
சட்டீஸ்கர் மாநிலத்திலுள்ள தாண்டேவாடாவிலிருந்து 25 கிமீ தொலைவில் உள்ளது பல்னர். இங்கு மத்திய ரிசர்வ் போலீசு படையின் (சி.ஆர்.பி.எஃப்.) முகாம் ஒன்று அமைந்துள்ளது.
இங்கு, கடந்த ஜூலை 31 அன்று அங்குள்ள பெண்கள் பள்ளியில் “ரக்ஷா பந்தன்” தினத்தை இராணுவ வீரர்களுடன் அம்மாணவிகள் கொண்டாடுவதாக ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது தனியார் தொலைகாட்சி நிறுவனம் ஒன்று. இத்தொலைக்காட்சி கடந்த 9 ஆண்டுகளாக இப்படியான ‘ரக்ஷா பந்தனை’ அப்பள்ளியில் கொண்டாடி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் 500 மாணவிகள் கலந்து கொண்டனர்.
அந்நிகழ்ச்சி முடிந்த பின்னர், பள்ளி விடுதியில் கழிவறைக்குச் சென்றுவிட்டு வெளிவந்த இரு மாணவிகளிடம், வெளியே நின்று கொண்டிருந்த இரண்டு மத்திய ரிசர்வ் போலீசார் சோதனை நடத்துவதாகக் கூறி அவர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டனர். அவர்களிடமிருந்து தப்பியோடிய அம்மாணவிகள் தங்கள் விடுதி காப்பாளரிடம் முறையிட்டுள்ளனர். விடுதிக் காப்பாளர் இது குறித்து பள்ளியின் மூத்த நிர்வாக அதிகாரியிடம் முறையிட்டும் அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர் விடுதிக் காப்பளர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இந்திய தண்டனைச் சட்டம் பகுதி 354-ன் கீழ் முதல் தகவல் அறிக்கை, ’அடையாளம் தெரியாத’ இரண்டு சி.ஆர்.பி.எஃப். போலீசார் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹிமான்சுகுமார் என்ற மனித உரிமைச் செயற்பாட்டாளரின் முயற்சி காரணமாகவே இச்சம்பவம் தற்போது வெளியே வந்துள்ளது. இது குறித்து ஹிமான்சுகுமார் கூறுகையில் ”அப்பெண்கள் விடுதியில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் தான் மத்திய ரிசர்வ் போலீசு முகாம் அமைந்துள்ளது. சமீப காலங்களில் அவ்விடுதி மாணவிகளுக்குத் தொடர்ச்சியாக சி.ஆர்.பி.எஃப். அலுவலர்கள் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்” என்றார்
வழக்கம் போல இந்தக் குற்றச்சாட்டுக்கும், ஒரு கமிட்டியை ஏற்பாடு செய்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது சட்டீஸ்கர் அரசு. ஆனால் இதற்கு முன்னர் இது போன்று அமைக்கப்பட்ட எந்தக் கமிட்டியின் அறிக்கையும் மத்திய ரிசர்வ் போலீசுப் படையின் குற்றங்களைத் தண்டித்ததில்லை என்பது தான் வரலாறு. தற்போது ஒரு ரிசர்வ் போலீஸ் சிப்பாயை போலிசார் கைது செய்திருக்கின்றனர். மற்றொருவரை தேடி வருகின்றனர். இதற்கு மேல் இந்த பிரச்சினை மற்றுமொரு செய்தியாக உறைந்து விடும்.
மத்திய இந்தியாவில் குவிந்து கிடக்கும் கனிம வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளி வழங்க அங்கிருக்கும் பழங்குடியின மக்களை விரட்டியடிக்கும் பணிக்காகவே அங்கு சி.ஆர்.பி.எஃப். போலீசு குவிக்கப்பட்டுள்ளது.
மாவோயிஸ்ட்டுகள் என்ற பெயரில், போலி மோதல் கொலைகளில் அப்பாவிகளைக் கொன்று குவிப்பது, அப்பகுதி வாழ் பழங்குடியினப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது உள்ளிட்ட பல்வேறு அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகிறது மத்திய ரிசர்வ் போலீசு. இந்த போலீசைத்தான் மாபெரும் தேசபக்தர்கள் என கார்ப்பரேட் ஊடகங்கள் காட்டுகின்றன.
“ரக்சா பந்தன்” எனப்படும் பண்டிகையின் பொருள் என்ன? பெண்கள் தமது “மானம், கற்பு” இதர பாதுகாப்புகளுக்கு நீயே காப்பு என ஆண்களுக்கு கையில் கயிறு கட்டுவார்கள். இது பார்ப்பனியம் உருவாக்கிய பெண்ணடிமைத்தனத்தினை புனிதப்படுத்தும் ஒரு விழா. தற்போது அவர்களே சொல்லிக் கொள்ளும் சகோதரத்துவத்தின் இலட்சணத்தைத்தான் மத்திய ரிசர்வ் போலீசார் போட்டுடைத்துள்ளனர்.
மத்திய ரிசர்வ போலீசார் எங்கெல்லாம் முகாம் அமைத்துள்ளார்களோ அங்குள்ள மக்கள் பெண்களைக் காப்பதற்கு சுயமாக பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும். இல்லையேல் பெண்களுக்கு மட்டுமல்ல மக்களுக்கே பாதுகாப்பில்லை.
செய்தி ஆதாரம்:
- Chhattisgarh: Two CRPF personnel accused of molesting schoolgirls in Dantewada, cops launch probe
- CRPF Jawans in Chhattisgarh Allegedly Molest Schoolgirls at Raksha Bandhan Event
போலீசு – அதிகாரவர்க்கத்தின் அராஜகங்களை அம்பலப்படுத்தும்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி