந்த ஜனவரி மற்றும் ஜூன் (2017) மாதங்களில் அவ்விதழ் வெளியிட்டிருந்த இரண்டு கட்டுரைகள் மோடி அரசையும், அதானி குழுமத்தையும் அம்பலப்படுத்தியிருந்தன. ஜனவரி 14 அன்று வெளியிடப்பட்ட “ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்ததா அதானி குழுமம்?” என்ற கட்டுரையில், அதானி குழுமத்தின் வைர ஏற்றுமதி நிறுவனத்தின் வரி ஏய்ப்பு நடவடிக்கைகள் குறித்து எழுதியுள்ளது.
கடந்த பத்தாண்டுகளாக இந்திய அரசின் வருமானப் புலனாய்வு இயக்குனரகம், அதானி குழுமத்திடம் வரி ஏய்ப்பு குறித்து விளக்கம் கேட்டு பல முறை நோட்டீசு அனுப்பியுள்ளது. தற்போது மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், சுமார் 1000 கோடி மதிப்பிலான வரி ஏய்ப்பைக் கண்டும் காணாமல் விட்டு விட்டது. இதனைச் சுட்டிக்காட்டி ஈ.பி.டபிள்யூ.(EPW). பல்வேறு புள்ளிவிவரங்களோடு அரசின் நிதித்துறை அமைச்சருக்கும் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதித் துறை அமைச்சருக்கும் கடிதம் அனுப்பி அதனடிப்படையில் அதானியின் முறைகேட்டை அம்பலப்படுத்தி கட்டுரை எழுதி வெளியிட்டிருந்தது.
ஜூன் 24,2017 அன்று ஈ.பி.டபிள்யூ. வெளியிட்ட “அதானி குழுமத்திற்கு மோடி அரசின் ரூபாய் 500 கோடி பரிசு” என்ற கட்டுரையில் அதானி பவர் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு சுமார் 500 கோடி ரூபாய், சுங்க வரி மூலம் ஆதாயம் அடையும் வகையில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான சட்டங்களை மாற்றியுள்ளதைச் சுட்டிக் காட்டி கட்டுரை எழுதியுள்ளது.

இவ்விரு கட்டுரைகளையும் நீக்குமாறும் அவ்வாறு நீக்காவிடில் மான நட்ட வழக்கும் அவதூறு வழக்கும் தொடரப் போவதாகக் கூறி அதானி குழுமம், ஈ.பி.டபிள்யூ பத்திரிக்கை நடத்தி வரும் சமீக்ஷா நிறுவனத்திற்கும் இக்கட்டுரைகளின் ஆசிரியர்களுக்கும் வழக்கறிஞர் நோட்டீசு அனுப்பியுள்ளது. இதனைத்தொடர்ந்து சமீக்சா நிறுவனத்தின் நிர்வாகக் கூட்டம் உடனடியாக மும்பையில் கூடி விவாதித்தது. கூட்டத்திற்குப் பின்னர் அந்தக் கட்டுரைகளை இணையதளத்தில் இருந்து நீக்கிவிட்டது. அதோடு அதன் ஆசிரியர் பரண்ஜோய் குகா தாகுர்தா தனது பதவியை அன்றே இராஜினாமா செய்துள்ளார்.
அதானி குழுமத்தின் இந்த வக்கீல் நோட்டீஸ், பத்திரிக்கைகள் மற்றும் பொதுத்தளத்தில் இயங்குபவர்களை மிரட்டுவதற்கான யுக்தியாகும். பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்தும் பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்களுக்கும் எதிராக கிரிமினல் அவதூறு வழக்குத் தொடர வழி செய்யும் சட்டங்கள் இந்த ‘ஜனநாயக’ நாட்டில் இருந்து வருகிறது. கிரிமினல் அவதூறு வழக்குகள் மூலம் அதிகபட்ச தண்டனையாக சிறைத் தண்டனை வரை அளிக்க அனுமதிக்கிறது சட்டம். தண்டனை பெரிய அளவில் இல்லையென்றாலும் சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்றத்திற்கு அலைய வைத்து வெறுப்பேற்றுவது இதன் சிறப்பம்சம். ஜெயா ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் ஊடகங்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் அரசாங்கம் சார்பில் போடப்பட்டன.
சில மாதங்களுக்கு முன்பு, “தி வயர்” இணையதளத்தை மிரட்டும் வண்ணம் பெங்களூரு நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார் நாடாளுமன்ற நிலை கமிட்டியின் உறுப்பினரும், ரிபப்ளிக் தொலைக்காட்சியின் முக்கியப் பங்குதாரரும் பாஜக -வின் பிரமுகருமான இராஜீவ் சந்திரசேகர்.
இந்த அவதூறு வழக்குகள் போடுவதைத் தாண்டி திரைமறைவில் சம்பந்தப்பட்ட ஊடகங்களின் நிர்வாகத்தை மிரட்டுவதுதான் முக்கியமானது. இதன்படி தி இந்து பத்திரிகையில் இருந்து சித்தார்த் வரதராஜன் விலகியது, அவுட்லுக் ஆசிரியர் மாற்றம் ஆகியவற்றைச் சொல்லலாம். வழக்கு போடுவதை விட இந்த மிரட்டல் வழி உடனே பத்திரிகைகளின் பாதையை மாற்றும் வல்லமை கொண்டது. மோடி அரசின் பலத்தைக் கண்டு அஞ்சிய ஈபிடபிள்யூ நிர்வாகம் உடனே கட்டுரைகளை நீக்கியது அதனால்தான்.
மோடி ஆட்சியில் ஆளும் பாஜகவுக்கும் கார்ப்பரேட் கும்பலுக்கும் இடையிலான கூட்டணி வலுவடைந்திருக்கிறது. இதற்கு எதிராக குரல் கொடுப்பவர்களை, தேசதுரோகிகள் எனக் கூறி வேட்டையாடத் தொடங்கி விட்ட மோடி – கார்ப்பரேட் கும்பல், தற்போது ஊடகங்களின் மீதும் கை வைக்கத் தொடங்கி விட்டது.
செய்தி ஆதாரம் :
- Adani Group ‘SLAPP’ Pushes EPW Editor Out of His Job
- Did the Adani Group Evade Rs 1,000 Crore in Taxes?
- Modi Government’s Rs 500-Crore Bonanza to the Adani Group