Wednesday, April 16, 2025
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்திருவண்ணாமலை வெங்கடேசைக் கொன்ற வன்னிய சாதி வெறியர்கள் !

திருவண்ணாமலை வெங்கடேசைக் கொன்ற வன்னிய சாதி வெறியர்கள் !

-

திருவண்ணாமலை மாவட்டம் புளியரம்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற 31 வயது இளைஞர், வன்னிய சாதி வெறியர்களால் 2017 ஜூலை மாதம் 23-ம் நாளன்று அடித்துக் கொல்லப்பட்டார். சென்னையில் உள்ள பனிமலர் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வந்த வெங்கடேஷ், வார இறுதி நாளில் தனது குடும்பத்தைப் பார்க்க புளியரம்பாக்கத்திற்கு வந்திருந்த போது இக்கொடூரச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

கொல்லப்பட்ட தலித் இளைஞர் வெங்கடேஷ்

புளியரம்பாக்கத்திலிருந்து ஏழு கி.மீ. தொலைவில் உள்ளது செல்லப்பெரும்புளிமேடு. இங்கு வன்னிய சாதியினர் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். இவ்வூரைச் சேர்ந்த இராஜேசும் அவரது நண்பர் ஒருவரும், ஜூலை 23 அன்று ஒரு தலித் பெண்ணைப் பின் தொடர்ந்து தலித் மக்கள் குடியிருக்கும் காலனிப் பகுதிக்குள் வந்துள்ளனர்.

ஒரு பெண்ணைப் பின் தொடரந்து இரு இளைஞர்கள் வருவதைப் பார்த்த தலித் மக்கள் உடனடியாக அவ்விருவரையும் நிறுத்தி விசாரித்துள்ளனர். இதில் இராஜேஷின் நண்பர் அங்கிருந்து தப்பி ஓடிச் சென்றுள்ளார். செல்லப்பெரும்புளிமேடு கிராமத்திற்குச் சென்று காலனியைச் சேர்ந்தவர்கள் இராஜேசைத் தாக்குவதாகக் கூறியிருக்கிறார்.

அதே சமயத்தில் புளியரம்பாக்கத்தைச் சேர்ந்த தலித்துகள், மாலை 4:00 மணியளவில், இராஜேஷை போலீசு நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் கொடுத்த புகாருக்கு, முதல் தகவல் அறிக்கை பதிய மறுத்திருக்கிறது போலீசு. அதோடு இராஜேசை உடனடியாக விடுவித்தும் விட்டது.

இந்நிலையில் அன்று மாலை ஆறு மணியளவில், செல்லப்பெரும்புளிமேடு பகுதியைச் சேர்ந்த 36 வன்னிய சாதிவெறியர்கள், பயங்கர ஆயுதங்களோடு புளியரம்பாக்கத்துக்குள் பல்வேறு வாகனங்களில் புகுந்தனர். கண்களில் பட்ட பொருட்களையும், ஆட்களையும் வெறிகொண்டு தாக்கியிருகின்றனர்.

ஒரு வீட்டின் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை எடுத்துத் தரையில் வீசியிருக்கின்றனர். அதோடு, அங்கு நிறுத்தப்பட்டிருந்த பல்வேறு வாகனங்களை உடைத்திருக்கின்றனர். தமது உடமைகள் நொறுக்கப்படுவதைத் தடுக்க முயன்றவர்கள் அனைவரும் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டது. எங்கள் சாதிக்காரனை அடித்ததற்குப் பழிக்குப் பழிவாங்கவே இந்தத் தாக்குதல் எனக் கூறியே இத்தாக்குதலைத் தொடுத்திருக்கின்றனர் ஆதிக்க சாதி வெறியினர்.

இந்நிலையில் வெங்கடேஷின் வீட்டில் அவரது தாய், தந்தை, சகோதரி மாலதி மற்றும் அவரது சகோதரர் ஆதி கேசவன் ஆகியோர் இருந்தனர். அச்சமயத்தில் வீட்டிற்குள் புகுந்த வன்னிய சாதி வெறியர்கள், வெங்கடேசை வெளியே இழுத்துச் சென்று கடுமையாகத் தாக்கியுள்ளனர். அதனைத் தடுக்க முயன்ற அவரது தம்பி ஆதிகேசவனையும், அவரது தந்தை மற்றும் சகோதரி மாலதியையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

நடந்த சம்பவங்களுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என வெங்கடேசும் அவரது சகோதரர் ஆதிகேசவனும் கூறிய பின்னரும் அவர்களை விடாமல் தாக்கியிருக்கிறது அக்கும்பல். அதன் பின்னர் அவர்கள் இருவரையும் இழுத்துச் சென்று தங்கள் வாகனத்தில் வைத்துக் கடத்திச் சென்றது. இதனையடுத்து வெங்கடேஷ் குடும்பத்தினரும் அப்பகுதியில் குடியிருப்போரும் அப்பகுதியில் உள்ள போலீசு நிலையத்திற்குச் சென்று புகாரளித்து உடனடியாக அவர்கள் இருவரையும் மீட்டுத் தருமாறு கேட்டுக் கொண்டனர்.

மாலை சுமார் 7:30 மணிக்கு கொடுக்கப்பட்ட புகாருக்கு இரவு 8:20 மணி வரை எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் அமைதி காத்திருக்கிறது போலீசு. கடத்தப்பட்ட இருவரும் வாகனத்தில் வைத்து கட்டையால் கடுமையாகத் தாக்கப்பட்டு பின்னர் ஊருக்கு வெளிப்புறத்தில் ஒரு பகுதியில் கொண்டு வந்து போடப்பட்டிருக்கின்றனர். அருகில் உள்ள கடைக்கார்ர்கள் இதனைப் பார்த்துவிட்டு உடனடியாக அவ்விருவரையும் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். ஆனால் அதற்குள் வெங்கடேஷ் பலத்த காயத்தின் காரணமாக உயிரிழந்தார்.

போலீசு சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் தனது அண்ணனின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என்கிறார் மாலதி.  தலித் பெண்ணைப் பின்தொடர்ந்து வந்த வன்னிய சாதியைச் சேர்ந்த இராஜேசின் மீது,எந்த வழக்கும் பதியாமல் அவரை விடுவித்த போலீசு,  தலித் குடியிருப்புகளின் மீதான சாதி வெறியர்களின் தாக்குதலுக்குக் காவலாக இருந்திருக்கின்றது. இச்சம்பவம் குறித்து நியூஸ் மினிட் என்ற இணையப் பத்திரிக்கை கேள்வி கேட்ட போது 11 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டிருப்பதாகவும், மற்ற 25 பேரும் தலைமறைவாகி விட்டதாகவும் கூறியிருக்கிறது போலீசு.

வட தமிழகப் பகுதிகளில் தலை விரித்தாடும் வன்னிய சாதி வெறிக்கு துலக்கமான எடுத்துக்காட்டு இச்சம்பவம். ஒரு தலித் பெண்ணை பின் தொடர்ந்து சென்ற ஆதிக்க சாதி கிரிமினல்களைத் தடுத்த ‘குற்றத்திற்காக’ தலித்துகளின் குடியிருப்புகளுக்குள் புகுந்து அவர்களின் உடைமைகளை அழித்ததோடு மட்டுமல்லாமல் ஒரு அப்பாவியை அடித்துக் கொன்றிருக்கிறது வன்னிய சாதி வெறிக் கும்பல். வன்னிய சாதி மக்கள் அனைவரும் சாதிவெறியர்கள் இல்லை. அதே நேரம் அவர்கள் இத்தகைய சாதிவெறியர்களை தனிமைப்படுத்தாமல் இக்கொலைகளை தடுத்து நிறுத்த முடியாது. இல்லையென்றால் வட தமிழகம் எப்போதும் ஒரு பதட்டத்திலேயே இருக்கும். இதனால் பறையர் மற்றும் வன்னிய சாதி மக்கள் அனைவருமே பாதிக்கப்படுவர். தொட்டதுக்கெல்லாம் அறிக்கை விடும் பா.ம.க இது குறித்து அமைதி காப்பது இயல்பானதுதானத். தான் ஊட்டி வளர்த்த சாதிவெறியை கைவிடவில்லை என்றால் அக்கட்சி புறக்கணிக்கப்படும் நிலை வரவேண்டும்.

இளவரசன், சங்கர் எனத் தொடர்ச்சியாக பல இளைஞர்களை ஆதிக்க சாதி வெறிக்கு பலி கொடுத்திருக்கிறது  தமிழகம். அதன் தொடர்ச்சியாக இன்று வெங்கடேஷ் கொலை. மெரினா எழுச்சி, கதிராமங்கலம், நெடுவாசல், விவசாயிகள் போராட்டம் என தமிழகம் போராட்டப் பாதையில் பயணிக்கும் நேரத்தில் இத்தடைக் கற்களை அகற்றாமல் உழைக்கும் மக்களை ஒன்று திரட்டி போராட வைப்பது சிரமம்.

செய்தி ஆதாரம் :

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?
ஆதிக்க சாதி வெறிக்கெதிராக தொடர்ந்து குரல் கொடுக்கும்
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி