Monday, April 21, 2025
முகப்புஉலகம்இதர நாடுகள்ஹானியின் கண்கள் வடித்த கவிதை - புகைப்படக் கட்டுரை

ஹானியின் கண்கள் வடித்த கவிதை – புகைப்படக் கட்டுரை

-

லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கில் உள்ள ஒரு அகதிகள் முகாமில்தான் முதன் முறையாக புகைப்படக்கலையை ஹானி அல்-மோலியா கற்றுக் கொண்டார். அவர் அங்கு வருவதற்கு சிலகாலம் முன்னர் தான் பள்ளி மேற்படிப்பை முடித்திருந்தார். உயர்படிப்பு படிப்பதற்காக அவர் ஏங்கினார். ஆனால் அவரது ஏக்கங்களைத் தாங்கிக் கொள்ளுமளவிற்கு அவர் தங்கியிருந்த அந்த சிறிய அகதிகள் முகாமிற்கு வலுவில்லை.பெக்காப் பள்ளத்தாக்கில் மூன்று ஆண்டுகளாக அவரது பெற்றோருடனும் உடன்பிறப்புகளுடனும் தங்கியிருந்தார் ஹானி. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் பயிற்சிப்பட்டறையில் அவருக்கு ஒரு புகைப்படக்கருவி கொடுக்கப்பட்டது. விரைவில் முகாம்களின் புகைப்படக்காரராகி விட்டார்.

ஹானியினுடைய புகைப்படம் சொல்லாத செய்தி ஒன்றும் இருக்கிறது. ஹானியால் 10 அடிக்கும் அப்பாலுள்ள எதையும் பார்க்க முடியாது. அவரது புகைப்படங்களுக்கு வேண்டுமென்றால் அகதிகளின் அவலத்தைக் காட்டும் அனைத்து நிறங்களும் இருக்கலாம் ஆனால் அவரது கண்களுக்கு இல்லை.

சிரியாவிற்கு ஒருநாள் மீண்டும் திரும்ப அவர் ஏங்குகிறார். “நான் ஒரு சிறந்த சிரியாவை மனதில் இருத்தியிருக்கிறேன். எனது தலைமுறையினரின் பெரும்பான்மையினரும் அப்படித்தான் என்று நான் நம்புகிறேன். ஆனால் நான் விரும்பும் சிரியாவை பெறுவதற்கு நீண்ட காலம் பிடிக்கும்” என்று கூறுகிறார். “எங்களால் சிரியாவை உண்மையில் பாதுகாக்க முடியவில்லை. எங்களால் இப்போது சிரியாவில் இருக்கவும் முடியவில்லை. ஆனால் எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அதைக் கட்டி எழுப்புவதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

உறவுகளைத் தவிர அனைத்தையும் இழந்து விட்ட ஒரு குடும்பத்தின் கதையை ஹானியுடைய புகைப்படங்கள் கூறுகின்றன. இங்கே ஹானி அவர்களுடைய நீண்டப் பயணத்தையும் அவர்களின் புதியத் தொடக்கத்தையும் விளக்குகிறார்.

லெபனானில் நான் எடுத்தப் புகைப்படங்களில் இது ஒன்றே என் நினைவில் இருக்கிறது. நாங்கள் சிரியாவை விட்டுத் தப்பி வந்த ஆண்டில் தான் எனது இளைய சகோதரன் அஷ்ரப் பிறந்தான். இந்த உலகத்திற்கு வந்தவுடன் அவனது பெரும்பாலான உரிமைகளை இழந்து விட்டான். அவனால் சிரியாவை நினைவில் கொள்ள இயலவில்லை – ஒரு அகதிகள் முகாமில் பிறந்ததாகவே நினைக்கிறான். அவன் இப்படி இருக்க வேண்டியன் அல்ல என்பதை இந்தப் புகைப்படத்தின் மூலம் சொல்ல விரும்பினேன்.

என்னுடைய மாமா ஈத்தும்,உறவினர்களும் அப்போது வந்த ஒரு குடும்பத்திற்கு கூடாரம் அமைக்க உதவி செய்கிறார்கள். எங்களது முகாம் கிட்டத்தட்ட 30 கூடாரங்களால் ஆனது. சிரியாவில் இரண்டுத் தெருக்களில் நாங்கள் வசித்து வந்ததால் முகாமில் இருப்பவர்கள் அனைவரையும் எனக்குத் தெரியும். எனவே ஒவ்வொரு புதிய வருகையும் எங்களுக்கு உறவினராகவோ அல்லது நெருக்கமானவரோ தான் இருப்பர். உதவி செய்வது தான் ஒன்றாக வாழ்வதற்கான இன்றியமையாத யுத்தி.

அகதிகள் முகாமில் மறுசுழற்சி முறை என்பதே கிடையாது. அதனால் அனைத்துக் குப்பைகளையும் எரித்தோம். சில நேரங்களில் இந்த தீயானது மிகவும் ஆபத்தானதாக இருக்கும். முகாமில் வாழ்வது புதிய வாழ்க்கை முறையை அறிமுகப்படுத்துகிறது. நாங்கள் ஒன்று அல்லது இரண்டு கிலோமீட்டர் தொலைவிலிருந்து கேலன் மூலமாக தண்ணீர் கொண்டு வருவோம். தண்ணீரையு பார்த்து தான் செலவு செய்ய வேண்டும். நீங்கள் உண்மையில் அதிகமாக துவைக்க மாட்டீர்கள். இந்த புதிய நிலைமைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியதாக இருந்தது.

முடி வெட்டிக் கொள்வது என்பது இப்படித்தான். நான்கைந்து பேர்களாகச் சேர்ந்த பின்னர் முடி வெட்டுவதற்கு இந்த முகாமில் வசிக்காத இவரை அழைப்போம். இவர் கூடாரத்திற்கு வெளியே தான் இதை செய்வார். அப்படி இல்லையெனில் கூடாரத்தைப் பெருக்குவது பிறகு சிக்கலாகி விடும்

பள்ளியும் இல்லை பகல் பொழுதைக் கழிப்பதற்கு அவர்களுக்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் முகாமில் இருக்கும் குழந்தைகள் எப்பொழுதும் தங்களுக்குள்ளே பொழுது போக்கவும் மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்கவும் வழிகளைக் கண்டு பிடிக்கிறார்கள். இந்த முகாம் மக்களை ஒன்று சேர்த்திருக்கிறது என்று நான் நம்புகிறேன். ஏனெனில் அனைத்தையும் மக்கள் இழந்து விட்ட பிறகு ஒன்றாக இருப்பது தான் இன்றியமையாத ஒன்று.

இந்த இரட்டையர் எனது அம்மாவின் மருமகன்கள். இவர்கள் முகாமில் பிறந்தார்கள் இன்னும் அங்கேயே இருக்கிறார்கள். அவர்களுக்கு இப்பொழுது இரண்டு வயதிருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

இந்தப் பெண் எங்களது உறவினர்களில் ஒருவர். இந்த மாதிரியான முக பாவனையை நான் அவரிடம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நான் புகைப்படக்கருவியை அவரிடம் காட்டியபோது, “நீ புகைப்படம் எடுக்க விரும்பினால் இது போல தான் நான் இருப்பேன்” என்று அவர் கூறினார். அனைவரும் ஒன்றாக இருப்பதில் மகிழ்ச்சியாக இருப்பதையும், ஒரு முகாமில் வாழ வேண்டிய சூழலிலும் கூட புன்னகைப் புரிய வேண்டியது அவசியம் என்பதை உறுதி செய்ய விரும்பினார். கடந்த ஆண்டில் அவர் இந்த முகாமில் காலமானார். எங்களை விட்டு அவர் பிரிவதற்கு முன்பே இந்தப் புகைப்படத்தை எடுத்ததற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்தப் புகைப்படத்தை ஒரு முகாமிற்கு அருகே எடுத்தேன். ஒரு குளிர்பதனபெட்டி அல்லது துவைக்கும் இயந்திரத்தில் இருந்து இந்த நாயின் வீட்டை அதன் உரிமையாளர்கள் கட்டியிருக்கக் கூடும். அதனிடம் சில ரொட்டித்துண்டுகள் உள்ளன. எனவே அதன் உரிமையாளர்கள் அதனை நன்கு கவனித்துக் கொள்வதை நீங்கள் பார்க்க முடியும். செல்லப்பிராணிகளை மக்கள் நன்கு பார்த்துக் கொள்வதை அதாவது அவற்றை அவர்கள் குடும்ப உறுப்பினர்களாக கருதுவதை இதுக் காட்டுகிறது. இது பொதுவாக மத்தியக்கிழக்கில் இல்லாதது. உண்மை என்னவென்றால் முகாமில் நடக்கும் இது எங்களது மனிதத்தன்மையையும் இன்னும் நாங்கள் பிற உயிரினங்களின் பால் அக்கறைக் கொண்டிருக்கிறோம் என்பதையும் காட்டுகிறது.

இந்தப் புகைப்படத்தை எடுப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தது. ஏனெனில் நான் நெருப்பிற்கு வெகு அருகில் இருக்க வேண்டியதாய் இருந்தது. ஆனால் உண்மையில் அதை நான் மிகவும் விரும்பி எடுத்தேன். ஏனெனில் அர்த்தங்கள் பல அதில் இருந்தன. சற்று முன்னதாக இந்த பெண் உண்மையில் அவரது வீட்டை இழந்து விட்டதாக கூறியிருந்தார். இந்த கோணத்தில் புகைப்படம் எடுத்ததன் மூலம் உள்ளுக்குள்ளே எரிந்துக் கொண்டிருப்பதை உங்களுக்கு எடுத்துக்காட்ட நான் விரும்பினேன். அப்படித்தான் அவர் எண்ணியதாக நான் உணர்ந்தேன்.

நாங்கள் 2015 ஜூன் மாதத்தில் கனடாவிற்கு பயணித்தோம். சாஸ்கட்சுவான் எங்களுக்குப் பழக்கமில்லை. ஆனால் நான் அதுக் குறித்து இணையத்தில் சிறிது ஆய்வு செய்தேன். பருவநிலை உண்மையில் நம்ப முடியாததாக இருந்தது – குளிர்காலத்தில் உண்மையிலேயே கடுங்குளிராக இருக்கிறது. இந்த புகைப்படம் 2016 பிப்ரவரி மாதத்தில் எனது சகோதரர் ஒருவர் பனிச்சறுக்கு விளையாடிய போது எடுத்த ஒன்று. கனடியர்களின் கேளிக்கைகளைக் கற்றுக்கொள்வது ஆர்வமாக இருந்தது. இது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.

இந்தப் புகைப்படம் ரெஜினாவில் இருக்கும் இந்த வாஸ்கனாப் பூங்காவில் எடுக்கப்பட்டது. நாங்கள் அனைவரும் ஒன்றாக நிற்கிறோம். பத்திரமாக இருக்கிறோம். குடும்ப உறுப்பினர் ஒருவர் காணாமல் போவது சிரிய மக்களுக்கு ஒன்றும் வியப்பல்ல. அதனால் நாங்கள் இங்கே ஒன்றாக இருப்பதுக் குறித்து நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். எதிர்காலத்திற்கும் இது எங்களுக்கு உதவும். கனடாவிற்கு வருவது மிகவும் சவாலாக இருந்தது. புதிய வாழ்க்கைச் சூழலுக்கு நாங்கள் பழக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட விதம்: என்னுடையத் தந்தையிடம் நான் கண்ணாடியைக் கொடுத்தேன். ஆனால் நான் அதை எடுத்தது என்னுடைய அம்மாவுக்குத் தெரியாது. கனடாவில் எங்களது நிகழ்காலத்திற்கும் அகதிகள் முகாமின் கடந்த காலத்திற்கும் இடையே இருக்கும் ஒரு பிரதிபலிப்பைக் காட்ட நான் முயற்சித்தேன். லெபனானில் இருக்கும் உறவினர்களிடம் தொலைப்பேசியில் பலமணி நேரம் என்னுடைய அம்மா செலவிட்டார். கண்ணாடியில் புன்னகைத்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் தீவிரமான சிந்தனையில் இருக்கும் என்னுடைய அப்பா பொறுப்பான குடும்பத் தலைவராக இருக்க முயற்சி செய்கிறார். புதிய புவியியல் மற்றும் வாழ்க்கை முறைகளால் அதிகாரம் உள்ளிட்ட பலவற்றை இழந்து கொண்டிருக்கும் எனது தந்தையைப் பார்க்க மிகவும் சிரமமாக இருந்தது. சிரியாவில் அவர் தான் குடும்பத்தின் செலவினங்களுக்குப் பொறுப்பேற்றார். கனடாவில் இருப்பது அவருக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. ஏனெனில் அவர் இன்னும் வேலை செய்யவில்லை.

இது ரெஜினாவில் இருக்கும் எங்களது வீட்டுக் சாளரத்தில் இருந்து வெளியேப் பார்க்கும் அஸ்ரபின் புகைப்படம். முகாமில் இருந்ததற்கு மாறாக அஸ்ரப் தற்போது நம்பிக்கையுடன் அவனது எதிர்காலத்தைப் பார்க்கிறான். அவனதுக் கண்களின் என்னால் அதைக் காண முடிகிறது. தற்போது அவனுக்கு 6 வயதாகிறது. துருத்துருவென்று குறும்பு செய்பவனாக இருக்கிறான். அவன் விளையாட விரும்புகிறான். அவனது குழந்தைப் பருவத்தை மீட்டெடுக்க விரும்புகிறான்.

நன்றி : ALJAZEERA

_____________

இந்த மொழிபெயர்ப்பு படக்கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி