அமித்ஷாவின் சொத்து மதிப்பு கடந்த ஐந்தாண்டுகளில் முன்னூறு சதவீதம் அதிகரித்துள்ள விவரம், சமீபத்தில் அவர் மாநிலங்களவை வேட்பாளராக மனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து வெளியானது.
மேற்படி செய்தியில் எவருக்கும் ஆச்சர்யம் இருக்கப் போவதில்லை; ஓரிரு மாநிலங்களைத் தவிற நாடெங்கும் பரவலான மாநிலங்களிலும். மத்தியிலும் ஆட்சியில் இருக்கும் கட்சியின் தலைவருடைய சொத்து மதிப்பு அதிகரிக்கவில்லை என்றால் தான் ஆச்சர்யம். எனினும், அமித்ஷாவின் சொத்து மதிப்பு குறித்த இந்தச் செய்திக்கு வெளியே சில செய்திகள் இருக்கின்றன.

மாநிலங்களவை உறுப்பினருக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்ற பின், அவற்றில் வேட்பாளர்கள் தாக்கல் செய்திருந்த விவரங்களின் அடிப்படையில் அமித்ஷாவின் சொத்து மதிப்பு குறித்தும், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கல்வித் தகுதி குறித்தும் வெளியான “புதிய தகவல்களை” டைம்ஸ் நௌ, டி.என்.ஏ உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் வெளியிட்டிருந்தன. செய்தி வெளியாகிச் சில மணி நேரங்களிலேயே இந்த நிறுவனங்கள் வாசகர்களுக்கு எந்த விளக்கமும் சொல்லாமல் தாம் வெளியிட்ட செய்தியை கமுக்கமாக திரும்பப் பெற்றுள்ளன.
ஸ்மிருதி இரானியைப் பொருத்தவரை, கடந்த 2004-ம் ஆண்டு மக்களவை வேட்பாளாராக போட்டியிட்ட போது தாக்கல் செய்த வேட்பு மனுவில் தான் தில்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ படித்திருந்ததாக பதிவு செய்திருந்தார். பின்னர் 2014 -ம் ஆண்டு நடந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலில் அதே தில்லி பல்கலைக்கழகத்தில் பி.காம் படித்திருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு தனது கல்வித் தகுதி குறித்து முன்னுக்குப் பின் முரணாக குறிப்பிட்டிருந்த ஸ்மிருதி இரானி, மோடியின் அமைச்சரவையில் கல்வித் துறைக்கான அமைச்சராக முதலில் நியமிக்கப்பட்டார். தனது கல்வித் தகுதியிலேயே தில்லுமுல்லு செய்தவர் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து, காங்கிரசு, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்கட்சிகளும், சமூக செயல்பாட்டாளர்களும் குரல் எழுப்பி வந்தனர்.

கல்வி அமைச்சரின் கல்வித் தகுதி குறித்து தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரங்களைக் கேட்ட போதும், தில்லி பல்கலைக்கழகம் மேற்படி விவரங்களை அளிக்க மறுத்து வந்தது. இந்நிலையில் தற்போது வேட்புமனு தாக்கல் செய்துள்ள ஸ்மிருதி இரானி, அந்த வேட்புமனுவில் தான் இன்னமும் பி.காம் படிப்பை முடிக்கவில்லையென குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.
மேற்படி செய்தி டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் இருந்து மட்டுமின்றி, அக்குழுமத்தைச் சேர்ந்த பிற பத்திரிகைகளின் இணையதளங்களிலும் வெளியான பின் அழிக்கப்பட்டுள்ளது. ஈ.பி.டபிள்யு பத்திரிகையில் அதானி குழுமத்துக்கு முறைகேடாக வழங்கப்பட்ட பலநூறு கோடி வரிச்சலுகைகள் குறித்த புலனாய்வுச் செய்தியின் ஆசிரியரான பரஞ்சோய் தாக்கூர்த்தாவை மிரட்டலின் மூலம் நீக்கியதாகட்டும், தற்போது ஊடகங்களில் வெளியாகும் செய்திகளைத் தணிகை செய்வதாகட்டும் – இவற்றிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய செய்தி ஒன்றுள்ளது.
நாடெங்கும் மெல்ல மெல்ல அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை ஒன்றை மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு நடைமுறைப்படுத்தி வருவதையே இச்செய்திகள் உணர்த்துகின்றன.
மேலும் :
_____________
இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?
பாஜக ஆர்.எஸ்.எஸ். கும்பலை அம்பலப்படுத்தும் உழைக்கும் மக்களின் இணையக் குரலான வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி