Saturday, April 19, 2025
முகப்புசெய்திஆர்.எஸ்.எஸ் மாட்டு மூத்திர விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்புகள் !

ஆர்.எஸ்.எஸ் மாட்டு மூத்திர விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்புகள் !

-

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு மாடும் மனிதனும் செத்துக் கொண்டிருந்தாலும் மாட்டுச் சாணிக்கும் மூத்திரத்திற்கும் உலக அளவில் பெருமை கிடைத்துக் கொண்டு தான் இருக்கிறது. பஞ்சகவ்யத்தின் மகத்துவத்தை வெளிக் கொணர இந்தியாவின் முன்னிலை ஆய்வு நிறுவனங்களிடம் இருந்து கிட்டத்தட்ட 50 திட்டங்கள் டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்திற்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி என்ன தான் சாணியில் இருக்கிறது என்று நம்மில் பெரும்பாலானோர் கருதக்கூடும். ஆனால் அது ஒரு சர்வரோக நிவாரணி என்பது ஆர்.எஸ்.எஸ். விஞ்ஞானிகளுக்கு மட்டுமே தெரிந்த பிரம்ம இரகசியம். இதோ இங்கே ஆர்.எஸ்.எஸ் மார்க்கபந்துகள் ஆய்ந்தறிந்து கூறும் சாணியின் மகத்துவங்களில் சில மட்டும்.

பதுங்கு குழி கட்டுவதற்கு :

சாணியைப் பயன்படுத்தி பதுங்கு குழு கட்டலாம் என்று சில நாட்களுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ்.-ன் அமைப்பான முஸ்லீம் இராஷ்டிரிய மஞ்சின் தலைவரான இந்திரேஷ் குமார் கூறியிருந்தார்.

பசுவின் மாமிசம் விசமாக இருந்தாலும் அதன் சாணி மிகவும் பயனுள்ளது. ஏற்கனவே சிமிட்டிக்கு பதிலாக சாணியை வைத்து வீடுகளை கட்டும் போது பதுங்கு குழிகளையும் கட்ட முடியும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

ஆனால் இவரது அறிவுரையை இராணுவம் கேட்கிறதா  என்பது நமக்குத் தெரியாது !

இயற்கை அழகைப் பெறுவதற்கு :

பசுவதைக்கு மரண தண்டனை நிறைவேற்ற வலியுறுத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போபாலில் பாரதீய பசு கிரந்தி மஞ்ச் என்ற இந்து அமைப்பு ஒரு பேரணியை நடத்தியது. பகவான் கிருஷ்ணர் தனது 120 வயதிலும் கூட 12 வயது தோற்றத்தில் இருந்ததற்குக் காரணம் அவர் பசு சாணியிலான சோப்பை பயன்படுத்தியது தான் என்று அதில் பேசிய ஒருவர் கூறினார். இதைத் தொடர்ந்து மும்பையில் ஒரு நிறுவனம் பசுமாட்டுச் சாணி மற்றும் மூத்திரத்தாலான சோப்பு, எண்ணெய், நறுமணப் பொருட்கள், பற்பசை, சேவிங் கிரீம் ஆகிய பொருட்களை விற்கச் சென்றது.

கதிரியக்கத்தில் இருந்து உங்களை பாதுகாப்பதற்கு :

ஆர்.எஸ்.எஸ் கிளை அமைப்பான அகில பாரதிய கௌ சேவாவின் உறுப்பினரான 76 வயது ஷங்கர் லால் சாணியைக் கைப்பேசியின் பின்புறத்தில் தடவி இதைக் கண்டறிந்ததாகக் கூறியிருக்கிறார். “இது புதிய மாட்டுச் சாணம்; கைப்பேசியின் கதிரியக்கத்திலிருந்து என்னைப் பாதுகாக்க இதை வைத்துள்ளேன். இது வேலை செய்கிறது; என்னை நம்புங்கள்” என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

“பசுமாட்டுச் சாணி புற்றுநோயைத் தீர்க்குமானால் ஏன் கதிரியக்கத்திலிருந்து நம்மைக் காக்காது?” அவரது கருத்தை நியாயப்படுத்தக் கூடிய காரணத்தையும் அவர் சொல்லத்தான் செய்தார். அதே நேரத்தில் பசுமாட்டுச் சாணி புற்றுநோயைத் தீர்ப்பதை நீங்கள் அறிந்திருக்காவிட்டால் இழப்பு உங்களுக்குதான்.

ஆனால் ஒன்றை ஞாபகத்தில் வையுங்கள். கண்டிப்பாக சுதேசிப் பசுவினுடையதாக தான் அந்த சாணம் இருக்கவேண்டுமே ஒழிய ஜெர்சி மற்றும் ஹால்ஸ்டின் போன்ற விதேசி மாடுகளுடையதாக இருக்கக்கூடாது என்று அவர் எச்சரித்திருக்கிறார்.

சளி மற்றும் இருமலைத் தீர்ப்பதற்கு :

பசுமாட்டுச் சாணியில் விட்டமின் B இருப்பதால் சளி மற்றும் இருமல் பிரச்சினைகளை அதனால் தீர்க்க முடியும் என்கிறார் இராஜஸ்தான் கல்வி அமைச்சர் வாசுதேவ் தேவ்நானி. விட்டமின் B குறைப்பாட்டினால் ஏற்படும் நரம்புமண்டல பாதிப்பு மற்றும் தூக்கமின்மைக்கு பசுமாட்டுச் சாணி ஒன்றே தீர்வு என்று மேலும் கூறி இருக்கிறார்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு :

இயல்பான மகப்பேறுக்கு சாணியையும் மூத்திரப்பசையையும் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் கிளை அமைப்பான அகில பாரதிய கௌ சேவாவின் தலைவர் வலியுறுத்தியிருக்கிறார். கதிரியக்கத்திலிருந்து சாணி நம்மைப் பாதுகாக்கும் என்று ஏற்கனவே கூறிய நமது திருவாளரும் இவரே.

பிணத்தை எரிப்பதற்கு :

கொல்கத்தா நகராட்சிக்கு ஆர்.எஸ்.எஸ் கிளை அமைப்பான கௌ சேவா பரிவார் புதிய ஆலோசனை ஒன்றை வைத்திருந்தது. அரசு எரிமேடைகளில் விறகுக்குப் பதிலாகச் சாணி வறட்டிகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதே அது.

“சாணி வறட்டிகளில் ஈரப்பதம் 5% க்கும் குறைவாக இருப்பதால் காற்று மாசுப்பாடு குறைவாக இருக்குமாம். அதே சமயத்தில் விறகில் ஈரப்பதம் 20% இருப்பதால் அதிக மாசுக்களை வெளிப்படுத்துகிறது” என்று அதன் தலைவர் லலித் அகர்வால் கூறியுள்ளார்.

செய்தி ஆதாரம் :

_____________

இந்தப் பதிவு உங்களுக்கு பயனளித்ததா?

வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி