மத்திய உள்விவகாரத்துறை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர், கடந்த 2017 ஜூலை 25-ம் தேதியன்று பாராளுமன்றத்தில் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார். அதில் கடந்த 3 ஆண்டுகளில் நடைபெற்ற வகுப்புவாத மற்றும் இனவாதக் கலவரங்கள் குறித்த புள்ளிவிவரக் கணக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை கிட்டத்தட்ட மோடி அரசின் மூன்றாண்டு ‘சாதனைகளின்’ ஒப்புதல் வாக்குமூலமாக அமைந்துள்ளது.
தேசிய குற்றப் பதிவுத்துறை (NCRB) வெளியிட்டுள்ள தகவல்களின் படியே அந்த அறிக்கை உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதாலும், அதை மத்திய அமைச்சரே பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாலும் அந்தப் புள்ளிவிவரங்களை மோடியின் பக்தாள்கள் யாரும் சந்தேகப்பட முடியாது.
அந்த அறிக்கையின் படி நாடு முழுவதும் நடைபெற்றுள்ள வகுப்புவாத, இனவாத, வன்முறைகள் மற்றும் குற்றங்களின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 41% உயர்ந்துள்ளது. அதாவது கடந்த 2014- ம் ஆண்டு நடைபெற்ற இனவாத, வகுப்புவாத வன்முறைகளின் மொத்த எண்ணிக்கை 336. ஆனால் அதுவே கடந்த 2016 -ம் ஆண்டில் 475-ஆக உயர்ந்திருக்கிறது.

யூனியன் பிரதேசங்களைத் தவிர்த்து, மாநிலங்களில் மட்டும் பார்த்தால் சுமார் 49% வகுப்புவாத, இனவாத வன்முறைகள் அதிகரித்துள்ளன. மோடி ஆட்சியில் அமர்ந்த பின்னர் உத்தரப் பிரதேசத்தில் 2014 -ம் ஆண்டு நடைபெற்றதை விட 2016 -ம் ஆண்டில் 346% -மும், உத்திரகாண்டில் 450% -மும், மத்தியப் பிரதேசத்தில் 420% -மும், ஹரியானாவில் 433% -மும் அதிகரித்துள்ளன. வகுப்புவாத, இனவாத வன்முறைகள் எதையும் 2014 -ல் சந்தித்திராத பீஹார், 2016 -ம் ஆண்டில் எட்டு வன்முறைச் சம்பவங்களைச் சந்தித்திருக்கிறது.
இந்தப் புள்ளிவிவரக் கணக்கில் இ.பி.கோ 153ஏ, 153பி ஆகிய பிரிவுகளின் படி பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மாட்டுக்கறி மற்றும் மாடுகள் விற்பனை தொடர்பாக நடத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் புள்ளி விவரங்களையும் இணைத்துப் பார்த்தால், பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களிலும், வகுப்புவாத வன்முறைகளின் அதிகரிப்பு விகிதம் 1000% -க்கும் மேலானதாகவே இருக்கும்.
இது குறித்து மேலும் கூறுகையில் போலீசு மற்றும் பொது அமைதி காப்பது என்பது இந்திய அரசியல் சாசன சட்டத்தின் 7 -வது தொகுப்பின் கீழ் மாநிலங்கள் சார்ந்த விவகாரங்களாகும். எனவே இவற்றிற்கு மத்திய அரசு பொறுப்பேற்க முடியாது என்று கூறியிருக்கிறார் அஹிர்.
இத்தகைய கலவரங்களில் பாஜகவின் பங்கை இருட்டடிப்புச் செய்யும் பொருட்டு மட்டும் தான் இவர்களுக்கு இந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மாநிலங்களுக்கான உரிமைகள், கடமைகள் எல்லாம், ஞாபகத்திற்கு வந்திருக்கின்றன. நீட் தேர்வு முறையிலும், ஜி.எஸ்.டி வரி முறையிலும் அரசியல் சாசனச் சட்டத்தின் மாநில உரிமைகள் குறித்த வழிகாட்டுதல்களைக் குப்பைத் தொட்டியில் கடாசி விட்டனர் போலும்.
அமைச்சர் குறிப்பிடுவது போல் இவையாவும் மாநில அரசின் பொறுப்பில் தான் வரும் என்பது உண்மைதான். ஆனால் வகுப்புவாத, இனவாதக் கலவரங்களைத் தூண்டிவிடும் கிரிமினல்கள் யார் என்பதும், மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் அந்தக் கிரிமினல்கள் எப்படியெல்லாம் தங்கு தடையின்றி ஆட்டம் போட்டனர் என்பதும் தான் கேள்வி.
இந்தியா முழுவதிலும் ஆர்.எஸ்.எஸ். பாஜக கும்பல் வகுப்புவாதக் கலவரங்களைத் தூண்டி, அதற்குப் பலியான பல இலட்சக்கணக்கானோரின் பிணக்குவியலின் மீது ஏறி தான் ஆட்சியதிகாரத்தில் அமர்ந்தது என்பதும் உலகறிந்த உண்மையே. அதற்கு அத்வானியின் ரதயாத்திரை தொடங்கி சஹரான்பூர் கலவரம் வரை எண்ணற்ற உதாரணங்களைக் கொடுக்க முடியும்.
செய்தி ஆதாரம் :
_____________
இந்த செய்தி உங்களுக்கு பயணளிக்கும் வகையில் உள்ளதா!
இந்துமதவெறி பாசிசத்திற்கு எதிராக குரல் கொடுக்கும்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி