
நேபாளத்தைச் சேர்ந்த துளசி ஷாஹி என்ற 18 வயது பெண் மாதவிடாய் கொட்டாரத்தில் அடைக்கப்பட்ட நிலையில் விசப்பாம்பு கடித்து இறந்திருக்கும் கொடுமை நடந்தேறியுள்ளது.
ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியின் போதும் துளசி ஷாஹி அவரது மாமாவின் பசுமாட்டுக் கொட்டகையில் அடைக்கப்படுவது வழக்கம். பாம்பு தீண்டியதற்கு பிறகு ஏழு மணி நேரம் உயிரோடிருந்தும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் உள்ளூர் மதகுருவிடம் அழைத்துச் சென்றதால் அநியாயமாக உயிரிழந்தார் துளசி.
“முறையான மருத்துவம் அளித்திருந்தால் துளசி உயிர் பிழைத்திருப்பாள். மூட நம்பிக்கையால் அவள் இறந்துவிட்டாள்” என்று அரசு சுகாதார மையத்தில் பணிபுரியும் அவரது உறவுப் பெண்ணான கமலா ஷாஹி கூறினார்.
மாதவிலக்கானப் பெண்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கும் நேபாளத்தின் இந்தக் கொடுமையான இந்துமதக் கலாச்சராம் சௌபாடி(Chhaupadi) என்று அழைக்கப்படுகிறது. கடுங்குளிர், சுட்டெரிக்கும் வெய்யில் என்று இயற்கையின் கோரப்பிடியிலும் நச்சுப்பாம்புகளின் விசப்பற்களிலும் சிக்கிக்கொள்கிறார்கள் இந்து மதம் தாயாகவும் தெய்வமாகவும் போற்றும் பெண்கள். மதத்தின் பெயரால் நடக்கும் இந்தச் சமூக கொடுமையை ஏற்றுக் கொள்ளுவதைத் தவிர வேறு வழியேதும் இல்லை நேபாள பெண்களுக்கு.
“எங்களது ஜனாதிபதியும் ஒரு பெண். மக்களவைத் தலைவரும் ஒரு பெண். எங்களது தலைமை நீதிபதியும் ஒரு பெண்ணே. இருந்தும் கொட்டடியில் விலங்குகள் போல அடைபட்டு பெண்கள் இறந்து போகிறார்கள். இது வெட்கக்கேடானது” என்று கூறுகிறார் காத்மண்டுவைச் சேர்ந்த பெண்கள் உரிமை செயற்பாட்டாளரான ராதா பாடல்.
இந்துமத மூடப்பழக்கம் தான் துளசியின் உயிரை பறித்தக் குற்றவாளி என்பது வெள்ளிடைமலை. ஆனால் யாரைத் தண்டிப்பது? துளசியின் தாய் தந்தையரா இல்லை தொன்று தொட்டு இந்தக் கொடுமையை நடத்தி வரும் பார்ப்பனிய இந்துமதத்தின் புனிதத்தையா இல்லை புனிதத்தைத் தலைமைத் தாங்கும் மதகுருமாரையா இல்லை பாம்புக்கடிக்கு மருந்தில்லாமல் செய்த நேபாள அரசமைப்பையா?
செய்தி ஆதாரம்:
_____________
இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?
- உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி