தென்னிந்தியாவில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்ற வெறி கொண்டு திரியும் பாஜகவிற்கு தமிழகமும், கேரளமும் ஒரு மிகப்பெரிய சவாலாகவே இருந்து வருகின்றன.
கேரளத்தில் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் இந்துக்களுக்கும், முசுலீம்களுக்கும் இடையே மோதலை உருவாக்கி, அங்கு தனது ஆதிக்கத்தை பரப்ப நினைக்கிறது பாஜக. இன்னொருபுறம் கேரளாவின் ஆதிக்கச் சாதியினர் மத்தியில் ஆதரவையும் பெற்று வருவதோடு கடந்த சட்டமன்றத் தேர்தலில் முதல் வெற்றியையும் பெற்றிருக்கிறது.
இந்நிலையில் ஆட்சியதிகாரத்தில் அமர்வதற்கு முன்னரே, பாஜகவின் கேரள கட்சிப் பிரிவு கும்பல் ஒன்று ஊழல் விவகாரத்தில் சிக்கியிருப்பது, பாஜகவின் ஊழல் எதிர்ப்பு யோக்கியதையை அம்பலப்படுத்துயுள்ளது.

கேரள மாநிலம், பாஜகவைச் சேர்ந்தவர் வினோத். இவர் பாஜகவின் மாநிலக் கூட்டுறவுப் பிரிவின் தலைவர். அதைப் போலவே ஷாஜி என்பவரும் பாஜகவைச் சேர்ந்தவர். ஷாஜி, வர்கலாவில் உள்ள “எஸ்.ஆர். கல்வி மற்றும் தொண்டு நிறுவனத்தின்” தலைவர். ‘கல்வித் தந்தை’யான ஷாஜி ஒரு மருத்துவக் கல்லூரியை நடத்தி வருகிறார். அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத மருத்துவக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் கழகத்திடம் இருந்து அங்கீகாரம் பெற இலஞ்சம் தருவதற்காக தனது ‘புனித’ கட்சியைச் சேர்ந்த வினோத்திடம் பணம் கொடுத்துள்ளார்.
வினோத் கொச்சியைச் சேர்ந்த ஒரு ஹவாலா பேர்வழி மூலமாக டில்லியைச் சேர்ந்த இந்திய மருத்துவக் கழகத்திற்கான பிரத்யேக புரோக்கரிடம் பணத்தைக் கொடுத்துள்ளார். இந்த புரோக்கரை இவர்களுக்கு அறிமுகப்படுத்தியது பாஜக-வின் மாநிலத் தலைவரின் தனிப்பட்ட காரியதரிசி என்று கூறப்படும் ராகேஷ் சிவராமன். இவர்களோடு மாநிலப் பொதுச் செயலாளர் எம்.டி.இரமேஷ் என்பவரும் இந்த முறைகேட்டில் முக்கியப் பங்கெடுத்திருக்கிறார்.
மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் பெற சுமார் 17 கோடி ரூபாய் பணம் செலவாகும் என்று கூறி முதல்கட்டமாக 5.6 கோடி ரூபாய் பணத்தை ஷாஜியிடமிருந்து வினோத் பெற்றுள்ளார். ஆனால் இந்திய மருத்துவக் கழகத்தின் ஆய்வின் போது தான் அந்தப் பணம் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு சேரவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்தக் கிரிமினல் கும்பலின் பணப்பரிமாற்றத்தில் ஏதோ ஒரு திருடன் பணத்தை மொத்தமாக அமுக்கியுள்ளான்.
இது குறித்து கடந்த 2017, மே மாத மத்தியில், ஷாஜி தனது ‘புனித’ பாஜக தலைமைக்கு புகார் எழுதுகிறார். இதனைத் தொடர்ந்து விசாரணைக்கு ஸ்ரீசன் மாஸ்டர் மற்றும் ஏ.கே.நசீர் ஆகிய மூத்த கட்சித் தலைவர்களின் தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்தது பாஜக. அவ்விசாரணைக் கமிட்டி இந்த முறைகேட்டில் ஈடுபட்ட 6 பேரிடம் விசாரணை செய்து, அதன் பின்னர் பாஜக தலைமைக்கு அனுப்பிய அறிக்கையில் வினோத் தான் குற்றவாளி என்றும். தனது வியாபாரம் வேறு கட்சி வேறு என்று வினோத் கூறியிருப்பதையும் குறிப்பிட்டிருந்தது.
