Thursday, April 24, 2025
முகப்புகலைகவிதைஅடக்குமுறைக் கருவிகள் அணிவகுப்பதா சுதந்திரம் ?

அடக்குமுறைக் கருவிகள் அணிவகுப்பதா சுதந்திரம் ?

-

பெயர் சுதந்திர தினம்
அணிவகுப்பதோ
அடக்குமுறைக் கருவிகள்.

எங்களிடம்
எத்தனை துப்பாக்கி இருக்கிறது
என்று காட்டுவதா சுதந்திரம்?

எங்கள் பக்கம்
எத்தனை மக்கள் இருக்கிறார்கள்
எனக் காட்டுவதல்லவா சுதந்திரம்!

மக்களோ
உங்களை எதிர்த்து
குண்டாந்தடிக்கு முன்னாடி,
நீங்களோ
குண்டு துளைக்காத
கண்ணாடிக்கு பின்னாடி.

பன்னாட்டு
மூலதன ஆக்கிரமிப்புக்கு
பாதை அமைத்துவிட்டு
உள்நாட்டு பாதுகாப்புக்காக
உனக்கு எத்தனை படைகள் பார்!  என்றால்
நம்ப மறுத்து
வேறுபக்கம் அணிவகுக்கிறார்கள்
மக்கள்.

மீனவர் ரதத்தில்
பிணங்களின் வாடை,
கைத்தறி ரதத்தில்
நெசவின் அலறல்,
விவசாய ரதத்தில்
வெடித்த இதயங்களின்
சிதறல்…

சகிக்க முடிந்தவரால்
ரசிக்க முடியும்.
வண்டி வண்டியாய்
அலங்கரிக்கப்பட்ட பொய்களின்
அணிவகுப்பு.

மக்கள்
வேறு ஒரு அணிவகுப்பை
நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

வாழ்வுரிமை பறிக்கப்பட்ட
விவசாயிகள்
அணிவகுத்து நிற்கிறார்கள்…

தொழிலுரிமை பறிக்கப்பட்ட
சிறுகுறு தொழிலாளார்கள்
அணிவகுத்து நிற்கிறார்கள்.

கடலுரிமை பறிக்கப்பட்ட
மீனவர்கள்
அணிவகுத்து நிற்கிறார்கள்.

கல்வியுரிமை பறிக்கப்பட்ட
மாணவர்கள்
அணிவகுத்து நிற்கிறார்கள்…

கார்ப்பரேட்டே வெளியேறு
என கனன்று நிற்கும் மக்கள்முன்
மோடியின்
வெள்ளையனே வெளியேறு
பஞ்ச் டயலாக்
பஞ்சராகிக் கிடக்கிறது.

பச்சை பசேல்
பறிக்கப்பட்ட வெறுமையில்
பறக்கும் தேசியக் கொடியையும்

திண்ணப் பார்க்கிறது ஆடு, மாடு.
விளைநிலத்தை
காயப்போடும் நாட்டில்
தியேட்டரில்
தேசியகீதம் போட்டால் மட்டும்
தேசம் விளங்கிடுமா!

எங்கள் மலைகளை
விட்டு விடுங்கள்
என கதறுகிறது நியாம்கிரி.

எங்கள் மணல
விட்டு விடுங்கள்
எனக் கெஞ்சுகிறது
பாலாறு, காவிரி,

எங்கள் மண்ணை
விட்டு விடுங்கள்
என இரைஞ்சுகிறது
நெடுவாசல், கதிராமங்கலம்.

ஆதரித்து
ஒரு துண்டறிக்கை கொடுக்கவும்
சுதந்திரமில்லை,

மனிதக்கறி தின்னும்
காவிகள் உலவும் நாட்டில்
மாட்டுக்கறி திண்ணவும்
சுதந்திரமில்லை
எனது
சாப்பாட்டுத் தட்டில்
செத்துக்கிடக்குது சுதந்திரம்.

எனது
மொழிச் சுதந்திரத்தின் மீது
திணிக்கபடுகிறது சமஸ்கிருதம்
சுதந்திரமாய் வாழ முடியாதது
மட்டுமல்ல
என்னால் சுதந்திரமாக
சாகவும் முடியாது
ஆதார் இருந்தால்தான்
நான் சட்டப்படி சவம்!

விவசாயிக்கு இல்லாத சுதந்திரம்…
தொழிலாளிக்கு இல்லாத சுதந்திரம்…
சுயதொழிலுக்கு இல்லாத சுதந்திரம்…
சுயமரியாதைக்கு இல்லாத சுதந்திரம்…

மொத்தத்தில்,
சொந்த நாட்டு மக்களுக்கு
இல்லாத சுதந்திரம்
வேறு யாருக்காக?

உங்கள்
அடையாள அணிவகுப்பில்
அதையும் காட்டிவிடுங்கள்!

– துரை. சண்முகம்
_____________

இந்தக் கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி