Tuesday, April 22, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்போலி பான் அட்டைகள் ஒழிக்க ஆதார் - நவீன மூட்டைபூச்சி மிசின்

போலி பான் அட்டைகள் ஒழிக்க ஆதார் – நவீன மூட்டைபூச்சி மிசின்

-

பான் அட்டைகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் போலி மற்றும் பதிலி (Duplicate) பான் அட்டைகளை ஒழித்து விட முடியும் என்பது அரசின் வியாக்கியானம். இதற்காகவே உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளையும் மீறி பான் அட்டைகளோடு ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமெனவும், வருமான வரித் தாக்கல் செய்யவதற்கு இது அவசியம் எனவும் மத்திய அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.

அரசின் இந்நடவடிக்கையை எதிர்த்து சிலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஏற்கனவே ஆதார் எண் பெற்றவர்கள் தங்களது பான் அட்டையை உடனடியாக ஆதாருடன் இணைக்க வேண்டும் எனவும், ஆதார் எண் பெறாதவர்கள் இணைக்கத் தேவையில்லை எனவும் “நியாயமாக” கட்டப்பஞ்சாயத்து செய்து வைத்தது. மேற்படி தீர்ப்பு வந்த போது மொத்த மக்கள் தொகையான 127 கோடி பேரில் சுமார் 112 கோடி மக்கள் ஆதார் எண் பெற்றிருந்தனர்; 25 கோடி பேர் பான் அட்டைகள் வைத்திருந்தனர். “பூ விழுந்தால் ஆதாருக்கு வெற்றி, தலை விழுந்தால் மக்களுக்குத் தோல்வி” என்றும் மேற்படி தீர்ப்பை புரிந்து கொள்ளலாம்.

இந்நிலையில் கடந்த 2017 ஆகஸ்ட், 6-ம் தேதி மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் காங்வார், மத்திய அரசு சுமார் 11.44 லட்சம் போலி மற்றும் பான் அட்டைகளை ஒழித்திருப்பதாக தனது எழுத்து மூலமான பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினர் ஹுசைன் தல்வாய் எழுப்பியிருந்த கேள்விகளில் “ஆதாருடன் பான் அட்டைகளை இணைப்பதன் நோக்கம் என்ன?” என்கிற கேள்விக்கும் அமைச்சர் பதிலளித்திருந்தார். ஆதார் எண் உயிரியளவு (Biometric) விவரங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டிருப்பதால், ஆதாருடன் பான் அட்டையை இணைக்கும் போது பதிலி பான் அட்டைகளை கண்டுபிடிப்பது எளிது என்று அமைச்சர் தனது பதிலில் குறிப்பிட்டிருந்தார்.

ஆக, அமைச்சரின் எழுத்துப்பூர்வமான பதிலின் படி 11.44 லட்சம் பதிலி பான் அட்டைகளை மோடி அரசு கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளது.

உண்மையில் 14.8.2007 அன்று அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம் பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே சுமார் 11.43 லட்சம் பதிலி பான் அட்டைகளை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். அதன் பின் பத்தாண்டுகள் கடந்து விட்டன. மோடி ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் ஆகி விட்டன. இத்தனை ஆண்டுகளில், பெரியளவில் பதிலி பான் அட்டைகளைக் கண்டுபிடிக்கவில்லை என்பதோடு – ஆதாருடன் பான் இணைப்பு செய்யப்பட்ட பின்னரும் ஏற்கனவே காங்கிரசு ஆட்சிக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பதிலி பான் அட்டைகளின் எண்ணிக்கையைத் தனது சாதனையாக பீற்றிக் கொண்டிருக்கிறது மோடி அரசு.

அதே போல் 25 கோடி பான் அட்டைகளில் வெறும் 1,566 போலி அட்டைகளையே கண்டுபிடிக்க முடிந்துள்ளது. இந்த “மாபெரும்” சாதனையை நிகழ்த்துவதற்குத் தான் ஆதாருடன் பான் அட்டைகளை இணைக்கும் நடவடிக்கையைத் தமது அரசு மேற்கொண்டு வருவதாக வெட்கமின்றிச் சொல்கிறார் அமைச்சர்.

உண்மையில் ஆதாருடன் பான் அட்டையை இணைப்பதற்கான நோக்கமே மக்களின் நிதிச் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காகத் தான் என்பதை பலரும் ஏற்கனவே சுட்டிக்காட்டி உள்ளனர். அதனை மறுத்து வந்த அரசு, பான் அட்டைகளில் உள்ள போலிகளை ஆதாருடன் இணைத்தவுடன் கண்டுபிடித்து விடமுடியும் என மக்களிடமும் நீதிமன்றங்களிலும் சொல்லி வந்த வியாக்கியானங்கள் இப்போது பல்லிளித்துள்ளன.

குறிப்பு : ட்விட்டரில் ஜேம்ஸ் வில்சன் எழுதிய தொடர் கீச்சின் அடிப்படையில் எழுதப்பட்ட பதிவு.
_____________

மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத் தரவும். நன்றி