தற்போது அந்த விசாரணைக் குழு அறிக்கை தான் தற்போது ஏசியாநெட் என்ற தொலைகாட்சி நிறுவனத்தின் கையில் சிக்கி வெளியாகியுள்ளது. இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் மும்பை பதிப்பினர், பாஜகவின் கேரள மாநில தலைவர் கும்மணம் இராஜசேகரனைத் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவரை தொடர்பு கொள்ள இயலவில்லை.
பாஜகவின் பொதுச் செயலாளர் முரளிதர ராவைத் தொடர்பு கொண்டு அவர்கள் கருத்துக் கேட்ட போது, அது பொய்க் குற்றச்சாட்டைப் போல் தெரிகிறது என்றும் இவ்வாறு நடக்க வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார்.
பாஜக-வின் உட்கட்சி விசாரணை அறிக்கையில் வினோத்தைக் குற்றவாளி எனக் குறிப்பிடும் பாஜகவினர். தகுதி இல்லாத மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்க இலஞ்சம் கொடுக்க முயன்றதைக் குற்றமாக நினைத்துக் கூட பார்க்கவில்லை. மத்தியப் பிரதேசத்தில் வியாபம் ஊழலையும், அதனை மறைக்க பல கொலைகளையும் முன்நின்று நடத்திய பாஜக, ஆர்.எஸ்.எஸ். கிரிமினல்களுக்கு மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்க இலஞ்சம் கொடுப்பது என்பதெல்லாம் மிகச்சாதாரண விசயமாகத் தான் தெரியும்.
எனினும் இந்த ஊழல் கேரள மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கப் போவதில்லை. ஏனெனில் வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலேயே கேரள பாஜக கிரிமினல்கள், பெட்ரோல் பங்குகள் ஒதுக்குவதற்கு ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி பல கோடி ரூபாய்களை இலஞ்சமாகப் பெற்று பெட்ரோல் பங்குகள் ஒதுக்குவதில் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்திருக்கின்றனர். இந்த முறைகேடு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் பாஜகவிற்கு அனுப்பப்பட்ட மூத்த தலைவர் ஒருவரின் ஆசிர்வாதத்தோடு நடந்தேறியதாகவும் தெரிவிக்கிறது கேரளாவிலிருந்து வெளிவரும் மாத்ருபூமி இணையதளம்.
தமிழகத்திலும் பாஜகவின் பங்காளியான எஸ்.ஆர்.எம் பச்சமுத்து போன்ற கல்விக் கொள்ளையர்கள் மருத்துவக் கல்லூரியில் கோடி கோடியாக கொள்ளையடித்திருப்பது மதன் கைதில் வெளியே வந்தது.
இலஞ்ச ஊழலைத் துப்புரவாகத் துடைத்தொழிக்கக் களமிறங்கியிருப்பதாகக் கூறிக் கொள்ளும் பாஜக. யோக்கியமான கட்சியாக இருந்திருந்தால் விசாரணை அறிக்கை வெளியான உடனேயே இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருந்த அனைத்துக் கிரிமினல்களையும் கைது செய்திருக்க வேண்டும். இந்திய மருத்துவக் கழகத்தைச் சுற்றி இயங்கும் மாஃபியா கும்பலைக் கைது செய்து சிறையிலடைத்திருக்க வேண்டும்.
ஆனால், மருத்துவக்கல்லூரி அங்கீகாரத்திற்காக கோடி கோடியாக இலஞ்சம் வாங்கி சொத்து குவித்த கிரிமினல் கேதான் தேசாய்க்கு குஜராத் மருத்துவக் கழக உறுப்பினர் பதவி கொடுத்து, உலக மருத்துவக் கழகத்தின் தலைவர் பதவிக்கு சிபாரிசும் செய்து அழகு பார்த்த மோடி கும்பல் அந்தக் காரியத்தைச் செய்யத் துணியுமா என்ன?
செய்தி ஆதாரம் :
- After petrol pump, Kerala BJP caught in medical college scam……
- Kerala BJP leader took bribe, promised MCI tag: party probe
_____________
இந்தப் பதிவு உங்களுக்கு பயனளித்ததா?
- உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி