இந்திய பொதுத்துறை வங்கிகளின் பெரும் பிரச்சினையாக இருப்பது வாராக்கடன்கள் தான். மக்களின் சேமிப்பையும், வரிப்பணத்தையும் மூலதனமாகக் கொண்டு இயங்கும் இப்பொதுத்துறை வங்கிகளில் வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தாமல் பெரு நிறுவனங்கள் ஏமாற்றி விடுவதால் பெருமளவில் வாராக்கடன்கள் வங்கிகளின் மீதான சுமையாய் அமைந்து விடுகின்றன.
பொது நல வழக்கு மையம் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்தது. அதில், ரூ.500 கோடிக்கு மேல் பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாத நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் பெயர்ப்பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட உத்தரவிட வேண்டும் என்று கோரியது.
இவ்வழக்கு விசாரணை கடந்த ஜூலை 17, 2017 அன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற போது, மனுதாரர் சார்பில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்கள், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி வருவதால், வாராக்கடன் குறித்த தகவல்களைக் கண்டிப்பாக வெளியிட வேண்டும் என்று வாதாடியுனார்.
இதற்குப் பதிலளித்த ரிசர்வ் வங்கி, அவ்வாறு வாராக்கடன் வைத்திருக்கும் நிறுவனங்களின் பெயர்களை வெளியிடுவது, வங்கிகளுக்கும் நிறுவனங்களுக்கு இடையிலான நம்பிக்கை சார்ந்த உறவு முறையைப் பாதிக்கும் என்பதால் அந்நிறுவனங்களின் பெயரை பொதுவெளியில் வெளியிடக் கூடாது என்று தெரிவித்துள்ளது.

மேலும், அப்பட்டியலை வெளியிடுவது, அந்நிறுவனங்களின் சட்டரீதியான, ஒப்பந்தரீதியான, நம்பிக்கை அடிப்படையிலான உரிமைகளைப் பாதிக்கும் என்றும் கூறியுள்ளது. மேலும் ஒரு படி மேலே போய், அத்தகைய செயல்கள் இந்தியாவில் வியாபாரச் சூழலைப் பாதிக்கும் என்றும், இதன் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் மேலும் அது தேசத்தின் பொருளாதார நலனைப் பாதிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கெஹர், இது குறித்து ஒரு அறிக்கை தாக்கல் செய்யுமாறு ரிசர்வ் வங்கியைக் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் இல்லாமல் இந்தப் பட்டியலை வெளியிடலாமா என்று மத்திய அரசிடம் கருத்துக் கேட்குமாறும் மத்திய அரசு வழக்கறிஞரிடம் கூறியுள்ளார். இவ்வழக்கை மேலும் 4 வாரங்களுக்குத் தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
வாராக்கடன்கள் குறித்த வழக்கு ஒன்றில் ஏற்கனவே கடந்த 2015 -ம் ஆண்டு ஒரு தீர்ப்பை வழங்கியிருந்தது உச்சநீதிமன்றம். அதில், “பொதுத்துறை வங்கிகளில் உள்ள பண மூலதனம் என்பது மக்களின் சேமிப்பு மற்றும் வரிப்பணம் என்பதைக் கருத்தில் கொண்டு வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தாதவர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிட வேண்டும் என ரிசர்வ் வங்கிக்கு ஏற்கனவே அறுவுறுத்தியிருந்தது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தாமல் குப்பையில் கடாசிவிட்டு, இன்று வரை பெரும் கார்ப்பரேட் முதலைகளின் வாராக்கடன்களை வசூலிக்கவும் செய்யாமல், அவர்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவும் செய்யாமல் அவர்களைப் பாதுக்காக்கும் வேலையைத் தான் ரிசர்வ் வங்கி செய்து வருகிறது.
விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என இந்தியா முழுவதும் விவசாயிகளின் போராட்டங்கள் கொதிநிலையில் இருக்கும் போது, விவசாயக்கடன்கள் தள்ளுபடி செய்தால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கும் என அறிக்கை விட்டார் ரிசர்வ் வங்கிக் கவர்னர் உர்ஜித் பட்டேல்.
சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்களின் படி பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன்களில் 25% தொகையை 12 நிறுவனங்கள் செலுத்தாமல் ஏமாற்றியிருக்கின்றன.
இந்நிறுவனங்கள் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றிய மொத்த கடன் தொகையே சுமார் 3 இலட்சம் கோடிக்கும் அதிகம். வாங்கிய கடனை, தமது பல்வேறு தொழில்களுக்குத் திருப்பி விட்டு நட்டக் கணக்குக் காட்டும், இந்தக் கிரிமினல் நிறுவனங்களிடமிருந்து கடனைத் திரும்பப் பெறாமல் அவர்களைப் பாதுகாத்துக் கொண்டு, அவர்களின் பெயரைக் கூட வெளியிடாமல் பாதுகாக்கிறது ரிசர்வ் வங்கி.
ஆனால், வறட்சியாலும், அரசாங்கத்தின் வேளாண் பொருட்கள் இறக்குமதி சட்டத்தாலும், விளை பொருளுக்கு போதுமான விலை நிர்ணயிக்கப்படாததாலும் பாதிக்கப்படும் கோடிக்கணக்கான விவசாயிகள் இரத்து செய்யக் கோரும் மொத்தக் கடனுமே இரண்டு இலட்சம் கோடிகளைக் கூடத் தாண்டாது.
கார்ப்பரேட் சேவை செய்யும் மோடி அரசிற்கு பல கோடி விவசாயிகளின் நலனை விட வெகு சில கார்ப்பரேட் முதலாளிகளின் நலனே முக்கியமானது என்பதற்கு அம்பானியின் செல்லப்பிள்ளையாக, மோடியின் ஆசியுடன் ரிசர்வ் வங்கி கவர்னராகப் பொறுப்பேற்றிருக்கும் உர்ஜித் பட்டேலே சாட்சி.
மேலும் :
_____________
இந்தக் கட்டுரை உங்களுக்கு பிடித்திருக்கிதா?
- உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி