“இந்திய இராணுவத்திற்கு ஒரே நேரத்தில் இரண்டரைப் போர் முனைகளில் சண்டையிடும் வலிமை உண்டு” என்கிறார் ராணுவ தளபதி பிபின் ராவட். சீனாவுடனான போரும், பாகிஸ்தானுடனான போரும் மேலே குறிப்பிடப்பட்ட “இரண்டரை” முனைகளில் அடங்கும்; மீதமுள்ள அரை முனை என்பது உள்நாட்டு சவால்கள். சீனாவுடனான எல்லைத் தகராறுகள் ஒருபுறமும், பாகிஸ்தான் தீவிரவாதிகளுடனான சச்சரவுகள் இன்னொருபுறமுமாக தேசபக்தர்கள் கடந்த சில மாதங்களாகவே மயிர்க்கூச்செறியும் உணர்ச்சிகளில் திண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய கணக்குத் தணிகைத் துறை பாராளுமன்றத்தில் சமர்பித்துள்ள அறிக்கை ஒன்று தேசபக்தர்களின் இன்பக் கனவுகளின் மேல் கோமாதாக் கழிவைக் கரைத்து ஊற்றியுள்ளது. இந்திய இராணுவத்திற்கான ஆயுதக் கொள்முதல் மற்றும் உற்பத்தி தொடர்பான மேற்படி அறிக்கையில் ஏராளமான ஊழல்களைப் பட்டியலிட்டப்பட்டுள்ளதோடு, போர்ச்சூழலில் தேவையான ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் கையிருப்பில் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
அரசால் நடத்தப்படும் ஆயுத தொழிற்சாலைகள் குழுமத்தால் உற்பத்தி செய்யப்படும் சுமார் 152 வெடி பொருட்களில் 40 சதவீதம் பத்து நாட்களுக்கே போதுமானது என்று தெரிய வந்துள்ளது. மேலும் சுமார் 55 சதவீத வெடிபொருட்களைக் கொண்டு சுமார் 20 நாள் போரை மட்டுமே சமாளிக்க முடியும் என்கிறது மத்திய தணிகைத் துறையின் அறிக்கை. மேலும் ஆயுத தொழிற்சாலைக் குழுமத்தின் ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் வெடி பொருட்களின் தரமும் படு மோசமாக உள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும் பீரங்கி போன்ற ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளுக்கான மின்காப்ப இழை (Fuze) 17 சதவீத அளவுக்கே கையிருப்பில் உள்ளதாக அறிக்கை தெரிவிக்கின்றது. எனவே கையிருப்பில் இருக்கும் பீரங்கி குண்டுகளில் 83 சதவீதம் பயன்படுத்த முடியாத அளவிலேயே உள்ளன. கையிருப்பில் உள்ள 152 வகையான வெடி பொருட்களில் முப்பத்தோரு வகையான வெடி பொருட்களே 40 நாள் வரையிலான போரைச் சமாளிக்கும் அளவில் உள்ளதாக மேற்படி அறிக்கை குறிப்பிடுகின்றது.

மேலும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (DRDO) சார்பாக சுமார் 49.50 கோடி செலவில் வான்வழி கண்காணிப்புக்காக தீட்டப்பட்ட திட்டமே கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், இத்திட்டத்திற்காக சுமார் 6.20 கோடி செலவில் வாங்கப்பட்ட பலூன்களும் பயனற்ற நிலையில் உள்ளதாக அறிக்கை தெரிவிக்கின்றது. இது தவிர சென்னை ஆவடி டாங்கு தொழிற்சாலையில் ஆயுத தயாரிப்புகளுக்காக மேற்கொள்ளப்பட்ட உதிரிபாக கொள்முதல் துவங்கி இராணுவத்தின் வெவ்வேறு மட்டங்களில் ஆயுத கொள்முதலில் நடந்துள்ள முறைகேடுகளையும் தணிகை துறையின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
கணக்குத் தணிகை அதிகாரியின் அறிக்கை குறித்து இன்று 25.07.2017 பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அருண் ஜேய்ட்லி, மேற்படி அறிக்கை முந்தைய காலகட்டத்திற்கானது என்றும், தற்போது ஆயுத மற்றும் வெடிமருந்து கொள்வனவு குறித்த நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள எதிர்கட்சிகள், ஆயுதக் கொள்வனவு குறித்த நடைமுறைச் சிக்கல்கள் கடந்த மூன்றாண்டுகளாக சரி செய்யப்படவில்லை என்றும், தற்போது சீர் செய்யப்பட்டுள்ள நிலையிலும் ஐஸ்க்ரீம் வாங்குவது போல் ஆயுதங்களை உடனடியாக வாங்கி அடுக்கி விடமுடியாது என்றும் தெரிவித்தனர். எப்படிப் பார்த்தாலும், தற்போதைய நிலையில் போதுமான ஆயுதங்கள் கையிருப்பில் இல்லை என்றே தெரிய வருகின்றது.
இந்நிலையில் பூட்டானுக்கு உதவி செய்வதான முகாந்திரத்தில் சீனாவுடனான எல்லைத் தகராறைத் துவங்கியுள்ளது மோடி அரசு. சீன அரசு தரப்பில் ஒன்று இந்தியா பின்வாங்க வேண்டும் – அல்லது, நாங்கள் இந்திய இராணுவ வீரர்களை உயிருடனோ பிணமாகவே பிடிப்போம் எனத் தெரிவித்துள்ளனர். மோடியின் உற்ற தோழனான அமெரிக்காவோ, இந்தியாவும் சீனாவும் விசயத்தைப் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என கைகழுவியுள்ளது.
இந்திய – சீன எல்லையில் நிலவும் பதற்ற நிலை போரை நோக்கிச் செல்வது இந்தியாவுக்குப் பேராபத்தை ஏற்படுத்தும் என்பது சர்வநிச்சயமாக உறுதியாகியுள்ள நிலையில், இதைக் கொண்டு அரசியல் ரீதியிலான பலன்களை அறுவடை செய்ய நினைக்கிறது பாரதிய ஜனதா. கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் பீற்றிக் கொண்ட ”வளர்ச்சி” கானல் நீராகிப் போன நிலையில், இந்தியர்களிடையே போர் பீதியையும் தேச பக்த உணர்வையும் ஒரே நேரத்தில் தூண்டி அதைக் கொண்டே எதிர் வரும் தேர்தலைச் சந்திக்க இந்துத்துவ கும்பல் திட்டமிட்டுள்ளது தெளிவாகத் தெரிகின்றது.
தனது அரசியல் சுயலாபத்துக்காக மொத்த நாட்டையும் ஆபத்தான நிலையில் தள்ளிவிட்டுள்ள இந்துத்துவ கும்பல், போர் குறித்த குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல் கருத்து தெரிவித்து வருகின்றது. “கைலாஷ், ஹிமாலயா, அவ்ர் திபெத் சீன் கி அசூரி ஷக்தி சே முக்த் ஹோ” (இதற்கு, கைலாயத்தையும், ஹிமாலயத்தையும் திபெத்தையும் சீன அரக்கனிடம் இருந்து விடுபடட்டும் என்று பொருள்) என்கிற மந்திரத்தை இந்தியர்கள் தினமும் ஐந்து முறை உச்சரிக்க வேண்டும் என்கிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்த்ரேஷ் குமார்.
இதோடு சேர்த்து இந்தியர்கள் சீனத் தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரம் செய்து வருகின்றது. இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்புகள் அனைத்தையும் திட்டமிட்டு ஒழித்துக் கட்டியதே இந்த கும்பல் தான். கடந்த தேர்தலுக்கு முன் பிரச்சாரத்தின் போது தனது தொண்டர்களுக்கு மோடியின் மூஞ்சி வடிவிலான முகமூடிகளை கோடிக்கணக்கில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்தது பாரதிய ஜனதா.
குஜராத்தில் மோடியின் கனவாக உருவாகி வரும் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலைக்குத் தேவையான் இரும்பைக் கூட சீனாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளனர். இத்தனைக்கும் சீனப் பொருட்களைத் தடை செய்யும் அதிகாரமும் பாரதிய ஜனதாவிடமே உள்ளது. பாரதிய ஜனதாவுக்கு மோடியின் முகமூடிகளையும் சர்தார் பட்டேலின் சிலைக்கு இரும்பையும் விற்ற லாபத்தில் எத்தனை சதவீதம் சீன இராணுவத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது என்கிற விவரம் நமக்குத் தெரியாது.
ஆனால், மொத்த நாட்டையும் மாபெரும் போர் அபாயத்தில் தள்ளி விட்டுள்ள இந்துத்துவ கும்பலை விரட்டியடிக்காத வரை மக்களுக்கு எந்த நிம்மதியும் இல்லை என்பது மட்டும் நிச்சயமாகத் தெரியும்.
செய்தி ஆதாரம் :
- Around 40 percent of ammunition types used by Indian Army will run out in 10 days, says CAG report
- Chant this mantra 5 times before prayers to block Chinese goods: RSS
- Withdraw, capture or get killed: Ex-Chinese diplomat’s 3 options on Doklam
- Statue of Unity to be ‘made in China’, Gujarat govt says it’s contractor’s call
_______________________
இந்த செய்தி உங்களுக்கு பயணளிக்கும் வகையில் உள்ளதா!
உழைக்கும் மக்களின் இணையக் குரலான வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி