Tuesday, April 29, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.ககுட்கா ஊழல் : ஜார்ஜ், டி.கே. ராஜேந்திரனுக்கு குண்டாஸ் எப்போது ?

குட்கா ஊழல் : ஜார்ஜ், டி.கே. ராஜேந்திரனுக்கு குண்டாஸ் எப்போது ?

-

சென்னையில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதற்காக கடந்த 7 மாதத்தில் 1,919 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இனி கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.

அதன்படி சென்னையில் கஞ்சா, குட்கா, மாவா விற்பனையை முற்றிலும் தடுத்து நிறுத்த வட சென்னை கூடுதல் காவல் ஆணையர் ஜெயராமன், தென் சென்னை கூடுதல் காவல் ஆணையர் சாரங்கன் மேற்பார்வையில் 4 இணை ஆணையர்கள் 12 துணை ஆணையர்களின் கீழ் அனைத்து காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 135 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாக இருக்கும் டி.கே.இராஜேந்திரனின் உத்தரவின் பெயரிலேயே, இந்த தனிப்படை போலீஸார் சென்னையில் கஞ்சா, மாவா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்க தீவிர வேட்டையில் களத்தில் இறங்கியுள்ளனராம்.

நடப்பாண்டு ஜனவரி 1 முதல் ஜூலை 28-ம் தேதி வரை கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக 1,920 வழக்குகள் பதியப்பட்டு, 1,919 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 8,885 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் ரூ.57 லட்சத்து 84 ஆயிரத்து 371 மதிப்புள்ள 84 ஆயிரத்து 964 குட்கா பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஜூலை மாதம் 17 முதல் 28-ம் தேதி வரை மட்டும் 924 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 923 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து மட்டும் 7,912 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது கஞ்சா, குட்காவை தடையின்றி விற்பதற்கு இலஞ்சம் வாங்கிக் கொண்டு அனுமதி வழங்கிய அதிகார வர்க்கம் முழுவதும் அம்பலப்பட்டு சந்தி சிரித்த பிறகு தான் இந்த கண் துடைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது.

கஞ்சா, குட்காவை தடையின்றி விற்பதற்கு லஞ்சம் வாங்கிய குற்றவாளிகளில் காவல்துறை உயரதிகாரிகள் தான் முதன்மையானவர்கள். சென்னை முன்னாள் போலீசு கமிஷனர் ஜார்ஜ் இதுவரையில் ரூ.75 இலட்சமும், தற்போதைய சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யான  டி.கே ராஜேந்திரன் 1.4 கோடியும் இலஞ்சமாக பெற்றிருப்பதாக வருமானவரித் துறை சேகரித்த ஆவணங்கள் கூறுகின்றன.

மேலும் , சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மாதம் ரூ.14 இலட்சமும், மத்திய கலால்துறை அதிகாரிகளுக்கு மாதம் ரூ. 2 இலட்சமும், மத்திய குற்றப்பிரிவு போலீசு அதிகாரிகளுக்கு மாதம் ரூ. 3.5 இலட்சமும், வட சென்னை இணைக் கமிஷனருக்கு மாதம் ரூ.5 இலட்சமும், செங்குன்றம் உதவி கமிஷனருக்கு மாதம் ரூ.10 இலட்சமும், குடோன் இருந்த பகுதியில் உள்ள கவுன்சிலர்களுக்கு மாதம் ரூ.14 இலட்சமும், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு மாதம் ரூ. 7 இலட்சமும், போலீசு கமிஷனருக்கு மாதம் ரூ.20 இலட்சமும் இலஞ்சமாகக் கொடுக்கப்பட்டிருப்பது கடந்த ஜூலை மாதம் மேற்கண்ட ஆவணங்களில் அம்பலமானது.

கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை முற்றிலும் தடுக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்கிறார் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன். ஆனால் முக்கியக் குற்றவாளிகளான இந்த அதிகாரவர்க்கக் கும்பல் மீது இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாணவி வளர்மதி துண்டுப் பிரசுரம் கொடுத்தார் என அநியாயமாக குண்டர் சட்டத்தில் கைது செய்திருக்கும் போலீசு, தனது துறை சார்ந்த கிரிமினல்களை நியாயமாக ஏன் கைது செய்யவில்லை?

பல்வேறு வழக்குகளில் தானாக முன்வந்து (sumoto) விசாரிக்கும் நீதிமன்றம், மத்திய, மாநில அரசு நேரடியாக குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளது தெரிந்தும் அதனைப்பற்றி கண்டு கொள்ளவில்லை. தற்பொழுது திமுக  சிபிஐ விசாரணைகோரி தொடுத்திருக்கும் வழக்கு விசாரணைக்கு வந்த பிறகு மத்திய,மாநில அரசுகளுக்கு விளக்கும் கேட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது. இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிப்பது அவசியமானது என்றும் கருத்துக் கூறியுள்ளது.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராடும் பெண்களின் மண்டையை பிளக்கிறது போலீசு. கஞ்சா, குட்கா, மாவா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையை இலஞ்சம் வாங்கிக் கொண்டு அனுமதிப்பதன் மூலம் பள்ளி மாணவர்களின் வாழ்வையே சீரழிக்கிறது. போலீசு, அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்ளிட்ட இந்த அதிகார வர்க்கக் கும்பல் தான் போதை பொருட்களின் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். இந்தக் கிரிமினல் கும்பலை ஒழித்து கட்டாமல் போதையில்லா தமிழகம்  என்பது வெறும் கனவே!!

_____________

இந்த செய்திப் பதிவு உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க